அந்துமணி பதில்கள்!
* நவநீலாராய், சென்னை: அரசியல்வாதிகள் மேடையில் பேசுவதெல்லாம் பிறர் எழுதிக் கொடுத்தது தானோ...பழைய அ.தி.மு.க., ஆட்சியைத் தவிர்த்து விடவும்... கருணாநிதி இருந்த வரை, எல்லாமே அவர் தான்! இப்போது உள்ளவர்களின் பொதுக்கூட்ட பேச்சுகள் மட்டுமல்ல, அறிக்கைகளும், அவர்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களிடமிருந்து வருவதே! வி.எஸ். மூர்த்தி, திண்டுக்கல்: கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, புதிதாக எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. இதே நிலை நீடித்தால் என்னவாகும்?எல்லா புதுப் படங்களும், இணைய தளத்தில் வெளியாகும்; தியேட்டர்களை மூட வேண்டியது தான்! பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம், தியேட்டர்களில் வெளியாகும் முன்னே, இணையதளத்தில் ஒளிபரப்பாகப் போகிறது. சூர்யாவின் தயாரிப்பில் தயாரான படம் இது.'அமேசான் பிரைம்' என்ற நிறுவனம், படத்தை வாங்குகிறது; இன்னும் பல படங்களை, இந்த நிறுவனம் வாங்கலாம்! வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் தாண்டி, இச்செயலை செய்துள்ளார், சூர்யா! * ஜே.ஆர். ராஜாராம், பரமக்குடி: நான் ஒரு பன்னாட்டு கம்பெனியில் பணிபுரிகிறேன். சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லை; எப்படி சமாளிப்பது?சென்னை, அண்ணா சாலையில் தான், 'பிரிட்டிஷ் கவுன்சில்' உள்ளதே... அங்கே, ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கின்றனரே... மூன்று மாதம் ஆங்கிலம் பேச, அங்கே படியுங்கள்... பின்னர், ஆங்கிலேயரே, உங்களது ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு அசந்து போவர்! ஜி. கார்த்திகேயன், சிதம்பரம்: உ.பா.,விற்காக, லென்ஸ் மாமா என்ன செய்கிறார்?அவர் தான் மூளைக்காரர் ஆயிற்றே... நான்கு மாதங்களுக்கு, 'ஸ்டாக்' வாங்கி, கார், 'டிக்கி'யில் வைத்து விட்டார்! வீட்டிற்குள் எடுத்துச் சென்றால், பிரச்னை ஆகிவிடுமே! புத்திசாலி எனச் சொல்வீர்கள் தானே! எ.டபிள்யூ.ரபீ அஹமத், சிதம்பரம்: சில பத்திரிகைகள், பக்கம் குறைத்து வெளியிடுகின்றனவே... என்ன காரணம்?வருமான குறைவு தான்! 'கொரோனா'வால் விளம்பரங்கள் நின்று விட்டன. அடுத்து, அச்சிடும் செய்தி தாளான, 'நியூஸ் பிரின்ட்' சுழல்களை இறக்குமதி செய்ய, வெளிநாட்டு கப்பல்கள் வராததால், உள்ளதை வைத்து சமாளிக்கின்றனர்! * ஆர். கங்கா, புதுக்கோட்டை: பணம் சம்பாதிக்க, முதலில் என்ன வேண்டும்?முதலில் மூளை வேண்டும்! எதில் சம்பாதிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! அப்புறம், கடன் வாங்கலாம்; தொழில் நடத்தலாம்! வாங்கிய கடனை முறைப்படி திரும்ப செலுத்த வேண்டும் என்ற மனப்பக்குவமும் வேண்டும்!