முரண்பாடுகள்!
சாம்பசிவன் அமர்ந்திருந்ததைப் பார்ப்பவர்களுக்கு, அவர் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போல் தோன்றியிருக்கும். ஆனால், அவர் அமர்ந்திருந்த இடமோ, அவர் கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து ஆண்டுகள், வேலை பார்த்த இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். இன்னும் இருபது நாட்களில், வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகும், அவர் ஒரு ஆராய்ச்சியாளர்.வெளிநாடுகள், மூன்று தலைமுறைகளுக்கு முந்திய ஆராய்ச்சியில், முன்னேறி இருக்கும்போது, இவர்கள் இன்னும் நான்கு தலைமுறைகளுக்கும் பிந்தைய, ஆராய்ச்சி முயற்சிகளில், ஜல்லியடித்துக் கொண்டிருப்பவர்கள்.அதனால், ஒரு பாதகமுமில்லை. மாதா மாதம் சம்பளம் வரும் வரையிலும், அவ்வப்போது கருத்தரங்குகளில் பங்கு பெறுவதற்காக, அரசு செலவில் வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று வர வாய்ப்பு உள்ள வரையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, பதவி உயர்வு கிடைத்துக் கொண்டிருக்கும் வரை, வேண்டிய அளவு, சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும் வரையில், சாம்பசிவன் போன்றோருக்கு ஒரு கவலையும் இல்லை.அவருடைய ஒரே மகனும், மருமகளும், பேரக் குழந்தைகளும் அமெரிக்க மண்ணில், ஆழமாக வேரூன்றி விட்டனர்.தான் ஓய்வு பெறும்போது வரக்கூடிய, சில, பல லட்சங்களை, எப்படி பத்திரமாக முதலீடு செய்து, வட்டி வாங்கலாம் என்பது பற்றிய யோசனையில் ஆழ்ந்து போயிருந்ததுதான், அவர் யோக நிஷ்டையில் இருப்பது போலிருந்தது.''சாம்பசிவன் சார்...''சாம்பசிவனுக்கு காதில் விழவில்லை. கண்களும், செவிகளும் மூடியே இருந்தன.''சார்... சாம்பசிவன் சார்...''என்ன கர்ணகடூரமான குரல்! அவருடன் இணைந்து வேலை செய்யும், காமாட்சி என்ற ஆராய்ச்சியாளிதான்.திடுக்கிட்டுக் கண் விழித்தார் சாம்பசிவன். 'நான், அறவே வெறுக்கும், இந்த கிழவி, எதற்கு என் முன் வந்து நின்று, கூக்குரல் போடுகிறாள்...' அவருக்கு வெறுப்பு மண்டியது. இருந்தாலும், அதை சாதுர்யமாக மறைத்து, முகத்தில் எந்தவிதமான பாவங்களும் காட்டாமல், ''ஹும்... என்ன... என்ன வேணும்?'' என்றார். குரலில் சற்று எரிச்சல் வெளிப்படத்தான் செய்தது.விஷமமாகச் சிரித்தாள் காமாட்சி.''என்ன டாக்டர் சார் தூங்கிட்டீங்களா... இனிமே என்ன... நிம்மதியா வீட்டிலேயே தூங்கலாம்.''அசட்டுச் சிரிப்பு சிரித்தார் சாம்பசிவன்.''சரி சரி... இப்ப என்ன விஷயம்?'' என்றார். இவள் ஒரு விஷமி! இவளிடம் வாய் கொடுக்காமல் இருப்பது தான் நல்லது என்று, அவருக்குத் தெரியும்.''எல்லாம் உங்க ரிடையர்மென்ட் பத்தித் தான். நம்ம இன்ஸ்டிடியூட்டில் ஓய்வு பெறும்போது, பிரிவுபசார விழா நடத்துவோம் இல்லையா... அதைப் பத்தி பேசத்தான்; உங்களுக்கு நடத்தணுமே?'' என்றாள்.அவள் குரலில், ஏதோ கேலி ஒளிந்திருப்பதைப் போல், சாம்பசிவனுக்குத் தோன்றியது. முகத்தை சற்று சீரியஸாக வைத்து, ''ஹு ஹும்... அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை,'' என்றார்.கண்களை அகல விழித்தாள் காமாட்சி.''என்ன சார் இப்படிச் சொல்றீங்க... நீங்க இத்தனை வருஷம், இந்த நிறுவனத்துக்காக வேலை செஞ்சுருக்கீங்க. அதுக்காகவாச்சும் விழா நடத்த வேண்டாமா? நம்ப செக் ஷன்ல எல்லாரும் உங்களுக்கு ஸ்பெஷலா, ஏதாவது செய்யணும்ன்னு சொல்லிட்டு இருக்காங்க,'' என்றாள் காமாட்சி.இது சுத்தப் பொய் என்று சாம்பசிவனுக்கு தெரியும். இருந்தாலும், இவளையும் இவளின், இந்த அடாசு வம்பையும் எப்படி நறுக்குவது என்று, அவருக்குப் புரியவில்லை.முகத்தை பரிதாபமாக வைத்து, ''அதெல்லாம் சும்மா... இந்த ஆபீஸ்ல எனக்கு என்ன மரியாதை இருக்கு? மூன்று தடவை எனக்கு பிரமோஷன் கிடைக்க விடாம செய்தவங்கதானே! இப்ப என்ன பிரிவுபசாரம் வேண்டி கிடக்கு,'' என்றார்.''வாஸ்தவம் தான் சார். ஆனா, அப்புறமா கொடுத்துட்டாங்கள்ல! அது போதாதா,'' என்றாள் நக்கலாக.சாம்பசிவனுக்கு, காமாட்சியை ஓங்கி அறைய வேண்டும்போல் இருந்தது. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டார். இவளிடம், மேலும் மேலும் பேசினால், நமக்கு கிடைப்பது அவமானம்தான் என்று புரிந்து கொண்டு, ''சரி... ஏதோ செய்யுங்க,'' என்றார் எரிச்சலுடன்.''உங்க பிரிவுபசார விழாவுக்கு பெங்களூரிலிருந்து டாக்டர் சேஷன் வரப்போறதா சொல்லியிருக்காராம்,'' என்றாள் காமாட்சி.சாம்பசிவன் மறுபடியும் திடுக்கிட்டார். 'சேஷ் பெரிய ஆணவக்காரனாச்சே... அவன், எதற்கு இங்கு வருகிறான்... அதுவும் என்னைப் பற்றிப் பேச...' என்று, மனத்திற்குள் நினைத்துக் கொண்டாலும், வெளியில், ''ஓ... அப்படியா!'' என்றார்.''ஆமா சார்; நம்ப தலைவர் தான் கூப்பிட்டிருக்கார். அவருக்கு, சென்னையில ஏதோ ஒரு மீட்டிங் இருக்காம்; அதோட சேர்ந்து, இதையும் அட்டெண்ட் செய்யறேன்னு சொல்லியிருக்காராம்.'''அதானே பார்த்தேன்...' என்று, மனசுக்குள் சொல்லிக் கொண்ட சாம்பசிவன், ''சரி...செய்யுங்க,'' என்று கூறி, தனக்கு முன்னிருந்த கணினியைப் பார்க்க ஆரம்பித்தார். காமாட்சியை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்பது தான், அவருடைய அப்போதைய வேலை. காமாட்சிக்கும், இன்றைக்கு சாம்பசிவனை சதாய்த்தது போதும் என்று தோன்றியிருக்க வேண்டும்; இடத்தைக் காலி செய்தாள்.டாக்டர் சாம்பசிவனின் பிரிவுபசார விழா, அவர் எதிர்பார்த்தது போலவே, உப்பு சப்பற்று இருந்தது. டாக்டர் சேஷன் ஆர்ப்பாட்டமாக, எல்லாருடனும் உரையாடினார். அவரது, 'அடுத்த நூற்றாண்டில் எதிர்பார்க்க வேண்டிய அதிசயங்கள்' என்ற உரை, பல பிரபல ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தொகுத்து வழங்கியதாக இருந்தாலும், ஓரளவுக்கு சுவாரசியமாக இருந்தது.டாக்டர் சாம்பசிவனும், நிறுவனத்தில் அவ்வளவு பிரபலமில்லை. அவருக்கு நண்பர்கள், குறைவு; எதிரிகளும் குறைவு. ஆகவே, கூட்டம் சோகையாகவே இருந்தது .நிலைய இயக்குனர் உபசாரமாக, சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, சாம்பசிவனின் நிம்மதியான ஓய்வு வாழ்க்கைக்காக, வாழ்த்தி, விடை கொடுத்தார். காமாட்சி மட்டும், ''அவருக்கென்ன பத்து பதினைஞ்சு வருஷமாகவே, ஓய்வுல தானே இருக்காரு,'' என்று, பலர் காதுபடக் கூறினாள்.