உள்ளூர் செய்திகள்

சுகமான சுமை!

ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!புராண காலங்களில், அரக்கர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தது போல, தற்காலத்தில் மதுவெனும் அரக்கன், குடும்பங்கள் பலவற்றை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான். குடிகாரர்களால் இளைய சமுதாயம் ரொம்பவே கெட்டுப் போகிறது. ஒரு குடிகாரத் தந்தை, தாயை காரணமின்றி அடிக்கும்போது, அதைப் பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்கள் வெந்து போகின்றன.பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்தது ஏன் தெரியுமா? பெற்ற குழந்தைகளை சரிவர கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான். 'கூர்மம்' என்றால், ஆமை. ஆமையை தன் அவதார நோக்கத்திற்கு அவர் பயன்படுத்தக் காரணம் என்ன?ஒரு கிணற்றில், தன் குட்டியுடன் வசிக்கும் ஆமையை, குட்டியிடமிருந்து பிரித்து, வேறொரு கிணற்றில் கொண்டு போய் விட்டாலும், தாய் ஆமை, குட்டியையே நினைத்துக் கொண்டு இருக்குமாம். குட்டி சாப்பிட்டதோ, இல்லையோ என்ற எண்ணத்தைத் தவிர, அதற்கு வேறு எதுவும் இருக்காது. தாய் ஆமையின் இத்தகைய இடைவிடாத நினைப்பினால், குட்டியின் வயிறு நிரம்பி விடுமாம். தான் எங்கிருந்தாலும், தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள தாய் ஆமையைப் போல, ஒரு குடும்பத் தலைவனும், எந்தச் சூழலிலும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். நாமே குடித்து அழிந்தால், நம் குழந்தைகளும் அப்படித்தானே ஆகும் என்ற சிந்தனை எழ வேண்டும்.அது மட்டுமல்ல... ஆமைக்கு இன்னொரு விசேஷ சக்தியும் உண்டு. அது, தன் ஓட்டுக்குள் தன் உறுப்புகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும் சக்தியுடையது. அடக்கம் என்றால் பயந்து கிடப்பதல்ல; பணிவு என்று அர்த்தம். எவ்வளவு பணம், பதவி வந்தாலும் பணிவுடன் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனதை அடக்கி வாழ வேண்டும்.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்கிறார் வள்ளுவர். ஆமை ஓட்டுக்குள் தன் உறுப்புகளை அடக்கியிருப்பது போல, மனிதனும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் அடக்கினால், அது ஏழு பிறவிக்கும் நன்மை தரும் என்பது இதன் பொருள்.ஆமையிடம் இத்தகைய அபூர்வ சக்திகள் <உள்ளதன் காரணமாக, பக்தர்களைக் காக்கும் பரந்தாமன், ஆமை வடிவத்தில் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரம் ஆனி மாதம், தேய்பிறை ஏகாதசியன்று நிகழ்ந்தது.ஒரு காலத்தில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் ஏற்பட்டது. தேவர்கள் தரப்பில் நிறைய பேர் இறந்தனர். அசுரர்கள் தரப்பில் இறப்பு இருந் தாலும், அவர்களது குருவான சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த அமிர்த சஞ்சீவினி மந்திரத்தால், இறந்தவர்களை உயிர்ப்பித்து விட்டார். எனவே, அசுரர்களின் பலம் கூடியது. தேவர்களும் அதே சக்தியைப் பெற விரும்பினர். அமிர்தம் குடித்தால், இறப்பு இல்லை என அறிந்து, அமிர்தம் பெற பாற்கடலைக் கடைய திட்டமிட்டனர்.பெருமாளின் ஆலோசனைப்படி, அசுரர்களையும் இந்தப் பணிக்கு சேர்த்துக் கொண்டனர். வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி, மந்தரமலையை மத்தாக்கி கடலுக்குள் இறக்கி கடைய முயன்ற போது, மந்தரமலை கடலுக்கு அடியில் சிக்கி, சுற்ற மறுத்தது. உடனே, பெருமாள் ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்றார். மந்தரமலையை தன் முதுகில் தாங்கி, அது சுற்றுவதற்கு ஆதாரமாக நின்றார். அமிர்தம் வெளிப்பட்டது. தேவர்களும் சாகாநிலை பெற்றனர்.இந்த நிகழ்ச்சி மூலம் இன்னொரு படிப்பினையும் நமக்கு கிடைக்கிறது. குடும்பம் என்றால் பாரம் இருக்கத்தான் செய்யும். அதை குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளோர் சுகமான சுமையாக ஏற்க வேண்டும். ஜோதிட ரீதியாக சனிதிசை, ஏழரைசனி, அஷ்டமசனி, கண்டகசனி நடப்பவர்கள் கூர்மத்தை வழிபடுவது நல்லது. ஸ்ரீரங்கம் தசாவதார கோவில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகரம் தசாவதார கோவில், மதுரை அழகர்கோவில் ஆகியவற்றில் கூர்ம அவதார பெருமாளை தரிசிக்கலாம். அந்தப் பரந்தாமன், நமக்கு எல்லா வளத்தையும் அருளட்டும்.***தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !