உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

மதுரையில் நண்பர் ஒருவரின் மகன் திருமணம். 'கண்டிப்பாக வர வேண்டும்' என, தம் சகதர்மினியுடன் சென்னை வந்து என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார். ரயில் கிளம்ப அரை மணிக்கு முன்பாகவே, எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுக்கு, 'சீட்' ஒதுக்கப்பட்ட பெட்டியின் அருகே, பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, மாமாவின் கண்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குப் பின், ஒரே இடத்தில் நிலைக் குத்தி நின்றது.அங்கே —சுரிதார் அணிந்த மூன்று இளம் பெண்களும், சேலையில் ஒரு பெண்ணும், தம்மை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். லென்ஸ் மாமாவை இழுத்துக் கொண்டு பெட்டிக்குள் ஏறி அமர்ந்தேன். ரயில் கிளம்பியது. எங்களது, 'கேபினில்' நடுத்தர வயதை கடந்த ஒரு பெண்மணி அமர்ந்து இருந்ததால், லென்ஸ் மாமா, வெண்குழல் வத்தி பற்ற வைக்க முடியாமல் தவித்து, அவ்வப்போது வெளியே சென்று புகைத்துவிட்டு வந்து கொண்டிருந்தார். தாய்க்குலத்திற்கு மதிப்பு அளிக்கும் செயலாம்!ரயில், செங்கல்பட்டை தாண்டியது; 'கேபினில்' தாய்க்குலம் இருப்பதால், அங்கே உற்சாக பானம் சாப்பிட முடியாமல் சங்கடத்தில் நெளிந்தார் லென்ஸ் மாமா. பெட்டியின் கண்டக்டர், மாமாவிற்கு நன்கு பழக்கப்பட்டவர். அவரிடம், 'பாய்... உங்க சீட்டு காலியாத்தானே இருக்குது... அங்கே வந்து கச்சேரியை ஆரம்பிக்கட்டுமா?' என்று கேட்டார்.கண்டக்டர்களின் சீட்டு, பெட்டியின் நடுவே, நடைபாதையில், கழிப்பறையை ஒட்டி அமைந்திருக்கும்; இரண்டடிக்கு இரண்டடி தான் இருக்கும்.'அங்க, ரயில்வே விஜிலன்ஸ் ஆபீசர் உட்கார்ந்து இருக்கான்... நீங்க பெட்டியிலே ஏறினதுமே, அந்த சீட்டை உங்களுக்காக ஒதுக்கி வைக்கணும்ன்னு முயற்சித்தேன்; முடியல. நீங்க, இந்த பக்கமா (ரயில் பெட்டியின் இன்னொரு கோடி)உட்காருங்க... என் டிரங்க் பெட்டியை இங்கே கொண்டாந்து போடுறேன்...' என்றார்.பின்னர் என்ன தோன்றியதோ, அந்த ரயில்வே விஜிலன்ஸ் ஆபீசரிடம் பேசிவிட்டு வந்த கண்டக்டர், 'வாங்க சார்... அங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம்...' என, லென்ஸ் மாமாவின் காதைக் கடித்தார்.வி.ஆபீசரும், மாமாவும் ஒரே சீட்டில், 'அட்ஜஸ்ட்' செய்து அமர, ரயில் பெட்டியின் கதவைத் திறந்து, வாசல் ஓரம் காற்று வாங்கியபடியே கண்டக்டர் உட்கார, நான் நின்றபடி இருந்தேன்.உ.பா., சுறுசுறுவென்று மாமாவின் முகுளத்தை தாக்கத் துவங்கியது, அவரது பேச்சில் தெரிய ஆரம்பித்தது. விஜிலன்ஸ் ஆபீசரிடம், ரயில்வேயின் ஊழல்கள் பற்றி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் போதே, வி.ஆ., 'சார், நான் ரிட்டையர் ஆகிட்டேன்...' என்றார்.மாமாவுக்கு இதைவிட என்ன காரணம் வேண்டும்... முழு சீட்டையும் பிடித்துக் கொள்ள!'சார்... ஒரே சீட்டில ரெண்டு பேரும் இடஞ்சலா உட்கார்ந்து இருக்கிறோமே... நீங்க அப்படி, வசதியா கதவுப் பக்கம் தரையில உட்காரலாமே...' என, வி.ஆ.,வை கிளப்பி விட்டார்.மாமாவும், விஜிலன்ஸ் ஆபீசரும், ரயில்வே துவங்கி, அமெரிக்க அரசியல் வரை பேசினர்.பேச்சின் நடுவே, நெற்றி அடி போல விஜிலன்ஸ் ஆபீசர் கூறிய ஒரு, 'பாயின்ட்' இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.'பொது வாழ்வுக்கு வந்துவிட்ட அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் வேணும் சார்... அமெரிக்காவுலே, கல்யாணம் ஆகாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்றாங்க; ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகும் நிலையை அடைஞ்ச பின் திருமணம் செய்றாங்க.13 - 14 வயதிலேயே, சிறுவர், சிறுமியர், 'டேட்டிங்' செய்து, உடல் தொடர்பை அந்த வயதிலேயே ஏற்படுத்திக்கிறாங்க.'தனக்கு பிடிச்ச ஆணையோ, பெண்ணையோ வீட்டுக்கு அழைத்து வர்றத அமெரிக்க பெற்றோர் தடுக்கிறதில்ல. அதுக்குப் பதிலா, தாம் பெற்றது பெண்ணாக இருந்தால், 'கர்ப்பமடையாமல் பார்த்துக் கொள்...' என ஆலோசனை கூறுகின்றனர். இப்படி, கொஞ்சம் கூட ஒழுக்கம் இல்லாத நாட்டின் மக்கள், தம்மை ஆள தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் ஒழுக்கம் மிக்கவர்களாக, தம் மனைவி தவிர மற்ற பெண்களிடம் தொடர்பு இல்லாதவர்களாக இருக்கணுங்கிறதுல ரொம்ப கண்டிப்பாக இருக்கிறாங்க.'இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால்தான் நாட்டை நல்வழியில் நடத்திச் சென்று, மக்களை சுபிட்சமடையச் செய்ய முடியும்ன்னு நம்புறாங்க. அதுதான் உண்மையும் கூட!'இங்கே, நம்ம ஊரை எடுத்துக்கங்க... சட்டப்படி கல்யாணம் பண்ணாத லேடியைக் கூட, பொது நிகழ்ச்சிகளுக்கு தைரியமா கூட்டி வரும் அரசியல்வாதிகளை ஏற்றுக் கொண்டு, அவங்களுக்கு ஓட்டுப் போடும் ஏமாளி மக்கள் இருக்கிறாங்க. பொது வாழ்க்கைக்கு ஒழுக்கமானவர்களை தேர்ந்தெடுக்காத வரை நம் மக்களும், நாடும், அமெரிக்கா போல, ஜப்பான் போல முன்னணி நிலைக்கு வரப் போறதில்ல...' எனக் காட்டமாக, கூறினார். இது சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரம்; ஆனால், நடக்க ஆரம்பித்துவிட்டது என்றே தோன்றுகிறது!சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில், 'மனித உறவுகள் மேம்பட' என்ற தலைப்பில் கொடுத்திருந்த அறிவுரைகள், அற்புதமாக இருந்தன.குடும்பம் மற்றும் அலுவலகத்தில் மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்:* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை தவிருங்கள்.* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.* விட்டுக் கொடுங்கள்.* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை, அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை, இங்கே சொல்வதையும் விடுங்கள்.* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து, கர்வப்படாதீர்கள்.* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப்படாதீர்கள்.* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.* புன்முறுவல் காட்டவும், சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.* பேச்சிலும், நடத்தையிலும், திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் கடைபிடியுங்கள்.* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.* தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை; அதுவே, உங்களுக்கு வெற்றியாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !