உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே

நீண்ட நாள் வாசகி அவர். சமீபத்தில் ஒருநாள் மாலை அலுவலகம் வந்திருந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறார்.சிறிது நேரம் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தவர், 'வாங்க அந்துமணி சார்... சின்ன, 'வாக்கிங்' போய் விட்டு வருவோம்...' என அழைத்தார். அவர், என் நண்பர்கள் பலருக்கும் அறிமுகமானவர் தான்.அவர் மகன், 'சினிமாட்டோகிராபர்' ஆக பணிபுரிகிறார்.அம்மணியே பேச ஆரம்பித்தார்...'என் மகனுக்கும் என்னைப் போல முதுகு வலி. தினசரி, 'வாக்கிங்' போகச் சொல்லி இருக்கின்றனர். அதன்படி செல்கிறோம். அப்போது, என் வாழ்க்கையில் ஏற்பட்ட தமாஷான அனுபவங்களை அவனுடன் பகிர்ந்து கொள்வேன்... அவற்றில் ஒன்றிரண்டை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்...'உங்களுக்கு நன்கு தெரியும்... அந்த நண்பர் பெயர், பாலு ஐ.ஏ.எஸ்., - நிஜத்தில் அல்ல; அவரது மன ஆசையில், ஐ.ஏ.எஸ்., அவர் எப்போதும், 'டிப் - டாப்'பாக உடை உடுத்தி, மிடுக்காக நடந்து செல்வார்.'ஒருநாள், சென்னை, டி.டி.கே., சாலையில், நண்பருடன், காரில் வந்து கொண்டிருந்தார். எத்திராஜ் திருமண மண்டபம் அருகில் வரும் போது நண்பர், 'நானும், நான்கு நாட்களாக கவனிக்கிறேன், ஒரே குடும்பத்தின் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது...' என்று கூறினார்.'நண்பர் பாலு, 'கொஞ்சம் காரை நிறுத்துங்க அண்ணா...' என்று, காரிலிருந்து இறங்கினர். 'விடுவிடு' என, நடந்து, அந்த மண்டப வாசலில் நின்றிருந்த பெரியவரிடம், 'யார் நீங்கள், நான்கு நாட்களாக ஏன் திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று அதட்டலாக கேட்டுள்ளார்.'அந்த பெரியவரோ பயந்து போய், 'இதோ இன்றைக்கு காலி செய்து விடுவோம் சார்...' என்று கூறியபடியே, 'நீங்க யார் சார், என்ன வேண்டும்?' என்று பயத்துடன் கேட்க, 'இல்ல, இரண்டு பேருக்கு சாப்பாடு கிடைக்குமா என, கேட்க வந்தேன்...' என்று கூறி, வேகமாக காரில் ஏறி, 'போகலாம் அண்ணா...' என்று கூறிய பாலுவை பார்த்து, அந்த பெரியவரின் முகம் திகைத்துப் போனதாம்!'இதுவும் ஐ.ஏ.எஸ்., பாலு பற்றிய கதை தான். ஒரு நண்பரின் போனில், பாலு அழைத்தால், வெள்ளைக்கார அம்மணியின் குரலில், 'கக்கூஸ் பாலு?' என, 'ஸ்டைலாக' கேட்கும். 'என்ன நண்பரே இது?' என்று கேட்டேன்.'நண்பர்களுடன் ஒருமுறை வெளியூர் சென்ற போது, ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். அங்கிருந்த, 'வெஸ்டர்ன் கிளாசெட்' எனப்படும், கழிப்பறையை உபயோகிக்க தெரியாமல், அதன் மேல் ஏறி குந்திக் கொண்டேன்.'ஒருவாறு, வேலையை முடித்து வந்து, 'என்ன கழிப்பறை அண்ணா இது... மேலே ஏறி குந்திக் கொண்டால், கீழே விழுவோமா அல்லது கால்கள் உள்ளே போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. அது மட்டுமில்ல... எப்படி கழுவிக் கொள்வதுன்னும் தெரியவில்லை...' என்று கூற, அறையில் இருந்த நண்பர்கள் அனைவரும், 'கொல்' என, சிரித்தனராம்.'அதேபோல, மற்றொரு முறை, 'என்ன, 'ஷவர் பாத்' அண்ணா இது... முதுகுக்கு எட்டவே இல்லையே?' எனக் கேட்க, பிறகு தான் தெரிந்தது, அவர், 'ஹெல்த் பாஸட்' எனப்படும் கழிப்பறை குழாயை, 'ஹாண்ட் ஷவர்' என்று நினைத்து, தண்ணீர் தொட்டியிலிருந்து குளிக்க முயன்று, இப்படி புலம்பியிருக்கிறார் என்பது.'