பா - கே
'மெட்ராஸ்' அதாவது பழைய சென்னைக்கு என, சில பகுதிகள் உள்ளன. அதில் பிரதானமானது, சவுகார் பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகள். இந்த பகுதிக்கென, பிரத்யேக உணவு வகைகளும், உணவுக் கூடங்களும் உண்டு.இந்த உணவு விடுதிகளில் அதிகம் பழக்கமுள்ள நண்பர் ஒருவர், சமீபத்தில் என்னை சந்திக்க வந்தார்.அலுவலக, 'லஞ்ச்' நேரம் என்பதால், அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.'ஏரியா' வாரியாக அவர் கூறியதை அப்படியே தருகிறேன்...மயிலாப்பூர்: * ராயர் மெஸ்: 100 ஆண்டு பழமையானது. இங்கு பல பிரபலங்கள் வருவர். பில்டர் காபி, இட்லி, தோசை, பொங்கல் மற்றும் பூரி போன்றவை ருசியாக இருக்கும்* மயிலை கற்பகாம்பாள் மெஸ்: மிக பிரபலம். இங்கு, பில்டர் காபி, அடை அவியல், கீரை வடை, மசாலா தோசை அருமை* மாமி டிபன் கடை: இங்கு டிபன் வகைகள், கொழுக்கட்டை, கலந்த சாதம் வகைகள் மிகவும் பிரபலம்* ஜன்னல் கடை: பல ஆண்டுகளாக ஜன்னல் மூலம் விற்பனை நடைபெறுகிறது. இங்கு போண்டா வடை, கெட்டி சட்னியும் கூடுதல் ருசி* பாரதி மெஸ்: இங்கு காலை டிபன் வகைகளும், மதிய சாப்பாடும் அருமை* காளத்தி கடை: இங்கு, ரோஸ்மில்க் பிரபலமானது. இதுவும், 100 ஆண்டு கடை தான். மயிலாப்பூர் சென்றால், இந்த ரோஸ் மில்க் பருகாமல் வர வேண்டாம்; அதற்கான, 'எசென்சும்' விற்கின்றனர்* ஸ்ரீ கற்பகாம்பாள் கபாலி ஸ்வீட் ஸ்டால்: இந்த கடையில் பக்கோடா, போண்டா, லட்டு மிகவும் ருசியானவை* நாரத கான சபா கேன்டீன்: இங்கு சாம்பார் வடை, ரச வடை, தோசைகள் அருமை* வடக்கு மாட வீதியில், மாலையில் புட்டு கடையும் மிகவும் பிரபலம்* மத்தள நாராயணா தெருவில் உள்ள கணேஷ் மெஸ், அசைவ உணவுக்கு அருமையான இடம்* மதுரை கோனார் மெஸ்சில் உணவை சுவைக்க வேண்டுமா... டி.டி.கே., ரோடு ஆழ்வார்பேட்டையில் இருக்கிறதே* ஆந்திரா உணவு வகைகளை ருசிக்க, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், 'ஜம்மி பில்டிங்'கில், மெஸ் உள்ளது* ஆழ்வார்பேட்டையில் உள்ள, அமராவதி ஆந்திரா உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் பிரபலம்தி.நகர் - மேற்கு மாம்பலம்:* விவேகானந்தா தெருவில் உள்ள, 'தோசை மாமா கடை' என்று, செல்லமாக அழைக்கப்படும் பாரதி டிபன் சென்டரில், பாரம்பரிய தோசை மட்டுமல்லாமல் பூண்டு தோசை, தக்காளி தோசை, நவதானிய தோசை என, பல வகை தோசைகள் உள்ளன; வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்* சைவ உணவில், தென் மாநில, வட மாநில, 'சைனீஸ்' உணவுகளை சுவைக்க, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலத்தில் உள்ள, பாக்யா மெஸ் போகலாம்* காலை, 7:00 முதல் இரவு, 11:00 வரை உணவு வேண்டுமா... நடேசன் பூங்கா அருகில், ராமானுஜம் தெருவில் உள்ள, கண்ணதாசன் உணவகம் செல்லலாம்* சுப்பா தெருவில் உள்ள, தஞ்சாவூர் மெஸ் காலை டிபனுக்கும், மதிய உணவுக்கும் மிகவும் பிரபலம்* சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடில் உள்ள, மாம்பலம் மெஸ் உணவும் மிகவும் பிரபலம்* நொறுக்கு தீனி, வடை, போண்டா வகைகளுக்கு, வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்; அயோத்தியா மண்டபம் எதிரில் உள்ள சிறிய கடை. பொது சுகாதார மையம் அருகில் உள்ள விஜய் சாட் கடை, 7வது அவென்யூவில் உள்ள மன்சுக்கடை மிகவும் பிரபலம்* நீங்கள் அசைவ பிரியரா... கோவிந்தன் தெருவில் உள்ள, மதுரை பாண்டியன் மெஸ், வடக்கு உஸ்மான் சாலை, மதுரை குமார் மெஸ், கோடம்பாக்கம் ரோடு, அக்கா கடை மற்றும் பல ஆந்திரா மெஸ்கள் உள்ளன* தி.நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளில் உள்ள மேலும் சில பிரபல உணவகங்கள்:ரயில் நிலைய ரோட்டில் உள்ள, காமேஸ்வரி மெஸ்சில், கலந்த சாதங்கள், ரோஸ் மில்க் அபார ருசி. அதே ரோடில் உள்ள, 'மாமிஸ்' சூப் கடை; நடேசன் பார்க் அருகில் உள்ள, நெய் பொடி தோசை கடை; அசோக் நகர், காவல் நிலையம் அருகில் உள்ள, பர்மா உணவான, 'அத்தோ' கடைசைதாப்பேட்டை, மாரி ஓட்டலில், பிரபலமான வடகறி; தி.நகர் பேருந்து நிலையம் எதிரில், மதுரை பொரிச்ச பரோட்டா. இவை அனைத்துமே, வித்தியாசமாக சாப்பிட விரும்புவோருக்கான உணவகங்கள்.திருவல்லிக்கேணி:தனியாக வசிக்கும் பல இளைஞர்களுக்கு, திருவல்லிக்கேணி, 'மேன்ஷன்' வாசம் தான் சொர்க்கம். அவர்களுக்கு மலிவு விலையில் உணவு அளிக்க, பல, 'மெஸ்'கள் இங்கு உண்டு.* மோனிஷா மெஸ்சில் டிபன் வகைகள், மிக ருசியாக இருக்கும்* நல்ல வீட்டு சாப்பாடு வேண்டுமா... வாங்க, பாரதி மெஸ் போகலாம்* ஐஸ் அவுஸ், தணிகை வேலனும், சைவ சாப்பாட்டுக்கு பிரபலம்* ரத்னா கபே ஓட்டலில், இட்லி, சாம்பார் சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை* அசைவ உணவிற்கு, சாகர் ஓட்டல், ஐஸ் அவுஸ் மற்றும் பல பிரியாணி கடைகள் உள்ளன* 'ஷவர்மா' வகை உணவுகளுக்கும், ஐஸ் அவுஸ் தான் பிரபலம்* 'சாட்' வகை உணவுகள், சமோசா மற்றும் திருவல்லிக்கேணி பிரபல பிரட் அல்வா வேண்டுமா... மீர்சாகிப்பேட்டை போங்க* சிங்கராச்சாரி தெருவும், 'சாட்' உணவிற்கு பிரபலம்* ஐஸ்கிரீம் சுவைக்க, பைகிராப்ட்ஸ் ரோட்டில் உள்ள, விஜய் ஐஸ்கிரீம் போங்க* திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சீலாண்டில், பலுாடா வகை, ஐஸ்கிரீம் மிக பிரபலம்.சவுகார்பேட்டை:* மின்ட் தெருவில் உள்ள, காகடா ராம்பிரசாத் கடையில், வட மாநில உணவு வகைகள் தரமானதாகவும், ருசியாகவும் இருக்கும். இக்கடை, 1958ல் திறக்கப்பட்டது* நாவல்டி டீ ஹவுஸ் கடையில், வட மாநில உணவு வகைகள், தேநீர், மில்க் ஷேக்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் சுவையாக இருக்கும்* என்.எஸ்.சி., போஸ் ரோடு செல்பவர்கள், சீனபாய் டிபன் சென்டரில், இட்லி, தோசை வகைகளை உண்ணாமல் வருவதில்லை* யானை கவுனியில் உள்ள, அஜப் மிட்டாய் கர் கடையில், வட மாநில, 'சாட்' உணவுகள் பிரபலம்* மின்ட் தெருவில் உள்ள, ரசோயி கடையில், பானி பூரி மற்றும் வட மாநில, 'சைனீஸ்' உணவுகள் மிக பிரபலம்* பர்வீன் பாஸ்ட் புட் கடையில் தயாரிக்கும், சில்லி பீப் மற்றும் அசைவ உணவுக்கென, தனி கூட்டம் உள்ளது* 'நேஷனல் லாட்ஜில்' ஆந்திரா உணவும், தென் மாநில சிற்றுண்டி வகைகளும் கிடைக்கும்* என்.எஸ்.சி., போஸ் ரோட்டில் உள்ள, அகர்வால் போஜனாலயா மற்றும் மின்ட் தெருவில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா போஜனாலயாவில் வட மாநில உணவு வகைகள், மிக குறைந்த விலையில் கிடைக்கும்* மா துர்கா ஓட்டலில், வங்காள உணவு பிரசித்தம்* தென் மாநில உணவுகளுக்கான இடமாக, ஓட்டல் கிருஷ்ணா பிரதர்ஸ் உள்ளது* எர்ர பாலு செட்டி தெருவில் உள்ள, அசிஸ் அத்தோ கடையும், பீச் ரோட்டில் உள்ள, பர்மா அத்தோ கடைகளில், பல பர்மா உணவுகளும், 'அத்தோ மொய்யான்' என்று, பல வகை பர்மீய உணவு வகைகளையும் பரிமாறுகின்றனர்...- இப்படி முடித்தார், நண்பர்.நண்பரை வழியனுப்பி விட்டு நினைத்தேன்... இத்தனை உணவகங்களுக்கும் செல்வதற்கு எங்கிருந்து காசு திரட்டலாம் என்று!வாசகர்களே... நீங்களும் சென்னை வருகிறீர்கள் எனறால், நீங்கள் தங்கியிருக்கும் பகுதி அருகில் உள்ள உணவகங்களில் சுவைத்துப் பாருங்கள்!