பைரவரின் நாய்!
'நாயினும் கீழேன்...' என்று, திருவாசகத்தில் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார், மாணிக்கவாசகர். விலங்குகளிலேயே கேவலமானது, நாய். காரணம், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் தன்மை கொண்டது, அது. மற்ற விலங்குகள் இவ்வாறு செய்வதில்லை.அதே நேரம், 'நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா, நன்றி கெட்ட மகனை விட, நாய்கள் மேலடா...' என்று, கவிஞர்களால் போற்றப்படுவதும், நாய் தான்.ஆக, ஒரு வெறுக்க வைக்கும் குணம், ஒரு அற்புதமான குணம்... இவற்றின் கலவையே, நாய். சிவபெருமான், பைரவராக அவதாரம் செய்தது, தீயவர்களை அழிக்க; அதே நேரம், நல்லவர்களுக்கு, அவர் பாதுகாப்பு. பைரவ வழிபாடு, மனிதனுக்கு பாதுகாப்பு தரும். அவரது வாகனமான நாயும், மனிதனுக்கு பாதுகாப்பு தரும். ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும். அதே நாய்க்கு, வெறி பிடித்து விட்டால், யாரையும் விட்டு வைக்காது. கடித்து குதறி விடும். பைரவரின் குணமும் அதுவே.தன்னை நம்பி மனதார வணங்குவோரை, சகல துன்பங்களில் இருந்தும் பாதுகாப்பார், பைரவர். தன் பக்தர்களுக்கு யாராவது கெடுதல் செய்தால், அவர்களைத் துவம்சம் செய்து விடுவார்.கலியுகத்தில் வேதங்கள், நாய் வடிவில் இருப்பதாக ஐதீகம். வேதம் சொன்னபடியே உலகம் நடக்க வேண்டும். இந்த ஆன்மிகத் தத்துவத்தின் அடிப்படையிலும், சிவ அம்சமான பைரவருக்கு, நாய் வாகனம் தரப்பட்டது. இதனால், இந்த நாயை, 'வேதஞாளி' என்பர். 'சாரமேயன்' என்றும் இதற்கு பெயருண்டு. இதற்கு, 'போர்க்குரல் கொடுப்பது...' என்று பொருள்.நாயை, ஒரு சங்கிலியில் கட்டி அழைத்துச் செல்லும் போது, எதிரே எதிரிகளைக் கண்டால், நம்மையும் சேர்த்து இழுத்தபடி, குரைத்து ஓடும். நண்பர்களைக் கண்டால், வாலை ஆட்டி குழையும். பைரவரும் இத்தகைய குணம் உடையவரே.'நாற்பது வயதில் நாய் குணம்...' என்று சொல்வர். இது, ஒருவரை குறைத்து மதிப்பிட சொல்லப்படவில்லை. 40 வயதில், நா - நாக்கு குணம் என்பதே இப்படி மருவி விட்டது.இளவயதில் என்ன பேசினாலும், வயசுக்கோளாறில் இப்படி பேசுகிறான் என்று விட்டு விடுவர். 40 என்பது, பக்குவத்தின் ஆரம்பம். அப்போது, நாக்கு நல்ல குணமான, சாந்தமான வார்த்தைகளையே பேச வேண்டும். பைரவர் வழிபாடு செய்பவர்கள், வெறும் பக்தியை மட்டும் செலுத்தாமல், நற்குணமுள்ள வார்த்தைகளைப் பேசினால், மகிழ்ந்து அருள்புரிவார்.கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியில் அவதாரம் செய்தார், பைரவர். இந்த நாளை, 'பைரவாஷ்டமி' என்பர். டிச., 8, பைரவாஷ்டமியன்று, பைரவரை வணங்குவோருக்கு எந்தக்குறையும் வராது.தி. செல்லப்பா