அந்துமணி பா.கே.ப.,
சிறுநீர் குடிக்கும் பிரதமர் எனப் பெயர் எடுத்தவர் நம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்... மிகவும் பிடிவாதம் கொண்டவராம் இவர். 1983ல், இவர், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை சமீபத்தில் படித்தேன்.பேட்டி இதோ—மொரார்ஜி: உயிரே போனாலும் நான் புலால் உணவைச் சாப்பிட மாட்டேன்; தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன். நான் சென்ற எல்லா நாடுகளிலும் இவ்விஷயத்தில் எனக்கு விதி விலக்கு தரப்பட்டது.கேள்வி: அப்படியென்றால் நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற போது, அதைப் பற்றிய தஸ்தாவேஜுகளை உடன் எடுத்து செல்லவில்லையா?மொ: ஒருபோதும் இல்லை. சின்ன வயதில் எனக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. அதன் பிறகு, இயற்கை முறை சிகிச்சை தான். என்னுடைய குழந்தைகளுக்குக் கூட நான் தடுப்பு ஊசி போட்டதில்லை.கே: மருந்து, மாத்திரைகள்?மொ: 'அலோபதி' மருந்துகளை நான் சாப்பிடுவதில்லை; சில சமயங்களில் ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடுவேன்.கே: மலைப் பிரதேசங்கள் போன்ற உயரமான இடங்களில் உள்ள நம் ராணுவ வீரர்கள் சண்டையிட, மது அவசியம் தேவை என்று சொல்கின்றனரே...மொ: இது சுத்த ஹம்பக் - முற்றிலும் தவறு. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் மது அருந்தவில்லை. அவர்கள் மது அருந்தியிருந்தால் எவரெஸ்ட்டில் ஏறியிருக்க முடியாது. தென் துருவத்திற்கும், வட துருவத்திற்கும் சாகசப் பயணம் சென்றவர்களும் மதுவைத் தொடவில்லை; தொட்டிருந்தால் இறந்திருப்பர்.கே: குளிரை சமாளிக்க ரஷ்யர்கள், 'ஓட்கா' அருந்துகின்றனரே?மொ: அவர்கள் அப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டனர். 1955ல் ரஷ்ய அதிபர் குருஷேவும், புல்காணினும் இந்தியாவுக்கு வந்த போது, பம்பாயில் மதுவிலக்கு அமலில் இருந்ததை என்னிடம் பாராட்டினர்.கே: உங்கள் தினசரி வாழ்க்கை எப்படித் துவங்குகிறது?மொ: காலை, 4:00 மணிக்கு எழுந்திருப்பேன். டாய்லெட் செல்வேன்; குளிப்பேன். இதற்கே ஒரு மணி நேரம் பிடிக்கும். பிறகு, பிரார்த்தனை செய்வேன். காலை உணவு நான் சாப்பிடுவதில்லை. தினசரி இரண்டு வேளை தான் நான் சாப்பிடுவேன். அறுபது வயதிற்குப் பிறகு, ஒருநாளைக்கு ஒரு முறை தான் உண்ண வேண்டும். 45 வயதிற்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும். நான் வெறும் பாலும், பழமும் சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு, இரண்டு வேளை சாப்பிடுகிறேன். பசும்பால் தான் சாப்பிடுவேன். அந்தந்த சீசனில் கிடைக்கும் எல்லாப் பழங்களையும் சாப்பிடுவேன். ஏனென்றால், இவை எளிதில் ஜீரணமாகும். காலை, 9:45 மணிக்கு பகலுணவு சாப்பிடுகிறேன். மாலை, 6:45க்கு இரவு உணவு.கே: இந்த மாதிரி உணவுக்கு எப்போது மாறினீர்கள்?மொ: ஜூன் 26,1975லிருந்து... அதாவது, நெருக்கடி நிலைமையை ஒட்டி என்னை சிறையில் வைத்த நாளிலிருந்து.— நான் கேட்கிறேன்... உங்கள் வயது என்ன? எத்தனை வேளை சாப்பிடுகிறீர்கள்?***'உலகம் சுற்றும் தமிழன்' என்ற பழைய நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புத்தகத்தை எழுதியவர், ஏ.கே.செட்டியார் என்பவர். இவர், 'குமரி மலர்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவராம்! காந்தியின் சீடராக இருந்த இந்தத் தமிழர் தான் அந்த காலகட்டத்தில் உலக நாடுகள் பலவும் சுற்றி வந்த முதல் தமிழர் என்கின்றனர்.நூலில் அவர் கூறுகிறார்...பயணம் செய்வதற்கு புதிய, புதிய சாதனங்களை எல்லாம் கண்டுபிடித்து வருகின்றனர். வேகத்தை மட்டும் முக்கியமாகக் கருதினால், ஆகாய விமானமும், ரயிலுமே சிறந்தவை. ஆனால், சவுகரியத்தை முக்கியமாகக் கருதினால், கப்பல் பயணத்துக்கு இணையானது வேறெதுவுமில்லை.ரயிலைப் போல் வேகமாகச் செல்லாது கப்பல்; மணிக்கு, பத்து மைல் முதல், 30 மைல் வரை தான் செல்லும். கப்பலைப் பொறுத்தவரை அதன் வேகத்தை விட, அதன் அளவும், எடையும் முக்கியமானவை. கப்பல் எவ்வளவுக்கெவ்வளவு சிறிதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நம் பயணமும் கஷ்டமாக இருக்கும். கப்பல் பெரிதாக இருந்தால், அதிகமாக ஆடாமல், அசையாமல் சந்தோஷமாகப் பயணம் செய்யலாம்.நம் நாட்டில், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் விடுமுறை கிடைத்தால், அதுவும் சம்பளத்தோடு விடுமுறை கிடைத்தால், சிலர் வெளியூர் சென்று சுகமாகக் காலம் கழிக்கின்றனர் அல்லவா? மேலை நாடுகளிலே சிலர் இவ்வாறு விடுமுறை கிடைத்தால், கப்பல் பயணத்திலேயே அதன் பெரும் பகுதியையும் செலவிடுகின்றனர்.ஆயிரக்கணக்கான மக்களுடன் பல நாள் கப்பலில் பயணம் செய்வதால், பலருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. தூய கடற்காற்று... தூசி என்பதையே பார்க்க முடியாது. நினைத்த பொழுதெல்லாம் கடல் நீரில் குளிக்கலாம். நீந்தத் தடாகம் வேறு. கப்பலுக்குள்ளேயே மைல் கணக்காக நடக்கலாம். சீட்டாட்டம் முதல் டென்னிஸ் வரை ஆடலாம். பொழுது போவதற்கு வானொலி, திரைப்படம் முதலியவை உண்டு. அவற்றில் விருப்பம் இல்லாதவர்களுக்குப் புத்தக சாலையும் உண்டு. சில கப்பல்களுக்கு ஆறு மாடிகள் உண்டு. மாடிகளுக்குச் செல்ல மின்சார, 'லிப்டு'களும் உள்ளன.கப்பலில் முக்கியமானது சாப்பாடு. சாப்பாட்டு விவரங்களை அச்சடித்துக் கொடுப்பர். எந்த நாட்டு உணவும் தயார் செய்து கொடுப்பர். உதாரணமாக, ஒருநாள் சாப்பாட்டைக் கவனியுங்கள்... காலை படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே தேநீர் அல்லது காபி, ரொட்டி, பழம் முதலியன. 8:10 மணியிலிருந்து 9:30 மணிக்குள் காலை ஆகாரம். 11:00 மணிக்கு, 'சூப்'பும், ரொட்டியும். பகல், 1:00 மணிக்கு சாப்பாடு. மாலை, 4:00 மணிக்கு 'டீ'யும், 'கேக்'கும். இரவு, 7:00 மணிக்கு இராச் சாப்பாடு. இரவு, 10:00 மணிக்கு, 'சாண்ட் விச்'சும், காபியும். மூன்று உணவு வேளைகளுக்கும் நடுவில் வாத்திய கோஷ்டியினர் வாத்தியம் வாசிப்பர். 'குடி' வகைகள் நிறைய வைத்திருப்பர்.குறிப்பிட்ட துறைமுகத்தை கப்பல் அடைவதற்கு முதல் நாள் இரவு பிரிவுபசார விருந்து நடைபெறும். அதில், ஒவ்வொரு பயணியின் மேஜையிலும், வர்ணக் காகிதத்தால் செய்யப் பெற்ற குல்லா ஒன்றிருக்கும். அந்தக் குல்லாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வினோதமாயிருக்கும். அத்தனைப் பயணிகளும் தங்கள் மேஜையிலுள்ள வர்ணக் குல்லாவை அணிந்து ஆர்பாட்டம் செய்வர். ஒரே கோமாளிக் கூத்து தான். சில பயணிகள் உணவுப் பொருளைக் கையிலெடுத்து ஆடிக் கொண்டே சாப்பிடுவர்.நள்ளிரவிலே சந்திரன் ஒளியிலே கப்பலின் மேல் தட்டில் தனிமையாக நின்று, கடற்காற்றை அனுபவிப்பதே ஓர் ஆனந்தம். பகல் நேரத்தை விட, இரவு நேரத்தில் தான் அதிக வேகமாக கப்பல் செல்லும். காற்றும், மழையும் கலந்து வருமானால், அது ஒன்று தான் கப்பல் பயணத்தைக் கெடுக்கும். மற்றபடி கப்பல் பயணம் போல் சுகமானது வேறில்லை!— கப்பலில் பயணம் செல்ல எனக்கு ஆசை வந்து விட்டது; உங்களுக்கு?***