அந்துமணி பா.கே.ப.,
மதுக்கடைகளுடன் இணைந்து, 'பார்' வைத்துக் கொள்ள அனுமதி அளித்து, அரசு அறிவிப்பு வந்த சமயம் அது. ஜெ., ஆட்சியின் ஆரம்பக் கட்டம்... மதுக்கடை அதிபர்கள் மற்றும் குடிகாரர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பரோ இல்லையோ... லென்ஸ் மாமா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!'பார் வேண்டும்' என்பதற்கான நியாயங்களை புட்டுப் புட்டு வைத்து, அது தொடர்பான செய்திகளை எழுதும்படி, தன் நண்பர்களான நிருபர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வார்.நம் நாளிதழ் துவங்கி, ஹிந்து பேப்பர் வரை, ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதிக்கு, தன் மைத்துனர் பெயரில் கடிதக் கணைகள் விடுவார்.இப்படி ஒருபுறம் லென்ஸ் மாமா மகிழ, 'மாமூல் போச்சே...' என்ற சோகத்தில், போலீஸ்கார நண்பர்கள் இருப்பரோ என்ற எண்ணத்தில், நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்த போது, 'எங்களுக்கு எதுக்குப்பா சோகம்... எங்க வருமானத்துக்கு ஒரு நாளும் பங்கம் வராது; வரவிடவும் மாட்டோம் இப்போ ஒயின்ஷாப்காரர்கள் மாமூல் தர மறுப்பாங்க... 'சரி'ன்னு ஒரு வாரம், பத்து நாள் விட்டுருவோம்.'அப்புறம், வேலையக் காட்ட ஆரம்பிப்போம். குடித்துவிட்டு, பாரில் இருந்து வெளிவரும், 'குடிமகன்'கள் தம், டூ-வீலரை எடுக்கும்போது, 'டிரங்கன் டிரைவ்'ன்னு வரிசையா கேஸ், 'புக்' பண்ணுவோம்.'அப்புறம், அந்த பாருக்கு எந்த, 'குடிமகன்' தைரியமா வருவான்றே... வியாபாரம், 'டல்' ஆகும். மறுபடியும் எங்ககிட்டே ஒயின் ஷாப் ஓனர் சரண்டர்; எப்படி ஐடியா...' என்றார்.'அடப்பாவிகளா...' என, மனதில் நினைத்துக் கொண்டேன்.இந்த இடத்தில், 'இலக்கிய பீடம்' இதழில், பூவண்ணன் எழுதியது நினைவுக்கு வந்தது.களவும், கொலையும் போல, ஒரு கடுமையான குற்றம், கள்ளுண்டு மயங்குதல்! பண்பாட்டின் சிகரமாக விளங்கிய சங்க காலத் தமிழ் சமுதாயம், கள் உண்ணலைக் கைக் கொண்டிருந்தது.மதிப்புக்குரியவரை வரவேற்கும் வைபவத்தில் கள்ளுக்கு இடம் இருந்தது; மன்னனும், மாசறக் கற்றோனும் குடிப்பதை நேசித்தனர்.'சிறிய கள் பெறின், எமக்குத் தருவான்; நிறைய கள் பெறின், யாம் பாட, தான் பருகுவான்!' எனும், அதியமானைப் பற்றிய அவ்வை வாக்கு இதை உணர்த்துகிறது.கள்ளுண்ணும் தீமையைக் கண்டித்து, கைவிடக் கோரிய, முதல் புலவன் வள்ளுவனே!ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர், அதில், ஒரு காட்சியை எழுதுகிறார்.அதாவது, வயலில் வேலை முடிந்ததும், உழவர்கள் கழனியை விட்டு நிலத்துக்கு வருகின்றனர். வந்தவர்கள், தாகம் போகவும், உழைத்த உடலின் சோர்வு போகவும், கள் குடிக்கின்றனர்.பெருங்குடங்களில் கள்ளை நிறைத்து, வயலில் வைத்திருக் கின்றனர். உழைத்துக் களைத்து, கள்ளை பருக வருகின்றனர். வளைக் கரத்து வனிதையர், வந்தவர்களுக்கு, கள் வார்க்கின்றனர்.ஒரு குடுவையில் முகந்து, கள் ஊற்ற வந்தவர், இரு கரங்களை பாத்திரம் போல் இணைத்து, வாயருகே வைத்துக்கொள்ள, அந்த கைகளில், மழை போல கள் கொட்டுகிறது.கள், கை நிறைந்து வழிந்து, நிலத்தில் விழுந்து பரவுகிறது. அந்த இடமே ஒரு குளம் போலத் தெரிகிறது. உழவர்களும், கள்ளை ஊற்றியவர்களும், தம் வேலை முடிந்து புறப்படுகின்றனர்.அங்கே ஒரு அன்னம் வருகிறது. அது, அனுபவப்பட்ட அன்னம். அங்கே நிலத்தில் தேங்கி நின்ற கள்ளை குடிக்கிறது. குடிக்கக் குடிக்க, அதன் அறிவு குறைகிறது.