அந்துமணி பா.கே.ப.,
பா-கேகீழே வெளியாகியுள்ள, கூலிங் கிளாசைப் பார்த்திருப்பீர்கள்! இதற்கு, ஆங்கிலத்தில், 'பிளாக் கிளேர் - ஆன்டி ரிப்பிளைஷேனிட் - ஆன்டி கிளேர் கோட்டிங் - போட்டோ குரோமேட் - போலரைஸ்ட் லென்ஸ்' என்று பெயர்.இதற்கு தமிழில், 'பாதரசம் பூசிய கண்ணாடி' என்று பெயர். இக்கண்ணாடி மூலம் பார்க்கும் போது, நாம் யாரைப் பார்க்கிறோம் என்பது தெரியாது; ஆனால், அக்கண்ணாடியைப் பார்ப்பவர்களின் உருவம், அதில் தெரியும்!-- அது சரி... இக்கண்ணாடிகளின் ஆங்கிலப் பெயர்களை எப்படி கண்டுபிடித்தாய் என்று தானே கேட்கிறீர்கள்... எல்லாம், உ.ஆ.,க்கள் உதவியுடன் தான்!- 'கம்மிங் பேக் டு த பாயின்ட்!'சென்னையில் உள்ள, 'எம்.ஜி.ஆர்., - ஜானகி' பெண்கள் கல்லுாரி சாலையில், கல்லுாரி பெண்கள் சாலையைக் கடக்க அமைக்கப்பட்டுள்ள வசதியைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார், ஒரு, 'போலீஸ் கான்ஸ்டபிள்!' அவர் இந்தக் கண்ணாடியைத் தான் அணிந்திருப்பார்!அது, நான்கு வழிச் சாலை. மஞ்சள் கோட்டுக்குள்ளே தான் இரு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது விதி. நான் அதை ஒழுங்காகக் கடைப்பிடிப்பேன்; மற்ற மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் பற்றி, நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை!ஒவ்வொரு முறையும் இந்த போலீஸ்காரரை கடக்கும் போதும், எதையோ வாயில், அசை போட்டுக் கொண்டிருப்பார். கண்டு கொள்ளாமல், என் மிதிவண்டியை அழுத்திச் சென்று விடுவேன்!ஒருநாள், நெருக்கடி காரணமாக, கார்கள் செல்லும், முதல், 'லேன்' வழியாக செல்ல நேரிட்டது. அந்த போலீஸ்காரர் என்னை நிறுத்தி விட்டார்.'ஐயையோ தவறு செய்து விட்டோமே...' என்று எண்ணியபடி, வண்டியை ஓரம் கட்டினேன்.அருகே வந்தவரின் இடது கையில், தோலுடன் கூடிய நிலக்கடலை இருந்தது. அதை வாயில் போட்டபடியே, 'தம்பி... இன்னமுமா சைக்கிளில் போய் கொாண்டிருக்கிறாய்... ஆபீசில், ஸ்கூட்டரோ, பைக்கோ வாங்கித் தரவில்லையா?' எனக் கேட்டார்.நான், 'திரு திரு'வென விழிப்பதைப் பார்த்து, 'நான் 'டி-2 போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்த போதிலிருந்தே உன்னை பார்த்திருக்கேன்...' என்றார்.அந்த போலீஸ் ஸ்டேஷன் அருகே தான் முதலில் இருந்தது, நமது அண்ணாசாலை அலுவலகம்!அவர் பெயரைப் பார்த்தேன்; ஆஞ்சனேயரின் பல பெயர்களில், ஒரு பெயர் பொறிக்கப் பட்டிருந்தது.'ஐயா, நான் ஒரு ஆபீஸ் பாய் தானே... டீ வாங்கி வருவது தானே என் வேலை...' என்றேன்.'என்னப்பா... 'உபர் போன்ற நிறுவனங்களிலே, இந்த வேலைக்கு, 'பைக்' கொடுத்திட்டாங்களே...' என்றார்.பதில் சொல்லத் தெரியாமல் நின்று இருந்த என்னிடம், இரு கைகளிலும் தோலை சுருட்டி எடுத்து, ஊதி எடுத்த வேர்கடலைகளை கொடுத்து, 'சாப்பிடு...' எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.