அந்துமணி பதில்கள்!
* எஸ், சடையப்பன், திருப்பூர்: கணவன் - மனைவிக் கிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டால், அவை, விவாகரத்து மற்றும் தற்கொலை வரை சென்று விடுகிறதே... சுமூகமாகத் தீர்ப்பது எப்படி?விட்டுக் கொடுக்கும் குணம் இன்மை தான் இதற்கு காரணம். தவறு யார் மீது இருந்தாலும், கவுரவம் பார்க்காமல், 'சாரி' கேட்பதில் தவறில்லை. இந்த நேரத்தில் கேட்கப்படும், 'சாரி'க்கு, 'கிக்' அதிகம் உண்டு. பிணைப்பை இறுக வைக்கும், 'சாரி' அது!ம.சின்னப்பொண்ணு, பசுவந்தனை: எதற்கெடுத்தாலும், 'சுள்'ன்னு எனக்கு கோபம் வருகிறதே...உங்களுக்கு, ரத்த சோகையும், நரம்பு தளர்ச்சியும் இருக்க வாய்ப்புண்டு; மருத்துவரை அணுகுவது நல்லது!ஆர்.ராமச்சந்திரன், சென்னை: நெருங்கிய நண்பன் பகையாளியாகி விட்டான்; இழந்த நட்பை திரும்பப் பெற என்ன செய்வது?தவறு உங்கள் மீது இருந்தால், சிறிதும் தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடுங்கள். நடந்ததை மறந்துவிட, பாரதியாரே அறிவுறுத்தியுள்ளார் என்பதை நண்பனிடம் கூறுங்கள். மீண்டும் நட்பு கிடைக்க வாய்ப்புண்டு!அ. கிருஷ்ணசாமி, சிதம்பரம்: எனக்கு, தினமும், 10 மணி நேரமாவது தூங்க வேண்டியுள்ளது. அதற்கு முன் எழுந்தால், உடல் வலிக்கிறது. என் வயதோ,22 தான்... இவ்வளவு நேரம் தூங்குவது கெடுதலா?இருபத்திரெண்டு வயது வாலிபனுக்கு, ஐந்து மணி நேர தூக்கமே போதும். மறைந்த பிரதமர் நேருஜி, தினமும் ஐந்து மணி நேரத்திற்கு மேல் தூங்கியது இல்லை. எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள், உருப்படுவது இல்லை.* கே.சுப்புலட்சுமி, கடலூர்: எதற்கெடுத்தாலும், விதண்டாவாதம் செய்யும், 'டீன்- - ஏஜ்' பருவத்தினரை சமாளிப்பது எப்படி?அனைத்தையும் அறியத் துடிக்கும் பருவம் இது! அதன் பொருட்டே விதண்டாவாதங்களில் இறங்குகிறனர். இது, இயற்கைக்கு முரணானது அல்ல! இந்த வயதில், அடக்கு முறையை அவர்களிடம் பிரயோகிப்பது எதிர் விளைவையே தரும். உள்ளவற்றை மறைக்காமலும், தீயவற்றை அப்பட்டமாகவும் கூறிவிட வேண்டும். அதே நேரம், உங்கள் கருத்துகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதை, அவர்கள் உணரா வண்ணம் செயல்பட வேண்டும்!பி.மணியம்மாள், ராஜபாளையம்: எனக்கு, சுற்றுலா செல்ல ஆசை; ஆனால், அது வீண் செலவு என்று பிறர் சொல்கின்றனர். என்ன செய்ய?குறுகிய மனப்பான்மை மற்றும் குறுகிய அறிவை விசாலமாக்கும் தன்மை கொண்டது சுற்றுலா... திருநெல்வேலியும், ராஜபாளையமுமே உலகம் என, எண்ணும் பலரும், புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போதுதான் வெளியுலகம் தெரிய வரும். இதனால், ஏற்படும் நன்மைகளை அனுபவமாக பின் உணர்வீர்கள். அதனால், சுற்றுலா செல்வது வீண் செலவே அல்ல!எஸ்.மகாராஜன், வத்தலக்குண்டு: முறையான, 'செக்ஸ்' அறிவை, உரிய பருவத்தில் பெற்றோரே, தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் என்ன?சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் எண்ணமும்! ஆனால், பெற்றோரே இவ்விஷயம் பற்றி முறையாக தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது தான் சோகமான விஷயம்! பள்ளிகளில், 'செக்ஸ்' கல்வியை அறிமுகம் செய்தால், இளைய சமுதாயம் சரியான பாதையில் செல்லும் என்பது உறுதி!