அந்த மயக்கத்தில், அருகே நிற்கும் இளம் நாரையைப் பார்க்கிறது. அது, தன் இனமன்று, நாரை என்பதை, உணரும் அறிவு இல்லாமல், கள் மயக்கத்தால் நாரையைக் கூடுகிறது.பாலில் கலந்திருக்கும் நீரையும் பகுத்தறியும் திறம் வாய்ந்த அன்னம், நாரைக்கும், அன்னத்துக்கும் வேறுபாடு அறியாதபடி, மயங்கிப் போய் விட்டது. அதை அப்படி மயக்கியது, அது பருகிய கள்!அன்னம், கள்ளைப் பருகியதையும், நாரையைக் கலந்ததையும், சிறிது தூரத்தில் நின்றிருந்த ஆணும், பெண்ணுமான இரண்டு மயில்கள் காண்கின்றன.ஆண் மயிலைப் பார்க்கிறது பெண் மயில்... 'பார்த்தாயா, பகுத்தறியும் திறம் பெற்ற ஆண் அன்னம், குடி போதையில் மயங்கி, கன்னி நாரையைக் கலக்கிறது. நீயும் கள்ளைப் பருகினால், இப்படித்தான் மதி மயங்கி, செய்யத் தகாத செயலைச் செய்வாய்...' என்று, அந்தப் பார்வை மூலமே எச்சரிக்கிறதாம்...- இப்படி எழுதியுள்ளார் திருத்தக்க தேவர். இதை, 'குடிமகன்'களிடம் கூறினால், திருந்தவா போகின்றனர்?ஒரு காலத்தில், பர்மா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அகதிகள், இந்தியாவுக்கு வந்தனர். சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்.அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே நீங்கள் அகதி என்றால், எப்படி இருக்கும்?இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்; அணுகுண்டு செய்து விட்டோம்; உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம். எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு, முன்பு போல் வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை. இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன.இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில ஆண்டுகளில் தனக்கு சமமாகவோ, தனக்குப் போட்டியாகவோ வந்துவிடக் கூடும். இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவை துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது.அவற்றில் ஒன்றாக, சமீபத்தில் நான் கேள்விப்பட்டது:இந்தியாவில் உள்ள ஜாதிகள், அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர், யாருக்கும், யாருக்கும் நல் உறவு என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஏராளமாகப் பணம் ஒதுக்கி உள்ளதாம்!இந்த பணத்தை உதவித் தொகையாக இங்குள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து, ஆராய்ந்து வருகிறதாம். இதேபோல, மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்.'யோவ் மணி... இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்...' என்று, கேட்கிறீர்களா?இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம். யாருக்கு யார் எதிரி என்பதை தெரிந்து, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, மதத்தவனை மற்ற ஜாதி, மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, 'அல்டிமேட்டாக' நாட்டைத் துண்டாடுவதுதான் அவர்கள் நோக்கம்!இதன் முதல் கட்டம், காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மை யினராக இருப்பவர்களை, காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. தம் தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டின் பல பாகங்களுக்கும் சிதறிச் சென்றுள்ளனர்.இதே செயல்முறையைப் பயன்படுத்தி, மற்ற மாநிலங்களிலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!இந்தியனே... நீ விழித்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது; இனியும் தூங்காதே!