அது மட்டுமல்லை, நாம் பாலுவுக்கு போன் செய்து, அவர் அதை எடுக்கவில்லை என்றால், நாம் கோபித்துக் கொள்வோம் என பயந்து, 'அண்ணா கக்கூசில் இருந்தேன்...' என்று, ஒவ்வொரு முறையும் கூறுவதால், அவருக்கு, 'கக்கூஸ் பாலு' என்று பட்டப் பெயர். இவ்வாறு கூற, மகன் விழுந்து விழுந்து சிரித்தான்.'அரசு அதிகாரி, பாலு. ஒருமுறை, தன் குடும்பத்துடன் முதன்முறையாக புதுச்சேரி சென்றார். அங்கு நண்பர்கள் மூலம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில், அறை பதிவு செய்திருந்தார்.'தன் மனைவியிடம், அது பெரிய, 'ஏசி' அறை என்றும், மிகவும் குளிராக இருக்கும். கம்பளியால் போர்த்திக் கொள்ளுமாறு கூறி, நம் வீட்டில் மின்விசிறியை, 5ல் வைத்தால், மிகவும் அதிகமாக காத்து வருமே, அதேபோல், 'ஏசி'யை, 29 டிகிரியில் வைத்துள்ளார்.'கம்பளியை தலை வரை போர்த்தி துாங்கிய மனைவியோ, ஐந்து நிமிடத்தில், வேர்க்க, விறுவிறுக்க எழுந்து, 'என்னங்க இது... இப்படி வேர்க்கிறது?' என்று கேட்க, 'அதுவா, 'ஏசி' வேலை செய்யவில்லை போலிருக்கிறது; இரு, 'ரூம் பாயை' கூப்பிடுகிறேன்...' என்று தொலைபேசியில் அழைத்துள்ளார்.'அவன் வந்து, 'சார்... 'ஏசி'யை இப்படி, 29 டிகிரியில் வைத்தால் எப்படி?' என்று கூறி, 18 டிகிரியில் வைத்து விட்டு, ஒரு மையமான சிரிப்புடன் வெளியே சென்று இருக்கிறான். நண்பர் மனைவியின் முறைப்பை கேட்க வேண்டுமா?'பாலு இதையும் சொல்லிச் சிரித்தார்...' என்றார், அப்பெண்மணி.'பாலு கதை போதுமம்மா... நேரமாச்சு ஆபீஸ் போகலாம்...' என்றேன்.சிரித்தபடியே அலுவலக வாசல் வரை வந்தவர், தன் காரில் ஏறி பறந்தார்.

திருவள்ளுவர் இந்துவா, சமணரா என்று, 'டிவி' விவாத மேடைகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது கிடக்கட்டும்.மு.தெய்வநாயகம் என்கிற கிறிஸ்தவர், 'திருவள்ளுவர் கிறிஸ்தவரே...' என்றொரு, ஆராய்ச்சி நுால் எழுதியிருக்கிறார். திருவள்ளுவர் இந்துவுமல்ல, சமணரும் அல்ல என்பதற்கு, திருக்குறளிலிருந்தே பல அகச் சான்றுகளை காட்டி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.திருவள்ளுவர், இந்து மதத்திற்கு முரணானவர் என்பதை நிரூபிக்க, அவர் தரும் ஆதாரங்களில் சில இதோ:* பலியிடல் கூடாது - திருக்குறள்; பலியிடல் மிக அவசியம். நரபலியும் உண்டு - இந்து மதம்* மதுவை யாவரும் நீக்க வேண்டும் - திருக்குறள்; கிராம தேவதைகளுக்கு சாராயம் படைப்பதுண்டு - இந்து மதம் * மறு பிறவி இல்லை - திருக்குறள்; மறு பிறவி உண்டு - இந்து மதம்* தகாத மோகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று - திருக்குறள்; கடவுளுக்கே தகாத மோகம் உண்டு - இந்து மதம்! மேலும் இந்நுாலில், 31 முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.நுாலுக்கு, தி.மு.க., முன்னாள் தலைவர், மு.கருணாநிதி அணிந்துரை எழுதியுள்ளார். அதில், 'புலவர் தெய்வநாயகம் தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும், வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புறத் தக்கன...' என்று பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !