உள்ளூர் செய்திகள்

சந்திரபாபு (10)

'திருமணத்துக்கு முன், என் காதல் மனைவிக்கு, நேர்ந்த அவலம் பற்றி அவளே கூறியதைக் கேட்டு அதிர்ச்சியும், அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. அன்றிரவு, அளவுக்கதிகமான விஸ்கியை குடித்து, மயக்கத்தில் ஆழ்ந்தேன். மறுநாள், நண்பர் மணிவேலுவை பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது, அவர் வீட்டுக்கு போன் செய்து, என்னிடம் பேசிய என் வீட்டு சமையற்காரர், 'ஐயா, உடனே புறப்பட்டு வாங்க; அம்மா விஷம் சாப்பிட்டுட்டாங்க...' என்று பதறினார்.மணிவேலுவையும் அழைத்து, வீட்டுக்கு விரைந்தேன்.குளத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட தாமரை மலர் போல் கட்டிலில் கிடந்தாள், ஷீலா.என்னைப் பார்த்ததும் கதறி அழுதாள். உடனே, என் குடும்ப நண்பர், இயக்குனர், கே.சுப்ரமணியத்தை போனில் அழைத்தேன்; அவரும் வந்தார்.முன்தினம் என்னிடம் சொன்னவற்றை எல்லாம் சமையற்காரரிடம் சொல்லி, 'பாபு என்னை உளமாற விரும்புகிறார்; அவருக்கு நான் துரோகம் செய்ய விரும்பவில்லை...' என்று சொல்லி, விஷத்தை சாப்பிட்டிருக்கிறாள்.டாக்டர்கள் வந்தனர்; சிகிச்சை நடந்தது. பிழைத்துக் கொண்டாள், ஷீலா.இரண்டு நாட்களுக்கு பின், என்ன செய்வது என்று தெரியாத நிலையில், நடைபிணமாக வீட்டிலேயே உட்கார்ந்திருந்தேன்.பி.ஆர்.பந்துலு வந்தார்; சபாஷ் மீனா படப்பிடிப்புக்கு என்னை அழைத்துப் போனார். படப்பிடிப்பை முடித்து, இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதத்தை எனக்கு எழுதி வைத்து, இயக்குனர், கே.சுப்ரமணியத்தின் வீட்டுக்கு போய் விட்டாள், ஷீலா.கடிதமா அது, உணர்ச்சிப் பிரவாகம்... ஒவ்வொரு வார்த்தையிலும், ஷீலாவின் இதயமே பேசியது. எந்த ஒரு பெண்ணும் இவ்வளவு மகத்தான ஒரு கடிதத்தை எழுதி விட முடியாது. அவளுக்கு, என்னிடம் இருந்து விடுதலை கொடுக்கத் தீர்மானித்தேன்... - ஷீலாவோடு வாழ்ந்த அந்த சில நாட்களைப் பற்றி, இப்படி கூறியுள்ளார், சந்திரபாபு.சந்திரபாபுவும், ஷீலாவும் பிரியப் போகும் நாள் அது...'இயற்கை வந்து பிரித்தாலன்றி பிரிய மாட்டோம்...' என, உறுதி எடுத்து இணைந்து, அதன் அடையாளமாகத் தன் கை விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி, சந்திரபாவிடம் தந்தார், ஷீலா.உணர்ச்சி அற்ற ஜடம் போல் அதை வாங்கிக் கொண்டார்.கலங்கிய கண்களுடன், 'போகிறேன்...' என்றார், ஷீலா.மவுனமாகத் தலையாட்டினார்.மதுரைக்கு, தன் தாய் வீட்டுக்குச் சென்று, பின், திருவனந்தபுரம் போய், அங்கிருந்து கொல்லம் துறைமுகம் மூலமாக, கப்பலில் லண்டனுக்கு புறப்படுவதாக ஏற்பாடு.திருமணத்துக்கு வந்த லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அன்பளிப்புகளை ஷீலாவிடம் அள்ளிக் கொடுத்து, 'இவை என்னிடம் இருக்க வேணாம்...' என, உடைந்த குரலில் சொன்னார், சந்திரபாபு.அப்பொருட்கள் தன்னிடம் இருந்தால், ஷீலாவின் நினைவுகள் தன்னை வாட்டி எடுக்கும் என்றே, அனைத்தையும் அள்ளிக் கொடுத்தார்.இருவரும் மதுரை சென்று, பின், திருவனந்தபுரம் சென்றனர். அவரிடம் விடைபெற்று கப்பலில் புறப்பட்டார், ஷீலா. கப்பல் ஒரு புள்ளியாக மறையும் வரை, கண்ணீர் வழிய, அங்கேயே நின்றிருந்தார், சந்திரபாபு.ஷீலா தன்னை விட்டுப் பிரிந்து போன பின், சென்னையில் இருக்கவே அவருக்கு பிடிக்கவில்லை. சினிமா உலகம், சொந்தங்கள் என, எல்லாவற்றையும் விட்டு விலகி, எங்காவது ஓடி விட நினைத்தார். அதன் விளைவாக, யாரிடமும் கூறாமல் டில்லிக்கு சென்றார்.அங்கே, அசோகா ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கியவர், வேறு எதைப் பற்றியும் நினைக்கக் கூடாது என, நாள் முழுவதும் மதுவில் மூழ்கிக் கிடந்தார். அவரது மனமோ, 'அருகில் தான், ஹிமாசலப் பிரதேசம்; பேசாமல் அங்கே சென்று ஞானியாகி விடு; பந்த பாசங்கள் தூக்குக் கயிறுக்குச் சமம்; எப்போதுமே கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கும். போ... துறவி வாழ்க்கை தான் உனக்கு ஏற்றது. காவி உடை அணிந்து, பால், பழம் உண்டு, இறைவனடி சேர்ந்துவிடு; கிறிஸ்தவனும் முனிவனாகலாம்...' என, எண்ணியது.இந்நிலையில், சென்னையில் இருந்து, ஓட்டல் அறைக்கு போன் வந்தது...'நான் இங்கிருப்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்...' என்ற சந்தேகத்துடன் போனை எடுத்தார், சந்திரபாபு.'என்ன பாபு... எங்கள ஏமாற்ற முடியுமா... எப்படிக் கண்டுபிடிச்சேன் பாத்தாயா... ரெண்டு நாளா, ஒரே தேடும் படலம் தான். மனசில என்னடா நினைச்சுக் கிட்டிருக்கே... உடனே புறப்பட்டு வா; எல்லாம் நல்லபடியா முடியும்...' என்றார், எதிர்முனையில், நண்பர் மணிவேலு!'வர முடியாது...' என, ஒரே வார்த்தையில் சொல்லி, போனை வைத்து விட்டார், சந்திரபாபு.அதன்பின், டில்லியில் உள்ள சந்திரபாபுவின் நண்பர், செல்வம், இரண்டு போலீசாருடன் வந்து, சந்திரபாபுவை வலுக்கட்டாயமாக விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.சந்திரபாபு - ஷீலாவின் திருமணம் விவாகரத்தில் முடியப் போகிறது என்றதும், சினிமா உலகம் பல்வேறு கேலி பேச்சுக்கள் பேசின.சந்திரபாபுவை உண்மையாக அறிந்தவர்கள் மட்டும், அவர் நிலை கண்டு ஆறுதல் கூறினர். இதைப் பற்றி சந்திரபாபு, 'என்னைப் பற்றி, ஏதேதோ வதந்திகள் பரவியது; வதந்திகளுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்... 'ஐயா, என் திருமண வாழ்க்கை இப்படிப்பட்டது...' என்று ஒவ்வொருவரையும் தேடிப் போயா உண்மைய சொல்ல முடியும்... அதனால் மனதுக்குள் அழுது கொண்டேன். வேறென்ன செய்ய முடியும்!'வதந்திகள் என் வாழ்க்கைய மட்டுமின்றி, தொழிலையும் பாதித்தது. 'கட்டியவளுடனேயே ஒழுங்காக வாழ முடியலை; இவன் எங்கே ஒழுங்காக நடிக்கப் போகிறான்...' என, பலர் என்னை ஒதுக்கினர்.'இதற்காக, நானே தேடிப் போய், 'உண்மை இதுதானய்யா... நீங்க தவறாகப் புரிந்து விட்டீர்கள். எனக்கு, 'சான்ஸ்' கொடுங்கள்...' என்றா கேட்க முடியும்!'எனக்குத் திறமை இருக்கிறது; என்னை நம்பியவர்கள் வரட்டும் என, காத்திருந்தேன்; யாரும் வரவில்லை. தனிமை என்னை வாட்டியது. அதன் விளைவு, என் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது...' என்று தன் அப்போதைய நிலையைப் பற்றி, வருந்திக் கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு பின், லண்டனில் ஷீலா, இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கேள்விப்பட்டார், சந்திரபாபு. உடனே, அங்கிருக்கும் தன் நண்பர், பிரான்சிஸ்க்கு, 'ஷீலா, திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கேள்விப் பட்டேன்; அது உண்மையா... யார் அந்த நபர், நல்லவனா, கெட்டவனான்னு விசாரி...' என்று கடிதம் எழுதினார்.அதைத் தொடர்ந்து, பிரான்சிஸ்க்கும், சந்திரபாபுவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தொடர, ஷீலாவிடம் இருந்தும் சந்திரபாபுவுக்கு ஒரு கடிதம் வந்தது.— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.- முகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !