பா-கே
சென்னையில், 'டாஸ்மாக்' கடைகள் இல்லாததால், பக்கத்து மாவட்டமான, காஞ்சிபுரத்திற்கு, தம் காரில் பலரும் செல்கின்றனர். இதற்காக காரில், 'அவசரம், கொரோனா பரிசோதனை' என்ற, 'ஸ்டிக்கர்'களையும் மற்றும் டாக்டர், வக்கீல், 'ஸ்டிக்கர்'களையும் ஒட்டிச் செல்கின்றனர்.போலீஸ் பரிசோதனையிலிருந்து தப்பிக்க, சிலர், போலீஸ் நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.இதற்கெல்லாம் உச்சகட்டமாக, 'பிரஸ்' - ஊடகம், 'ஸ்டிக்கர்'களையும் ஒட்டிச் செல்கின்றனர்.போலீசார் சளைத்தவர்களா... இதுபோன்ற வாகனங்கள், 'சரக்கு'களுடன் திரும்ப வரும்போது, அவற்றை நிறுத்தி, அந்தந்த வாசக, 'ஸ்டிக்கரு'க்கான, 'ஐடென்டிபிகேஷன் கார்டு' கேட்கின்றனர்.போலிகளால் அவற்றை காட்ட முடியாதே - இருந்தால் தானே!உடனே, வாகனப் பரிசோதனை நடக்கிறது; மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர், போலீசார்.போலீஸ் நண்பர்களுடன் வருவோர், பெரும்பாலும் தப்பி, சரக்குகளுடன், சென்னை அடைந்து விடுகின்றனர்.மற்ற சிலரோ, காக்கிச் சட்டைகளுக்கு, 'காந்தி'யைக் கொடுத்து, தப்பிக் கொள்கின்றனர், சரக்குகளுடன்!இது ஒருபுறம் இருக்க, நண்பர் ஒருவரை சந்தித்தேன். விவகாரம், சரக்கு பக்கம் திரும்பியது.அவர், பச்சைத் தண்ணீர் மட்டும் தான் குடிப்பார்; உ.பா., பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு ஆண்டுக்கு முன் நடந்த, தன் தங்கையின் திருமண வரவேற்புக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு, 'டின்னருக்கு' முன் உற்சாக பான விருந்தளித்தார்.இதற்காக, வெளிநாட்டு, உ.பா., பாட்டில்களை நிறைய வாங்கி வந்திருந்தார். ஆனால், விருந்தினர் அனைவரும், தம் மனைவியருடன் வந்திருந்ததால், அன்றைய விருந்தில், கால் பாகம் கூட காலியாகவில்லை. மீதி அனைத்தையும் தம் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். அவர் தான், உ.பா., பிரியர் இல்லையே; அதனால், அவர் வீட்டில், 'ஸ்டாக்' இருக்கும் என நினைத்து, போன் செய்யாதவர்களே இல்லையாம்.'அதை ஏம்பா கேட்கிறே... முதன் முதலில் போன் செய்தது, என் ஆடிட்டர் தான். இரண்டாவதாக போன் செய்தது, நான் வைத்தியம் பார்க்கும், சென்னையில், மிகப்பெரிய தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் உதவியாளர்!'இது போதாதென்று, என் அத்தையின் மகன்கள், போன் செய்தனர். நச்சரிப்பு தாங்கவில்லை... திருமண வரவேற்பு முடிந்த கையோடு, மீதமிருந்த பாட்டில்களை எல்லாம் நண்பர்களுக்கு கொடுத்து விட்டேன் என்பது தெரியாமல், என்னிடமே இருப்பது போல் நம்பி, போன் செய்து, கொத்தி எடுத்து விட்டனர்...' என, புலம்பினார்.'கவலையை விடுங்கள்...' என, ஆறுதல் கூறிய எனக்கு, அதி புத்திசாலியான, லென்ஸ் மாமா நினைவில் வந்தார். அவர் தான் அதி புத்திசாலி ஆயிற்றே! 'டாஸ்மாக்' திறப்பதற்கு காலங்கள் ஆகும் என்பதை முன்பே கணித்து, 'ஸ்டாக்' வாங்கி வைத்து விட்டார்!
ப
சென்னையிலிருந்து, வாசகர் ஒருவர் எழுதிய கடிதம்:மதுக்கடை பாரில் வேலை செய்து வந்த நான், ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட மனிதர்களையும், வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டவர்களையும் சந்திக்கிறேன். அவர்களை தெய்வமாக நினைத்து பணி செய்கிறேன். ஒவ்வொருவரும், ஒவ்வொரு மனநிலையில் வருவர். வரும் போது, 'வா, நண்பா... என்ன தலைவா... மாமா, மச்சான் ஐயா...' என்று பலவிதமாக அழைப்பர். ஆனால், போகும்போது, நல்லவிதமாக செல்பவர்களும் உண்டு. 'டேய், யாருடா நீ...' என்று கேட்டு செல்பவர்களும் உண்டு.இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் அனைவரையும் அனுசரித்து சென்றால் தான், நானும், என்னை நம்பியிருக்கும் குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியும். இதில், மிக மிக அவசியம், பொறுமை. கோபப்படாமல் கடமையை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எப்படிப்பட்ட மனிதர்களுக்கும், பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு, எங்களிடமே கடன் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நானும், என்னால் இயன்ற வரை கொடுத்து உதவுவேன். திரும்ப வருமா, வராதா என்பதை எல்லாம் சிந்திக்கவே மாட்டேன்.என்னை பொறுத்த வரையில், அவர்களாக திருப்பி தந்தாலன்றி, நானாக கேட்க மாட்டேன். என்னுடைய, 'கேரக்டர்' அப்படி... யார் கேட்டாலும் கொடுத்து உதவுவேன். ஏதோ சம்பாதித்தோமா, வீட்டுக்கு தேவையானதை கொடுத்தோமா என்று தான், இப்போது வரை வாழ்ந்து விட்டேன்.எனக்கென்றோ, குடும்பத்திற்கென்றோ சேமிக்க வேண்டுமே என்கிற எண்ணமே இல்லாமல், இதுவரை வாழ்ந்து விட்டேன். குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கமுமே, எனக்கு கிடையாது. மனைவிக்கோ, என்னை விட ஒரு படி மேல் தாராள மனசு.'நமக்காக ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?' என்று, எனக்கு அறிவுரை கூட சொல்லவில்லை. எப்படியோ இரண்டு குழந்தைகள்.வாழ்க்கையில் பாதியை கடந்து விட்டோம். படிப்பிற்கு என, யார் கேட்டாலும், தயங்காமல் கொடுத்து உதவினேன். அந்த அளவுக்கு நான் பெரிதாக பணம் சம்பாதித்து வைத்திருக்கவுமில்லை; ஆனாலும் தாராள மனசு.நண்பர்களுக்கு எவ்வளவோ கொடுத்து உதவி இருக்கிறேன். இதில் பெரிய அளவிலான தொகையை நண்பர்களுக்காக, 'பைனான்ஸ்'சில் வாங்கி கொடுத்து, அவர்கள் கட்டாமல் போக, நான் ஏமாந்த கதையும் உண்டு. அவர்களுக்காக நான், பெருந்தொகையை இழந்திருக்கிறேன்.இப்படி பல பேர், என்னை ஏமாற்றி விட்ட பின் தான், காசின் அருமையை உணர்ந்தேன். நமக்கென்று பணம் சேமிக்காமல் இருந்ததை, இப்போது உணர்கிறேன்.இந்த, 'கொரோனா' வந்த பின், ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடல் நலம் சரியில்லாத மகன், அதே நிலையில் மனைவி, ஆக மூன்று பேருமே வேலையின்றி எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. 'கொரோனா'வால் தான் பணத்தின் அருமையும், பணம் சேமிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இருக்கிறேன்.வேறு ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, எங்கேயும் வேலை கிடைக்காத சூழ்நிலை. பணத்தின் அருமையையும், நேரத்தின் அருமையையும் இப்போது தான், உணர்ந்து கொண்டேன்.இப்போது என்னுடைய பழக்கங்களை மாற்றி, புதிய மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன். எல்லாம், 'கொரோனா' கற்றுத் தந்த பாடம். சேமிப்பு என்பது, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருப்பதையும், சேமிக்க பழகிக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், 'கொரோனா' ஒரு பாடமாக கற்றுத் தந்து விட்டது.- இவ்வாறு, அவர் எழுதியுள்ளார்: அவரிடமிருந்து நீங்களும் பாடம் கற்றுக் கொண்டீர்கள் தானே!