ஏவி.எம்., சகாப்தம் (9)
சில கதைகள், நாடகத்திற்கு நன்றாக இருந்தாலும், சினிமாவுக்கு எடுபடாது என்பதை, திலகம் பட தோல்வியின் மூலம் அறிந்தோம். ஜாவர் சீதாராமன் எழுதிய, களத்துார் கண்ணம்மா கதையை கேட்ட என் அப்பாவுக்கு, ரொம்பவும் பிடித்து போகவே, அதை படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.தமிழில், எல்லாரும் இந்நாட்டு மன்னர், அமர தீபம் மற்றும் உத்தமபுத்திரன் படங்கள் மட்டுமல்லாமல், ஜெமினிகணேசன், சாவித்திரி நடிக்க, பல வெற்றி படங்களை இயக்கியவர்; காதல் காட்சிகளை நன்றாக எடுப்பவர் என்று பெயர் பெற்றவர்; தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமான இயக்குனர், டி.பிரகாஷ் ராவ்.ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடிக்க முடிவாகியது.'ஆடாத மனமும் ஆடுதே; ஆனந்த கீதம் பாடுதே...' என்ற பாடல், முதலில், 'ரிக்கார்டிங்' செய்யப்பட்டு, படப்பிடிப்பு ஆரம்பமானது.ஜெமினி, சாவித்திரி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை தனக்கே உரிய பாணியில், லயமாக எடுத்துக் கொண்டிருந்தார், இயக்குனர், டி.பிரகாஷ் ராவ்.இந்நேரத்தில், கதையில் முக்கிய பங்கு வகிக்கும் குழந்தை கதாபாத்திரத்தில், யாரை நடிக்க வைப்பது என்ற விவாதமும், ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. தயாரிப்பு நிர்வாகிகள், பல குழந்தைகளை அழைத்து வந்து காண்பித்தனர்.'மாடர்ன் தியேட்டர்ஸ்'சின், யார் பையன் படத்தில் நடித்த, டெய்சிராணி என்ற குழந்தையின் புகைப்படத்தையும் எடுத்து வந்து காட்டினர்.அப்பாவுக்கு யாரையும் பிடிக்கவில்லை. கதையில் வரும் பாத்திர அமைப்பின்படி, அந்த குழந்தை, சொந்த பாட்டனார் நடத்தும் சிறுவர் விடுதியில், அனாதையாக வளரும் பிள்ளை. கதாநாயகனையும், கதாநாயகியையும் சேர்த்து வைக்கப் போகும் பிள்ளை.அதனால், மனதை கவரும் வசீகர முக அமைப்பு உடையதாக, குழந்தை இருக்க வேண்டும் என்றுஎதிர்பார்த்தார், அப்பா.கதை விவாதத்தின் போது, என் அம்மாவும் உடன் இருப்பார். கதையின் அமைப்பை அவரும் உணர்ந்திருந்தார். அதனால், அக்கம் பக்கத்தில் அவருக்கு தெரிந்த நண்பர்களிடம், 'நடிக்க ஆர்வம் உள்ள பையன்கள் இருந்தால் சொல்லுங்கள்...' என்று கூறியிருந்தார்.இந்த சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து, மகப்பேறு மருத்துவத்தில் சிறந்தவரான பெண் மருத்துவர், சாரா ராமச்சந்திரன் என்பவர், எங்கள் வீட்டிற்கு வந்தார்; அவர், எங்கள் குடும்ப நண்பர்.அவரிடமும், என் அம்மா, நாங்கள் படம் எடுக்கும் விபரத்தை சொல்லி, 'உங்களுக்கு தெரிந்த அழகான பையன் இருந்தால் சொல்லுங்கள்...' என்று கூறியிருக்கிறார்.பரமக்குடி சென்ற, டாக்டர் சாரா ராமச்சந்திரன், பிரபல வழக்கறிஞர் சீனிவாசன் வீட்டில், அழகான ஒரு சிறுவனை பார்த்துள்ளார். 'உங்கள் பையன், சினிமாவில் நடிப்பானா...' என்று கேட்க, 'அவனுக்கு ரொம்ப ஆசை தான். சினிமாவில் நடிப்பதில் எங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை...' என்று கூறியிருக்கிறார், அந்த சிறுவனின் அம்மா.தான் பார்த்த குழந்தையை பற்றி சொல்லி, 'அந்த பையனோடு, அவன் குடும்பத்தினர் இப்போது சென்னைக்கு தான் வந்திருக்காங்க. பார்க்கணும்ன்னா சொல்லுங்க, இங்க வரவழைக்கலாம்...' என்றார், டாக்டர் சாரா.