மிக சுவையாக இருந்தது; மென்றபடியே அலுவலகம் வந்து சேர்ந்தேன்!அன்று மதியம், நமது அலுவலக பெண், பி.ஆர்.ஓ., ஒருவரிடம் விஷயத்தைக் கூறினேன். அவரும் தனது, 'ஸ்கார்பியோ' ஜீப்பில் தான் அவ்வழியே அலுவலகம் வருவார்.'அப்படியா சரி...' என்றவர், அத்துடன் விட்டு விட்டார்!மிகவும் கலகலப்பான, கிண்டல் செய்யும் அதிகாரி அவர்.அடுத்த நாள் காலை, அந்த, 'கான்ஸ்டபிள்' அருகே காரை நிறுத்தி, 'எங்களுக்கெல்லாம் நிலக்கடலை கிடையாதா?' எனக் கேட்டிருக்கிறார்.பதறிப் போன அவர், நிலக்கடலையை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நமது, பி.ஆர்.ஓ., தன்னை யார், என்ன என்பது பற்றி கூறாமல், நன்றி தெரிவித்து வண்டியை எடுத்து கிளம்பி இருக்கிறார்.அலுவலகம் வந்த பின், அந்த அம்மணி நடந்த விஷயங்களை என்னிடம் கூறினார்.ஒரு நகைப்பும், திகைப்புமாக எடுத்துக் கொண்டேன்!அடுத்த நாள் மெனக்கெட்டு அந்த போலீஸ்காரரை சந்தித்தேன்.ஒரு திகைப்புடன் அவர், நடந்தவற்றைக் கூறி, 'அந்த அம்மாவுக்காக, தனி, 'பாக்கெட்' வாங்கி வைத்திருக்கிறேன்...' எனக் கூறினார்.நடந்த விஷயங்களை நான் கூறவும், விழுந்து, விழுந்து சிரித்தார்!'போலீசார் கை நீட்டும் போது, நாம் தான் அவர்கள் கையில், 'காந்தி'யை வைக்க வேண்டும் என்பது நிதர்சனம்; ஆனால், இவர் நிலக்கடலையை நம் கையில் தரும் நல்லவராய் இருக்கிறாரே... இவரைப் போலவே மற்ற போலீசார், எப்போது மாறுவரோ...' என, நினைத்துக் கொண்டேன்!அந்த பாதரச கண்ணாடி, இப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ஆகி விட்டார்!எனக்கு சந்தோஷம்; உங்களுக்கு...ப'மவுன்ட்பேட்டன் பற்றிய ரகசியம்' என்ற குறிப்பை, ஆங்கில பத்திரிகை ஒன்றில் படித்து, எனக்கும் அனுப்பியிருந்தார், பெங்களூர் வாசகர், ராஜிராதா; அது, இதோ:இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயாக இருந்த, லார்ட் மவுன்ட்பேட்டன் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாம். காரணம், அவர் பற்றி கூறப்பட்ட, குற்றச்சாட்டுகள் தான்.அவர், ஓரின சேர்க்கையாளர். அதுவும் இளம் பையன்கள் என்றால், ரொம்பவே விருப்பமாம்.மவுன்ட்பேட்டனின் மனைவி, எட்வினா பற்றியும் நல்ல அபிப்ராயம் கிடையாது. அவரும், பலருடன் கிசுகிசுக்கப்பட்டவர். குறிப்பாக, பாடகர் பால் ராப்சனுடனான அவருடைய உறவு, நிறையவே கிசுகிசுக்கப்பட்டது. இதில், இந்திய முன்னாள் பிரதமர் நேருவும் தப்பவில்லை.மவுன்ட்பேட்டன் - எட்வினா திருமணமே ஓட்டைகள் நிறைந்தது எனவும் பேசப்பட்டது. இதனால் தானோ என்னவோ, ஒருமுறை நண்பரிடம், 'நானும், என் மனைவியும், திருமண வாழ்க்கை காலம் முழுவதும், அடுத்தவர் படுக்கையில் படுத்தே ஓட்டி விட்டோம்...' என கூறியுள்ளார், மவுன்ட்பேட்டன்.இப்போது தெரிகிறதா, மவுன்ட் பேட்டனின், சுய வாழ்க்கை சார்ந்த குறிப்புகள் ஏன் அழிக்கப்பட்டன என்று.