உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா.கேசென்னையில், 'நிவர்' புயல் மழை அடித்து ஓய்ந்த பிறகு, ஞாயிறன்று, குப்பண்ணா வீட்டு திண்ணையில் அமர்ந்து, நானும், அவரும் பேசிக் கொண்டிருந்தோம்.வழக்கமாக, குப்பண்ணா வீட்டுக்கு தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர், வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தினார். வண்டியில், என்னென்ன காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் உள்ளன என்பதை, தன் குரலில் பேசி, 'பென் - டிரைவ்'ல் பதிவு செய்ததை, ஸ்பீக்கரில் ஒலிக்க விட்டிருந்தார்.காய்கறிக்காரரின் குரல் கேட்டதும், பையுடன் வெளியே வந்த குப்பண்ணாவின் மனைவி, 'இது என்ன புதுவிதமான வியாபாரமா இருக்கே...' என்றார்.'என்னம்மா பண்றது... மூணாவது, ஐந்தாவது மாடியில் இருக்கிறவங்களுக்கும் கேட்க வேண்டுமே என்று, கத்தி கத்தி கூப்பாடு போட வேண்டியதாயிருக்கு. எந்த மகராசனோ, இந்த முறையை அறிமுகப்படுத்தியது எங்களுக்கு வசதியா போயிற்று. 'இந்த ஒலிபரப்பை கேட்டதும், அத்தனை பேரும் ஓடி வந்துட மாட்டீங்களா... அது மட்டுமல்லாமல், ரொம்ப கத்தினா, தொண்டையில் புண் ஏற்பட்டு, 'கேன்சர்' நோயில் கொண்டு போய் விட்டுடும்ன்னு வேற பயமுறுத்திட்டாங்கம்மா... அதான், இப்படி மாற வேண்டியதா போச்சு... 'நீங்களும், அக்கம் பக்கத்து மாமிங்க கூட சத்தம் போட்டு வம்பு பேசாதீங்கம்மா...' என்று, ஒரு, 'பஞ்ச்' வைத்தார், பாருங்க... குப்பண்ணாவின் மனைவி மட்டுமல்லாமல், அங்கிருந்த மற்ற பெண்களின் முகமும், அஷ்ட கோணலாகியது.'ஏம்பா... செய்ததுதான் செய்த, அப்படியே ஒவ்வொரு ஐட்டத்துக்கும் விலையையும் குறிப்பிட்டு, பதிவு செய்துட வேண்டியது தானே... ஒவ்வொன்றின் விலையை சொல்லிட்டிருக்க வேண்டாம் பாரு...' என்றார், குப்பண்ணா.'யோசனை சொல்றதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை... இவங்க என்ன பேரம் பேசாமலா வாங்கிட போறாங்க...' என்று முணுமுணுத்தார், வண்டிக்காரர்.'ஆனாலும், உனக்கு வாய் கொஞ்சம் நீளமா போச்சு...' என்று திட்டியவாறு, காய்கறியை பொறுக்க ஆரம்பித்தனர், அங்கிருந்த பெண்கள்.குப்பண்ணா தொடர்ந்தார்...'மணி... நீ ஒரு அரை நாள் இப்படி திண்ணையில் உட்கார்ந்து பாரேன். தெரு தெருவா தள்ளு வண்டியில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்கள், சைக்கிள் அல்லது டூ-வீலரில் பூ, மீன் மற்றும் பாய் விற்பவர்கள் மட்டுமல்லாமல், குடை பழுது நீக்குபவர், தலையில், கூடையில் கோல மாவை சுமந்து வரும், 'கோலமாவு கோகிலாக்கள்' வரை, சகலரும் இப்போதெல்லாம் வாயால் கூவி கூவி விற்பனை செய்வதில்லை. அதற்கு பதிலாக, தங்கள் குரலில் பேசி, பதிவு செய்த, 'பென் - டிரைவை' ஆம்ப்ளிபையரில் போட்டு, ஸ்விட்சை தட்டிவிட்டபடி செல்கின்றனர்.'இப்படிதான், போன வாரம், பாய் வியாபாரி ஒருவர், டி.வி.எஸ்., 50 வண்டியில், பதிவு செய்த குரலை ஒலிபரப்பியபடி வந்தார். அப்போது, நடந்து சென்ற, 'குடிமகன்' ஒருவர், இதை அதிசயமாக பார்த்து, அப்படியே நின்று விட்டார்.'