என் அம்மாவும், 'அந்த பையனை உடனே வரச்சொல்லுங்க...' என்று சொல்ல, பையனுடன், எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார், அச்சிறுவனின் அம்மா.அழகான முகம், வசீகரமான கண்கள். அந்த சிறுவனிடம், 'சினிமாவில் நடிக்க உனக்கு விருப்பமா...' என்று அப்பா கேட்க, 'ஆமாம்...' என்று பளிச்சென்று சொன்னான். 'நல்லா நடிப்பியா...' என்ற கேள்விக்கும், 'ம்... நடிப்பேன்...' என்றான். 'உனக்கு தெரிஞ்சத நடிச்சு காட்டு...' என்று சொல்லி, மேஜை மீதிருந்த விளக்கை, அவன் முகத்தில் படும்படி திருப்பி விட்டார், அப்பா.உடனே சிறுவன், 'வரி... திரை... வட்டி... கிஸ்தி...' என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை, கூச்சமின்றி, சிவாஜியை போல் நடித்துக் காட்டினான்.மிகவும் திருப்தி அடைந்த அப்பா, இயக்குனர், டி.பிரகாஷ் ராவிடம், 'பையன் கிடைத்து விட்டான். இவன் தான், நம் படத்தின் குழந்தை நட்சத்திரம்...' என்று அறிமுகப்படுத்தினார். இயக்குனருக்கும் ரொம்ப பிடித்து விட்டது. 'பெயர் என்ன...' என்று கேட்டார், அப்பா. 'கமலஹாசன்...' என்றான், சிறுவன். 'அது என்ன ஹாசன்...' என கேட்டார், அப்பா.'அது, எங்க குடும்பத்துல எல்லா பிள்ளைகளுக்கும், ஹாசன் என்று முடிகிற மாதிரி தான் பேரு வச்சிருக்கோம்...' என்றனர்.அன்று, ஏவி.எம்.,மின், களத்துார் கண்ணம்மா படத்தில் அறிமுகமான சிறுவன், கமலஹாசன் தான், இன்று, மாபெரும் நடிகனாக, உலக நாயகன், சகலகலா வல்லவன்... கமலஹாசன்!சிறுவன் கமலஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை, படமாக்க துவங்கினர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு காட்சியில், அனாதை ஆசிரமத்தில், சிறுவர்கள் வரிசையாக வந்து, தட்டில் நிர்வாகி போடும் ஒரு கரண்டி சாதத்தை வாங்கிப் போவர். 'எனக்கு போதாது... இன்னும் ஒரு கரண்டி போடு...' என்பான், சிறுவன் கமலஹாசன். கோபமான நிர்வாகி, கமலஹாசனை வெளியே தள்ளி விடும் காட்சியை, படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நிர்வாகி தள்ளி விட்ட, 'ஷாட்' எடுத்ததும், சிறுவன் தனியே வந்து விழுவதை எடுக்க ஆரம்பித்தனர். கமலஹாசன் பயந்து, நழுவ முயல, விழுவது சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, 'நானே துாக்கி போடுகிறேன்...' என்று, குழந்தை என்றும் பாராமல், ஒரு ஜடப் பொருளை துாக்கி போடுவது போல, வேகமாக துாக்கி போட்டு விட்டார், இயக்குனர்.'ஷாட்' ஓ.கே., ஆனது. ஆனால், விழுந்ததால் அடிபட்ட வலி தாங்காமல், அழ ஆரம்பித்த சிறுவன் கமல், 'நான் நடிக்க மாட்டேன். இந்த இயக்குனரை எனக்கு பிடிக்கல... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. எனக்கு நடிப்பு வேண்டாம்...' எனக் கூறினான்.அப்போது, சிறுவனை கவனித்துக் கொள்ளும் சகோதரர் சந்திரஹாசனும், மேனேஜர் கணேசனும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும், கேட்கவில்லை, கமல்.'மேனேஜர்... இப்போ என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறியா இல்லையா... நான் நடிக்க மாட்டேன்... நடிக்க மாட்டேன்...' என்று பிடிவாதத்துடன், அழ ஆரம்பித்து விட்டான்.வேறு வழியின்றி, அன்று, 'ஷூட்டிங்'கை, ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது.— தொடரும்.ஏவி.எம்.குமரன்