அந்துமணி பா.கே.ப.,
பாஅரசு அலுவலகம் ஒன்றுக்கு, சமீபத்தில், நண்பருடன் சென்றிருந்தேன். நானும், நண்பரும், அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, அறைக்குள் இருந்த சீனியர் அதிகாரி ஒருவரின் கோபக் குரல், வெளி வராண்டா வரை கேட்டது. யாரையோ, எதற்காகவோ, கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தபடி இருந்தார்.செல்வாக்குள்ள அந்த அரசு அதிகாரியிடம் தான், நண்பருக்கு, வேலை ஆக வேண்டியிருந்தது. இப்போது, உள்ளே போனால், முடியும் வேலை கூட முடியாமல் போய் விடுமே என்று நினைத்து, சற்று பொறுத்து போகலாம் என்று, வெளியிலேயே காத்திருந்தோம்.அந்த அதிகாரி பற்றி, ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஜகஜ்ஜால கில்லாடி.தனக்கு நிர்வாக திறமை நிரம்பி வழிவது போல காட்டிக் கொள்வதற்காக, தன் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, 'சார்ஜ் மெமோ' மற்றும் 'டிரான்ஸ்பர்' என்று கொடுத்து, உருட்டி, மிரட்டி பயமுறுத்தி வைப்பது அவரது, 'ஸ்டைல்!' இப்படி பயத்தில் வைத்திருந்தால், தான் ஏதேனும் தவறு செய்தாலும், தன்னை எவரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்பது, அவரது எண்ணம்.இவரால் நெடுந்தொலைவுக்கு, 'துாக்கி' அடிக்கப்பட்ட பெண் அலுவலர் ஒருவர், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து, புது இடத்தில், மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டியிருந்தது.விடுதி சாப்பாடு ஒத்துக்கொள்ளாமலும், அலைச்சல் தாங்க முடியாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்டார், பெண் அலுவலர். அவர், மேற்படி அதிகாரியை சந்தித்து, தன் பிரச்னைகளை சொல்லி, சொந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு அலுவலகத்திற்கு, 'டிரான்ஸ்பர்' தருமாறு கேட்டார்.'ஈகோ' மிகுந்த அந்த அதிகாரியோ, 'நான் போட்டால் போட்டது தான்... மரியாதையாக போய் வேலையை பார் அல்லது எந்த இடமும் கொடுக்காமல் தொங்கலில் வைத்து, சம்பளம் இல்லாமல் பண்ணி விடுவேன்...' என்று கடுப்படித்து, திருப்பி அனுப்பி விட்டார்.இதனால், நொந்து போன அந்த பெண் அலுவலர், தன் துாரத்து சொந்தமான, அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியை நாடினார். அதிகாரியிடம் நேரடியாக பேசி, காரியத்தை முடித்துவிடும் அளவுக்கு, 'வாய்ஸ்' உள்ள அந்த அரசியல் பிரமுகர், இவரது பெயரைக் கேட்டதும், யோசனையில் ஆழ்ந்தார்.'இந்த ஆள் என்றால், கொஞ்சம் பார்த்து தான் காய் நகர்த்த வேண்டும்...' என்று சொன்னவர், தன் உதவியாளரை அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.'நீங்க ஒரு போன் அடித்தால், உடனே வேலை முடிஞ்சிடுமே...' என்று கேட்ட பெண் அலுவலரை, கொஞ்சம் பொறுமையாக இருக்க சொன்னார், அரசியல் பிரமுகர்.அதிகாரியை, அவரது அலுவலகத்தில் சந்தித்தார், அரசியல் பிரமுகரின் உதவியாளர். அங்கிருந்தபடியே, தன் மொபைல் போனில், அரசியல் பிரமுகரை தொடர்பு கொண்டார்.'அவர்கிட்ட போனை கொடுப்பா...' என்று, உதவியாளரின் போனை, அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னார். 'இந்த பெண் அலுவலர் எனக்கு சொந்தம்; அவர் கேட்கும் இடத்திற்கு, 'டிரான்ஸ்பர்' கொடுக்க வேண்டும்...' என்று பரிந்துரைத்தார், அரசியல் பிரமுகர்.பேசுபவர், செல்வாக்கான பிரமுகர் என்பதால், தட்ட முடியாமல், செய்து முடிப்பதாக வாக்கு கொடுத்தார், அந்த அதிகாரி.காரியம் ஜெயமாக முடிந்ததா, இல்லையா என்பது பற்றி தகவல் இல்லை. இந்த சிபாரிசு பற்றி, அரசியலில் கொடி கட்டி பறக்கும் அந்த பிரமுகர், ஒருமுறை என்னிடம் சொன்ன விஷயம் தான், சுவாரஸ்யம்...'அந்தாளு, ஒரு வில்லங்கம் பிடிச்சவன்... நான் அவன்கிட்ட நேரடியா போன் போட்டு பேசியிருந்தால், வேலை முடிஞ்சிருக்கும் தான்... 'ஆனா, அவன் இந்த போன் உரையாடலை பதிவு பண்ணி, வேண்டாத இடத்துல போட்டுக் கொடுத்து, நமக்கு வேட்டு வச்சு, அவன் நல்ல பேர் வாங்கிட்டு போனாலும் போயிடுவான்... அது தான், நான் என்னோட, பி.ஏ.,வை அனுப்பி, அவர் போன் மூலமா பேசினேன்...' என்றார்.அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பிரமுகர்கள், எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருக்கின்றனர் என்று நினைத்து, வியந்து போனேன்.இந்த நிகழ்ச்சியை நண்பரிடம் சொல்லி முடிக்கவும், அதிகாரியிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது. நண்பரை, அதிகாரியின் அறைக்குள் அனுப்பி விட்டு, நான், அலுவலகத்துக்கு வெளியே வந்து, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அரை மணி நேர சந்திப்புக்கு பின், வெளியே வந்த நண்பரின் முகத்தை பார்த்தேன். போன காரியம் வெற்றியா, தோல்வியா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, கலங்கி போயிருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. தன் காரில் அழைத்து வந்து, என்னை அலுவலகத்தில் விட்டுச் சென்றார், நண்பர்.கேஅன்று, பீச் மீட்டிங்கின் போது, நண்பர் குழுவினருடன் நடந்த உரையாடல் இது: தமிழகத்தில் பிறந்து, தமிழை சரியாக உச்சரிக்கவே தெரியாதவர்கள், நிறைய பேர் உண்டு. இது, மனதை ஒரு பக்கம் வாட்டினாலும், தவறான உச்சரிப்பைக் கேட்டு, வயிறு குலுங்க சிரித்து மகிழவும், பழகிக் கொள்ள வேண்டியது தான் என்றே தோன்றுகிறது. தமிழையே சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள், ஆங்கிலம் பேசினால், இன்னும், 'குபீர்' தான்!ஒரு நண்பர், 'அந்து... மலைல தண்ணி தேங்கிடிச்சு பா...' என்றார். 'மலைல எப்படிபா தண்ணி தேங்கும்... வடிஞ்சிடுமே...' என, அப்பாவியாய் கேட்டேன். அவர் மீண்டும், 'மலையா... நான் அதைச் சொல்லலே... மளை...' என்றார். மறுபடியும் சில நொடிகள் அவதானித்த பிறகு தான், அவர், மழையை, 'மலை' என்றும், 'மளை' என்றும் சொன்னார் என்பது புரிந்தது.நான் விடவில்லை... 'உங்கூர் மலைல தண்ணிரெல்லாம் தேங்குதா... அதிசயமா இருக்கே...' என்றேன். 'அய்யோ... அதில்லை பா... மளை... மளை...' என்றார்.'மழைன்னு சொல்லுங்கண்ணே...' என, அவரை பிழை திருத்திப் பேச வைக்க, ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆனால், பிறந்தது முதல் இப்படி பேசிப் பழகி இருக்கிறார் என்று தெரிந்ததால், அத்துடன் திருத்தல் படலத்தை கைவிட்டேன்.இதை, என் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நண்பர், ஆங்கிலம் பேசுவதில், புலி. 'சரி அந்து... 'பேசை வாஸ்' பண்ணிட்டு வந்துர்றேன்... 'வெயிட்' பண்ணு...' என்றார்.'குபீர்' என எழுந்த சிரிப்பை அடக்கி, அவரை முறைத்தேன். அவர், 'பேஸ்' என்று சொன்னதற்கு பயன்படுத்தியது, ஆங்கிலத்தில், 'ஏ'க்கு அடுத்து வரும், 'பி' எழுத்து. 'வாஸ்' என்று சொன்னது, 'வாஷ்' என்ற பொருளைக் குறிக்கும். இப்போது, நீங்களே அவர் பேசியது போல் பேசிப் பார்த்துக் கொள்ளுங்கள்!இவர்கள் ஏன் இவ்வளவு மோசமான உச்சரிப்பை பழக்கி இருக்கின்றனர் என, ஆராய்ந்தேன். இவர்கள் படித்த பள்ளியில், ஆசிரியர்களுக்கே, தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு சரியாக இருந்திருக்காது என்று தோன்றியது; பெற்றோரும் அதே போல் இருந்திருக்கலாம்.ஆனால், அப்துல்கலாம் போன்ற பலர், கிராமத்து பள்ளியில் படித்து, சர்வதேச அளவில் கொடி கட்டியது, கட்டுவது எப்படி? மொழி மீதும், பாடங்களின் மீதும், 100 சதவீதம் கவனம் செலுத்தினால், முன்னேற்றம் சாத்தியம் என்ற முடிவுக்கு வர வேண்டியதாகிறது.அவர்கள் போல் முன்னேற முடியவில்லை என்றாலும், அபத்த உச்சரிப்பிலிருந்தாவது தப்பிக்கலாம் இல்லையா!பஅந்த பெரிய நகரத்தின் முக்கியமான சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல். எல்லா திசையிலும், கார்களும், ஸ்கூட்டர்களும், பஸ்களும், மினி லாரிகளும் தேங்கி நின்றன.போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, ஒரு கார் காரர், வெளியே எட்டிப் பார்த்தார். அட்டை பெட்டியை குலுக்கியபடி, ஒரு சிறுவன், ஒவ்வொரு வண்டி அருகே நின்று, ஏதோ கேட்டபடி வருவதை கண்டார். அவனை கூப்பிட்டு, 'என்ன தம்பி... ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல்...' என்று கேட்டார்.'ஒரு கட்சித் தொண்டர், தன் மேல் பெட்ரோல் ஊற்றி, நடு ரோட்டில் கிடக்கிறார் சார்... அவர் சார்ந்த கட்சிக்கு, 5,000 ரூபாய் நிதி வேண்டுமாம். அந்த தொகை கிடைக்காவிட்டால், கொளுத்தி சாவேன் என்கிறார். அவருக்காக தான், நான் கலெக் ஷன் பண்ணுகிறேன்...' என்றான், சிறுவன்.'இதுவரை என்ன கிடைத்தது?' என்று கேட்டார், கார் காரர்.'ஏழு தீப்பெட்டி, இரண்டு 'சிகரெட் லைட்டர்' சார்...' என்று பதில் வந்தது.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.