பாய் வியாபாரி கடந்து சென்றதும், பேசினார் பார் ஒரு பேச்சு... இந்த, 'டெக்னிக்'கை கண்டுபிடித்தவன் கேட்டால், 'புல்லரித்து' போயிருப்பான்...' என்றார்.'பாராட்டினானா, திட்டினானா...' என்றேன், நான்.'இரண்டும் கலந்து தான்...' என்றார், குப்பண்ணா.கம்மிங் பேக் டு த பாயின்ட்...பேரம் பேசி வாங்கியதோடு, கொசுறாக, நாலைந்து பச்சை மிளகாய்களையும், கறிவேப்பிலையும் வாங்கியபடி, 'டெக்னாலஜி எப்படியெல்லாம் முன்னேறி விட்டது பார்த்தீரா...' என்றபடி உள்ளே வந்தார், குப்பண்ணாவின் மனைவி.தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். பழைய ஏட்டுச் சுவடிகளை தேடிப் பிடித்து, தமிழ் இலக்கியங்களைத் தொகுத்தவர். அவற்றை சேகரிக்க அவர் எடுத்த முயற்சிகள் சிலிர்க்க வைக்கக் கூடியவை.ஒருமுறை, அவர், ஒரு வீட்டுக்கு ஏடுகளை தேடிப் போனார். அப்போது, அந்த வீட்டில் சிறுவன் ஒருவன் மட்டும் இருந்தான். அவர், அவனை விசாரித்தபோது, அந்த வீட்டில் நிறைய ஏட்டுச் சுவடிகள் பரணில் இருப்பதாக சொன்னான்.அவற்றை எடுத்துத் தரும்படி கேட்டார். அவனும் பரணில் ஏறி, எடுத்துக் கொடுக்கத் தயாரானான்.அப்போது பார்த்து, வெளியே போயிருந்த அவனது பெற்றோர் வீட்டுக்கு வந்தனர்.'என்ன...' என்று கேட்டதும், விபரம் சொன்னான், பையன்.அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது. பையனை திட்டினார்.'ஏடுகளை கொடுக்க மாட்டேன்...' என்று பிடிவாதம் பிடித்தார்.'இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்...' என்று, உ.வே.சா., கேட்டதும், 'ஆடி மாதத்தில் ஆற்றில் போட வைத்திருக்கிறேன்...' என்றார்.'வீணாகப் போவதை எனக்குக் கொடுக்கக் கூடாதா...' என்றார், உ.வே.சா.,'தலை ஆடி அன்று சில ஏடுகளை ஆற்றில் போடுவது எங்கள் குடும்ப வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வருகிறேன். எனவே, உங்களுக்கு அவற்றைத் தர முடியாது...' என்று, பிடிவாதமாக கூறி விட்டார்.தமிழ்த்தாத்தா என்ன செய்தார் தெரியுமா...அடுத்த நாள் தான் தலை ஆடி. அதனால், மறுநாள் அதிகாலையில் ஆற்றங்கரை புதருக்குள் ஒளிந்திருந்தார், உ.வே.சா., ஏடுகளை எடுத்து வந்த அந்த ஆள், அவற்றை ஆற்றில் வீசி, போய் விட்டார்.அவர் சென்ற கொஞ்ச நேரத்தில், ஆற்றுக்குள் இறங்கினார், உ.வே.சா., தண்ணீருக்குள் மூழ்கி ஏடுகளை தேடினார். சில ஏடுகள் கிடைத்தன. ஆவலோடு அவற்றை எடுத்து வந்து, காய வைத்து, அதில் உள்ள செய்திகளை சேகரித்தார். எவ்வளவு அக்கறை, எத்தனை மெனக்கெடல் பாருங்கள்.இப்போதெல்லாம் நம் நண்பர்கள், புத்தகங்களை சேகரிக்கும் கலையே தனி.ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அவர் வீட்டுக்குள் பல புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.'இவ்வளவு புத்தகங்களை வாங்கிய நீங்கள், ஒரு பீரோ வாங்கி, அழகாக இவற்றை அடுக்கி வைக்கக் கூடாதா...' என்றேன்.'என்ன செய்வது சார்... புத்தகங்களை இரவல் கொடுக்கின்றனர். யாருமே, பீரோவை இரவல் கொடுப்பதில்லையே...' என்றார்.எப்படி இருக்கிறது பாருங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !