உள்ளூர் செய்திகள்

கலெக்டரண்ணன்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம்.அன்று, மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.ஏழை, எளிய மக்கள், கையில் மனுவும், கண்ணீருடன், மனதில் வேதனையோடு மெல்ல மெல்ல நகர்கின்றனர்.'எப்படியும் அதிகாரியை பார்த்து விடுவோம்... அவர் மூலம் நம் கோரிக்கை நிறைவேறும்...' என்ற நம்பிக்கையுடன், மக்கள், தங்கள் முறைக்காக காத்திருந்தனர்.வரிசையில் நிற்பவர்களை பார்த்தார், கலெக்டர் கந்தசாமி. அவர்களில் ஒருவராக நின்றிருந்த, சிறு வயது பெண்ணின் ஏழை கோலமும், கண்களில் கண்ணீருடன் சோகமும், அவர் மனதை நெருடியது.அருகே அழைத்து, 'என்ன தாயி... உன் பிரச்னை?' என, விசாரித்தார்.கனத்த விம்மலுடன், தன் கதையை விவரித்தார், ஆனந்தி.தி.மலை மாவட்டம், ஆரணியை அடுத்த, கனி கிலுப்பை கிராமம், அவர் சொந்த ஊர். தந்தை வெங்கடேசன், கூலி தொழிலாளி. தாய் அனிதா, சத்துணவு அமைப்பாளர். தங்கை அமுதா, தம்பி மோகன் மற்றும் பாட்டி ராணி.சிறுநீரக கோளாறால் தந்தை திடீரென இறந்துவிடவே, தாய் அனிதா, குடும்ப பாரத்தை சுமந்தார். இந்நிலையில், திடீரென தாய் அனிதாவும், கர்ப்பப்பை கோளாறால் இறந்தார்; சில நாட்களில், கீழே விழுந்த பாட்டி ராணி, தலையில் அடிபட்டு , நினைவு திரும்பாமல், இறந்து போனார்.குடும்ப தலைகள் அடுத்தடுத்து இறந்த நிலையில், குழந்தைகள் மூவரும், ஆதரவின்றி தனித்து, 'சாப்பிட்டியா...' எனக் கேட்க, ஆள் இல்லாமல், தவித்தனர்.எத்தனை நாட்கள் அழுது கொண்டிருப்பது, பசிக்கிற வயிறுக்கு கண்ணீர் உணவாகாதே...பிளஸ் 2 முடித்த, 19 வயதான ஆனந்தியும், 17 வயதான, தங்கை அமுதாவும், விவசாய கூலி வேலைக்கு சென்று, அதில் வரும் சொற்ப வருமானத்தில் பசியாறி, தம்பியை படிக்க வைத்தனர். ஆனாலும், வருமானம் போதாததால், அவர்கள் மூவரும், பட்டினிக்கு ஆளாகினர்.இந்நிலையில், 'தாய் பார்த்த சத்துணவு அமைப்பாளர் வேலையை எனக்கு கொடுத்தால், தங்கை, தம்பியுடன் கவுரவமாக பிழைத்துக் கொள்வோம்...' என, எழுதிய மனுவுடன், கலெக்டரை பார்க்க வந்திருந்தார், ஆனந்தி.அரசு விதிப்படி, 21 வயதில் தான், சத்துணவு அமைப்பாளர் வேலை தர முடியும் என்பதால், மனுவை வாங்கிய கலெக்டர் கந்தசாமி, 'நம்பிக்கையுடன் போம்மா... நல்லது நடக்கும்...' எனக் கூறி, ஆனந்தியை அனுப்பி வைத்தார்.இது நடந்து, சில நாட்களுக்கு பின்-திடீரென ஒரு நாள், ஆனந்தியின் வீட்டு வாசலில், கலெக்டர் கந்தசாமியின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய கலெக்டர், எடுத்து வந்த தின்பண்டங்களை மூன்று பேருக்கும் கொடுத்தார். பின், 'வீட்டில் என்ன இருக்கு... வாங்க, ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம்...' என, அவர்களுடன் சாப்பிட்டார்.பின், அரசு முத்திரையிட்ட பேப்பரை, ஆனந்தியிடம் கொடுத்து, 'படித்து பாரும்மா...' என்றார்.நடுங்கும் விரல்களுடன் பேப்பரில் உள்ள வாசகத்தை படித்த ஆனந்தி, ஆனந்த கண்ணீர் பொங்க, பெருங்குரலெடுத்து அழுது, கலெக்டரின் காலில் விழுந்து வணங்கினார்.தாய் அனிதா பார்த்த, சத்துணவு அமைப்பாளர் வேலையை, ஆனந்திக்கு கொடுப்பதற்கான அரசு உத்தரவு தான், அந்த முத்திரை தாளில் இருந்தது. ஆனந்தி என்ற தன் பெயருக்கு பொருத்தமாக, அன்று தான் ஆனந்தத்தில் திளைத்தார்.இது, எப்படி நடந்தது...மனு கொடுத்து போன பின், கலெக்டர் கந்தசாமி, சிறப்பு அனுமதியின்படி, ஆனந்திக்கு, அவர் கேட்ட சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைக்க, முயற்சித்ததன் பலன் தான்.இதற்கு பிறகும் தொடர்ந்தது, கலெக்டரின் கனிவு.சத்துணவு அமைப்பாளர் வேலை பார்த்தபடியே, தொலை துார கல்வியில் பட்டப்படிப்பு படிப்பதற்கான அனுமதி மற்றும் அதற்கான முழு கட்டணத்தையும், தான் ஏற்பதற்கான ஆவணங்களை, ஆனந்தியிடம் கொடுத்தார்.அடுத்து, ஆனந்தியின் தங்கை அமுதா, 'ரெகுலர்' மாணவியாக, எவ்வித கட்டணமும் இன்றி கல்லுாரி படிப்பை தொடர, அதற்கான சான்றுகளை வழங்கினார். தன் வாகனத்திலிருந்து இறக்கிய புது சைக்கிளை, ஆனந்தியின் தம்பி மோகனுக்கு பரிசளித்து, 'பள்ளிக்கு, நடந்து போக வேண்டாம். சைக்கிளில் போய் வா...' என்று கூறி, வாழ்த்தினார்.மேலும், 'இது, ஆரம்பம் தான். அவ்வப்போது வருவேன்; ஒரு அண்ணனாக...' என்று சொல்லி, கிளம்பினார், கலெக்டர் கந்தசாமி.எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !