உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே.ஸ்ரீவித்யா, சென்னை: யார் புத்திசாலி... ஆணா, பெண்ணா?சந்தேகமே இல்லாமல், இரண்டாமவர் தான்! ஒரே நேரத்தில், ஆண், பெண் என, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம்... அக்குழந்தைகளுக்கு பேசத் துவங்கும் பருவம் வரும்போது, பெண் குழந்தை தான் முதலில் பேச ஆரம்பிக்கும்... நாம் பேசுவதை புரிந்து கொள்ளும்!ஆனால், பெண்களுக்குள்ள இந்த புத்திசாலித்தனத்தை, மீசை, தாடியுடையோர், பயன்படுத்த விடாமல் அடக்கி விடுகின்றனரே!க.மதியழகன், செங்கல்பட்டு: பதவியில் உள்ளவர்களுக்கு, படித்தவருக்கு... இக்காலத்தில் மதிப்பு யாருக்கு அதிகம்?முதலாமவருக்கு தான்! 'அதிபுத்திசாலி'யான, கூட்டுறவு அமைச்சர், ராஜு, வைகையாறு, ஆவியாகாமல் இருக்க, 'தெர்மாகோல்' பரப்பிய, 'கெட்டிக்காரர்!' நாலாவது வகுப்பில் கூட தேறாத அரசியல்வாதிகளுக்கு, நன்கு படித்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கை கட்டி, வாய் பொத்தி நிற்கின்றனரே! * செ.ஆர்த்தி, கொங்கணாபுரம், சேலம் மாவட்டம்: தமிழ், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பும், சில இந்தி மொழி பெயர்ப்பு நாடகங்களால், தமிழ் கலாசாரம் சீரழிந்து விடும் போலுள்ளதே... இதை, எப்படி தடுப்பது?அவற்றை ஏன் பார்க்கிறீர்கள்; தவிருங்கள்! பெரிய செலவை தவிர்ப்பதற்காக, தமிழ், 'டிவி' சேனல் அதிபர்கள், இந்தி, 'டிவி' சேனல்கள் ஒளிபரப்பும், தொடர் நாடகங்களை வாங்கி, தமிழ்படுத்தி ஒளிபரப்புகின்றனர். அந்த, 'டிவி' சேனல்கள் பக்கமே, உங்கள், 'ரிமோட்'டை எடுத்து செல்லாதீர்! எஸ்.ரெஜினா, நெல்லை:மாமிசம் சாப்பிடுபவர்களால், எதையும் எதிர்கொள்ள முடியும் என்கின்றனரே... உண்மையா?செம தமாஷ் கூற்று! மாமிசம் சாப்பிடுவோர், அதன் பக்கமே போகாத, 'சின்னத் தம்பி' என, பெயரிடப்பட்ட காட்டு யானையை, நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், மயக்க ஊசியால் தானே சமீபத்தில் கட்டுப்படுத்த முடிந்தது!என்.செல்வராஜ், பெரிய காஞ்சிபுரம்: அரசு செயல்படுத்தும், 100 நாள் வேலைக்கு செல்வோர், வேலை செய்யாமல், மரத்தடியில் அமர்ந்து, பொழுதை கழிக்கின்றனரே... இதனால், மக்களுக்கும், அரசுக்கும் பயன் உண்டா?கிடையவே கிடையாது! இந்த வேலையை கவனிக்க வேண்டிய அரசு அதிகாரிகள், தம் அலுவலகத்தில் துாங்கிக் கொண்டிருக்கின்றனர்! இந்த, ஒரு நாள் சம்பளம் 224 ரூபாயில், சில சதவீதம் அவர்களையும் சென்று அடைகிறதே!அரசின் சுத்தமான பைத்தியக்கார திட்டம் இது! உடனே நிறுத்த வேண்டும்!* கோ.குப்புசுவாமி, சென்னை: மலையாளிகள், சென்னையில் டீ கடை வைத்து, நன்றாக வியாபாரம் செய்து, வசதியாக வாழ்கின்றனரே... சென்னையில் மட்டும் என்ன... உலகம் முழுவதும் தான்! ஒரு தமாஷ் உண்டு... நிலவில் முதன் முதலாக கால் வைத்த அமெரிக்கர், ஆம்ஸ்ட்ராங்கிடம், 'சாயா வேணோ' எனக் கேட்டாராம், ஒரு மலையாளி!இதற்கெல்லாம் மன தைரியம் தான் தேவை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !