உள்ளூர் செய்திகள்

சாம்பல் மருந்து!

ஞானானந்தம் எனும் சொல்லை, ஞான + ஆனந்தம் என, பிரிக்கலாம். அதன்படிப் பார்த்தால், ஞானம் என்பது, பல வகையாகும் எனும் பொருள் வரும். அப்படிப்பட்ட பல ஞானங்களில் ஒரு ஞானத்தைப் பார்க்கலாம்.சேவா கிராமத்தில், தலைசிறந்த கல்வியாளரான, பர்ச்சுரே சாஸ்திரி, குஷ்ட ரோக நோயால் மிகவும் துயரப்பட்டார். அவருக்கு, புண்களைக் கழுவி, மருந்து தடவி, உடம்பு பிடித்து விடுவார், காந்திஜி.ஒருநாள்... தன் வழக்கப்படி, காந்திஜி, சாஸ்திரிக்கு உடம்பு பிடித்துவிட்டுக் கொண்டிருந்த போது, சுந்தர்லால் எனும் அறிஞர் அங்கு வந்தார்.வந்தவர், அங்கு இருந்த நிலைமையைப் புரிந்து கொண்டார். 'காந்திஜி... இந்த குஷ்டரோகத்தை போக்கும் வைத்தியம், எனக்கு தெரியும்...' என்றார். 'என்ன அது, சொல்லுங்கள்...' என்றார், காந்திஜி.'கருநாகப் பாம்பு ஒன்றை, ஒரு புது மண் சட்டியில் போட்டு அடைத்து வைக்க வேண்டும். பிறகு, அந்த சட்டியை நெருப்பின் மேல் வைக்க வேண்டும். பாம்பு சாம்பலானதும் அதை தேனில் குழைத்து, இவர் உடம்பில் தடவினால், இவரைப் பிடித்திருக்கும் குஷ்டநோய் நீங்கி விடும்...' என்றார், சுந்தர்லால்.சாஸ்திரியிடம், 'இவர் சொல்லும் வைத்தியத்தை நீங்கள் ஏற்கத் தயாரா...' எனக் கேட்டார், காந்திஜி.இதை கேட்டதும், சாஸ்திரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியது. தன்னிலை மறந்தவர், ஒருசில நொடிகளில் தன்னைக் கட்டுப்படுத்தியபடி பேசத் துவங்கினார்.'பாபுஜி... பாம்பு எனக்கு என்ன தீங்கு செய்தது? எந்த விதமான தீங்கும் செய்யாத பாம்பை, ஏன் கொளுத்த வேண்டும். அதற்குப் பதிலாக என்னை கொளுத்தி சாம்பலாக்கினால், நோய் போய்விடுமே...' என்றார், சாஸ்திரி.மவுனமாக இருந்தார், காந்திஜி.மருந்து சொன்ன அறிஞர் சுந்தர்லாலோ, 'என்ன கருணை... என்ன கருணை...' என, எண்ணினார்.'பாபுஜி... போன ஜென்மத்தில், நான் என்ன பாவம் செய்தேனோ, யாருக்கு என்ன கெடுதல் செய்தேனோ, இந்த ஜென்மத்தில் இப்படித் துயரப்படுகிறேன். மேலும், பாவம் செய்தால், தெய்வம் என்னை விட்டு வைக்குமா...'இந்தப் பாவத்தையும் கட்டிக் கொண்டால், நான் இன்னும் துயரப்படுவேனே... இப்படி பாவம் செய்வதை விட, நான் இறந்து போவதே மேல்...' எனக் கூறினார், சாஸ்திரி.'தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்... இந்த மருந்தை நான், தவறுதலாக சொல்லி விட்டேன்...' என்று மன்னிப்பு கேட்டார், அறிஞர். இப்படிப்பட்ட தகவல்கள், இதிகாச புராணங்களில் நிறைய வரும்.செம்மனச்செல்வி எனும் முதியவளுக்காக, சிவபெருமான் மண் சுமந்து அடிபட்டதும்; அவ்வைக்காக, ஆறுமுகன் மேய்ச்சல் தொழில் புரிந்ததும்; கோபாலர்களுக்காக, கண்ணன் மாடுகளை மேய்த்ததும்; ராமர், குகனை சகோதரனாகக் கொண்டதும் கருணை மட்டுமே. பிரதிபலன் எதிர்பார்க்காத கருணை, அன்பு என்பவை, இதிகாச புராணங்களில் மட்டுமல்ல, எக்காலத்திலும் உண்டு; நம் காலத்திலும் உண்டு என்பதை விளக்குவதே, காந்திஜியின் வாழ்வில் நடந்த நிகழ்வு.அதைப்போல, நம்மால் இருக்க முடிகிறதோ, இல்லையோ, நம்மைச்சுற்றி இருப்பவர்களிடமாவது அன்பு செலுத்துவோம்; அல்லல்கள் நீங்கும்! பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !