அழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்! (4)
அசர்பைஜான் நாட்டில், பாகுவிலிருக்கும் தமிழ் சங்கம், மலையாளிகள் சங்கம் மற்றும் அசர்பைஜான் இந்தியர் சங்கம் ஆகியவை, இந்தியாவின் அனைத்து பண்டிகைகளையும் இணைந்து கொண்டாடும். அதில், இந்தியர்களின் குடும்ப நண்பர்களாக இருக்கும் அசர்பைஜானியர்களும், தங்கள் குடும்பத்தினருடன் வந்து கொண்டாடுவர்.அசர்பைஜானியர்களுக்கு, பாலிவுட்டின், 'சென்டிமென்ட் மூவிஸ்' என்றால் உயிர். இந்நாட்டின் பெரியவர்கள், ராஜ்கபூர், மிதுன் சக்ரவர்த்தி திரைப்படங்களை சேகரித்து வைத்து, அதை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்து ரசிக்கின்றனர். இன்றைய தலைமுறையினர், ஷாரூக்கான், அமீர்கானின் ரசிகர்கள்.பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், அசர்பைஜான், 18வது இடத்தில் இருக்கிறது. நடு இரவு வரையிலும், மக்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதில், இளம் பெண்களும் உண்டு. 24 மணி நேர, 'சூப்பர் மார்க்கெட்கள், மால்கள், ரெஸ்டாரண்டுகள்' இருப்பதால், இரவிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.அசர்பைஜான், 160 ஆண்டுகளாக, ரஷ்யர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், மதுபான பிரியர்களாக இருக்கின்றனர், மக்கள். உள்ளூரில் தயாரிக்கப்படும், 'ஒயின்' மற்றும் 'வோட்கா' இங்கே மிக பிரபலம்.வெள்ளிக்கிழமை மாலை வந்து விட்டால், பாகுவின் மையத்திலிருக்கும், 'பவுண்டன் ஸ்கொயர்' ஏரியாவில், திருவிழா களை கட்டுகிறது. நடுநிசி தாண்டி, 2:00 மணி வரையிலும் ஒரே கொண்டாட்டம், உற்சாகம் தான்.'ஒவ்வொரு வீட்டிலும், அனைவரும் வாரம் ஐந்து நாட்கள் கடுமையாக உழைப்பதால், 'வீக் எண்ட்' கொண்டாட்டத்தை தவற விடுவதில்லை. வாழ்க்கையை அந்தந்த தருணத்தில் கொண்டாடி விட வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவர்கள், அசரி மக்கள்...' என்கிறார், தமிழ் சங்கத்தின் தலைவர், பாபு.தமிழ் சங்கத்தின் நண்பர்களுடன் சேர்ந்து, நானும், 'பவுண்டன் ஸ்கொயரில்' உள்ள நிஜாமியா தெருக்களில், இரவு, 2:00 மணி வரை வலம் வந்தேன். இரவைப் பகலாக்கும் வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன. 'ரெஸ்டாரண்டு'களில், அசரி மொழி பாடல்கள் மெலிதாக ஒலிக்கின்றன; இடையிடையே, பாலிவுட் பாடல்களும் ஒலிக்கின்றன.அப்பாடல்களை ரசித்தபடி, இளைஞர்கள், 'வோட்கா' அருந்துகின்றனர், 'ஹூக்கா' புகைக்கின்றனர். இளம் பெண்கள், உள்ளூரின் சிறப்பு பானமான, 'ஒயினை' சுவைக்கின்றனர்.அடுத்த நாள் காலையில், துணை ஜனாதிபதியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பது நினைவுக்கு வர, பிரிய மனமில்லாமல், அங்கிருந்து ஓட்டல் அறைக்கு திரும்பினேன்.ஊர் திரும்பும் நாள் வந்தது. நான் தங்கியிருந்த ஓட்டலில், பொருட்களை, 'பேக்' செய்து, குடிநீருக்காக, தொலைபேசியில், 'ரூம் சர்வீஸ்' எண்ணை அழுத்தினேன். அடுத்த மூன்று நிமிடங்களில், ஒரு இளைஞர், இரண்டு குடிநீர் பாட்டில்களுடன் அறைக்கு வந்தார்.என்னைப் பார்த்து, புன்னகைத்து, 'ஹலோ' சொன்னார். பதிலுக்கு நானும் புன்னகைத்து, அவரின் பெயரை கேட்டேன். அடா ரசலோவ் என்றார். பின், என்னிடம், 'எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள், எங்கள் நாடு பிடித்திருக்கிறதா...' என, கேட்டார். 'இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்...' என்றேன்.அவர், புரிந்தும், புரியாதது மாதிரி தலையசைத்தார். நான், 'ராஜ்கபூர், ஷாரூக்கான் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்...' என, மீண்டும் கூறினேன். உடனே, அவர் முகம் மலர்ந்து, 'ஐ நோ... ஐ நோ தெம்; ஐ லவ் தெம் வெரிமச்...' என்றார். அவருடைய முகத்தில், கூடுதலாக அன்பும், நட்பும் மிளிர்ந்தது. 'எங்கள் நாட்டுக்கு வந்ததற்கு வந்தனம்...' என்றார்.இது தான், அசர்பைஜானியர்களின் விருந்தோம்பல் குணம். இன்னும் சற்று நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பது நினைவுக்கு வர, மீண்டும் ஒருமுறை இங்கே வந்து, குறைந்தது ஒரு வாரம் தங்கி, எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது. இந்த ஆசையும், என்றாவது ஒரு நாள் நிறைவேறி விடும். கால் நுாற்றாண்டுக்கு முன், கால் பதித்த தமிழர்!சரியாக, 25 ஆண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து, அசர்பைஜான் வந்திறங்கிய தமிழரான, பாபு சாஹிப், அங்கே கால் பதித்திருக்கும் இந்தியர்களில் முதலாமவர் என சொல்லலாம். அந்நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே, 'செட்டில்' ஆகியிருக்கும், பாபு, 2002ல், பாகு தமிழ் சங்கத்தை துவக்கி, அப்போதிருந்தே அதன் தலைவராக தொடர்கிறார்'கேட்டரிங்' நிறுவனம் ஒன்றில், 'எக்ஸிகியுட்டிவ் செப்' ஆக பணிபுரியும், பாபு, அசர்பைஜானுக்கான இந்திய துாதரகத்தோடு நேரடி தொடர்பில் இருக்கிறார். இங்கே, வேலை மற்றும் படிப்பிற்காக வந்திருக்கும் தமிழர்கள், தங்கள் தாய் மண்ணின் வேர்களை மறக்காமலிருக்க பல, 'கெட் டு கெதர்' நிகழ்ச்சிகளை நடத்துகிறார்தமிழர்களின் வேலை ஒப்பந்தம் மற்றும், விசா பிரச்னை ஆகியவற்றை, இந்திய துாதரகம் மூலம் தீர்த்து வைக்கிறார். 'அசர்பைஜானில் நல்ல சம்பளத்தில், வேலை வாங்கித் தருகிறேன்...' என, யாராவது ஆசை காட்டினால், அவர்களிடம் கமிஷன் பணம் தருவதற்கு முன், பாபுவிடம் அது குறித்த தகவல்களை தெரிவித்து, வேலையும், விசாவும் சரியா அல்லது போலியா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் அவருடைய, 'வாட்ஸ் ஆப்' எண்: 00994503656424. ஆனந்த் நடராஜன்