சாம்பசிவனுக்கு, அவள் கழுத்தை நெரிக்க வேண்டும் போல் தோன்றியது. நாகரிகம் கருதி மவுனமாக அமர்ந்திருந்தார்.மரியாதை நிமித்தம், அவரை அலுவலகக் காரில், வீட்டில் கொண்டு போய் விடப்போகும் போது, 'இந்த 'பார்மாலிடி எல்லாம் எதுக்கு? நானே போய்க்றேன்,'' என்று, சாம்பசிவன் மறுத்தும், காமாட்சி மட்டும், விடாப்பிடியாக காரில் தொத்திக் கொண்டாள்.'அட தலைவிதியே... இந்த பாடாவதி நம்மை விடாது போலிருக்கே?' என்று, தலையில் அடித்துக் கொண்டு, காரில் ஏறினார் சாம்பசிவன். உடன், அவருடைய நீண்ட கால நண்பன் கேசவனும் ஏறிக் கொண்டார். அவரும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற இருப்பவர்.போகும் வழி நெடுக, காமாட்சியின் குடைச்சல் கேள்விகளுக்கு, அளவேயில்லை.''ஏன் சார்... எந்தெந்த பாங்கில பணத்தப் போடப் போறீங்க... சீனியர் சிட்டிசன்னா கூட வட்டி தருவாங்களாமே!''உங்க பிள்ளை, உங்களுக்கும் உங்க சம்சாரத்திற்கும் கூட, க்ரீன் கார்ட் வாங்கிட்டானாமே?''நீங்க இப்ப இருக்கிறது உங்க வீடா இல்லை, உங்க பிள்ளை அங்க சம்பாதிச்சு இங்க வாங்கின வீடா?''எப்ப அடுத்த தடவை யு.எஸ்., போகப் போறீங்க?'' என, 'தொண தொண'வென, கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள்.காமாட்சியின் கேள்விகள், கேசவனுக்கு சிரிப்பைத் தந்தன. சாம்பசிவனின் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு மழுப்பலாகத்தான் பதில் சொன்னார். ஏறக்குறைய பொறியில் சிக்கிய எலி போல் தவித்துக் கொண்டே வீட்டை அடைந்தார் சாம்பசிவன்.நாக்கை தீட்டிக் கொண்டு வந்த காமாட்சிக்கு, சாம்பசிவன் வீட்டில் கிடைத்தது,அவல் உப்புமாவும், காபியும் தான்.சாம்பசிவனின் மனைவி பங்கஜத்தையும் கேள்விகளால் குடைந்தாள் காமாட்சி. பங்கஜம் தன் பங்குக்கு, ''இவர் சுத்த மோசம் மேடம்... வீட்டில, ஒரு வேலை செய்ய மாட்டார். எப்ப பார்த்தாலும், ஆபீஸ் பத்தின நினைப்பு தான். லீவு நாளுல்ல கூட வெளியில போக மாட்டார். என்னையும் எங்கும் கூட்டிட்டு போற வழக்கம் இல்லை. இனிமே ஆபீசு இல்லை; வெறுமனே வீட்டில உக்காந்து எப்படித்தான் பொழுதைக் கழிக்கப் போறாரோ தெரியல,'' என்றாள்.இதைக் கேட்டு, பெரிதாக சிரித்தாள் காமாட்சி.''அடடா... அப்படியா சேதி. அவர் ஆபீசிலும் அப்படித் தான்; ஒண்ணும் செய்ய மாட்டார்; உக்காந்துகிட்டே தூங்கிட்டுருப்பாரு,'' என்றாள்.சாம்பசிவனுக்கு, இரண்டு பெண்மணிகளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் போலிருந்தது.ஆனால், அவருக்கு அத்தனை தைரியம் இல்லாததால், எல்லா பேச்சுக்களையும் மவுனமாக ஏற்றுக் கொண்டார்.இந்த ரிடையர்மன்ட் வைபவத்துக்குப் பின், ஆறு மாதம் கழித்து, ஒரு நாள், வேறொரு வேலை காரணமாக, சாம்பசிவன் வீட்டு பக்கம் வந்த கேசவன், 'சாம்பசிவன் என்னதான் செய்கிறார்... போய் பார்ப்போமே...' என்று, அவர் ப்ளாட்டுக்குச் சென்றார்.வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு, கதவு திறக்கக் காத்திருந்தார் கேசவன்.கதவைத் திறந்தது சாம்பசிவன் தான். தோளில் துண்டும், டீ ஷர்ட்டும், வேட்டியும் அணிந்திருந்தார்; கையில் கரண்டி. ஒரு நிமிஷம் கேசவனைப் பார்த்து திடுக்கிட்டாலும், ''அடேடே நீயா... வாப்பா வா... வா,'' என்று, மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.வீட்டிற்குள் நுழையும்போதே, சாம்பார் கொதிக்கும் அற்புதமான வாசனை வந்தது. சாம்பசிவனைப் பார்த்து, ''எப்படி இருக்கீங்க... இதென்ன கையில கரண்டி, சமையலா?'' என்றார் விளையாட்டாக கேசவன் .சாம்பசிவன் மலர்ந்த முகத்துடன், ''ஆமா சமையல் தான்; உட்கார். உள்ளே சாம்பார் கொதிக்குது; அதை நிறுத்திட்டு வர்றேன். பங்கஜம்... கேசவன் வந்திருக்கிறார் பார்,'' என்று, கேசவனை உபசரித்து விட்டு உள்ளே சென்றார்.பக்கத்தில் இருந்த பெட்ரூமில் இருந்து, மெதுவாக நடந்து வெளியே வந்தாள் பங்கஜம்.''வாங்க... எப்படி இருக்கீங்க உட்காருங்க,'' என்றாள்.கேசவன் கேட்பதற்கு முன்பே, ''வீட்டில ஒரு காரியமும் என்னால செய்ய முடியல. இந்த மூட்டு வலி பிரச்னை ரொம்ப அதிகமா போயிடுச்சு. சமைக்கிறது, துணி துவைக்கிறதுன்னு எல்லாத்தையும் அவர் தான் பார்த்துப் பார்த்து செய்றார்,'' என்றாள்.''சமையல் கூடவா!'' என்றார், வியப்புடன் கேசவன்.''ஆமாம்... அதையேன் கேட்கறீங்க, பிரமாதமா சமைக்கிறார். நீங்க இருந்து சாப்பிட்டு பார்த்துட்டுப் போங்களேன்,'' என்றாள் பங்கஜம்.அதற்குள் கையில் காபியுடன் வெளியே வந்த சாம்பசிவனை, ஆச்சரியத்துடன் பார்த்தார் கேசவன்.''என்ன சார்... உங்க மனைவி சொல்றதெல்லாம் நிஜமா?'' என்றார்.புன்னகை செய்த சாம்பசிவன்...''ஆமாம் கேசவன்... அவளால நிற்கவோ, நடக்கவோ முடியல. என்ன செய்றது, எனக்கும் பயங்கர போராக இருந்தது. சரின்னு செய்ய ஆரம்பிச்சேன். இப்ப அதில தானாகவே, ஒரு ஆர்வம் வந்திடுச்சு. இப்ப முழு மூச்சா அதில இறங்கி, எல்லா வேலையும் நானே செய்றேன்.''போன வாரம் என் பையன், அவனோட மனைவி, குழந்தைங்க கூட வந்து, ஒரு வாரம் இருந்துட்டுப் போனான்; அய்யாதான் எல்லாருக்கும் சமையல். அவியல், பிட்லை, காரக்குழம்பு, பொரிச்ச குழம்பு, பருப்பு உசிலி, பாயசம், தோசை, இட்லி, அடை, வடை, உப்புமா, சப்பாத்தி, சப்ஜின்னு தினுசு தினுசா செய்து, அசத்திட்டேன்,'' என்றார் சாம்பசிவன்.''அப்படியா?'' என்றார், ஆச்சரியம் தாங்காமல் கேசவன்.''ஆமாம். எனக்கு, இப்போ சமையல் செய்யுறதுல இருக்கும் ஆர்வத்தில நூற்றில் ஒரு பங்கு கூட சயின்சில் இருந்ததில்லை. அதனால் தான், நான் ஒன்றுமே செய்யலையோன்னு தோணுது. நம்முடைய இன்ட்ரஸ்ட்காகவா நாம படிச்சோம். ஏதோ படிச்சோம் சம்பாதிக்கணுமேன்னு வேலைக்குப் போறோம். இப்ப எனக்கு, எந்த மனத் தடைகளும் இல்லை என்பதால், எனக்குப் பிடிச்ச வேலையை, மிக சந்தோஷத்துடன் செய்கிறேன்,'' என்றார் சாம்பசிவன்.அவர் செய்திருந்த சமையலை சாப்பிட்டு விட்டு வந்த கேசவனுக்கும், அவர் சொன்னது சரி என்று தான் தோன்றியது.உண்மையில், அதிர்ஷ்டசாலி தான் சாம்பசிவன்.அவர் பலவீனம், அவருக்கு வேலையையும், சம்பளத்தையும் தந்தது. அவரது பலம், இப்போது அவருக்கு நிறைவையும், குடும்பத்தில் சந்தோஷத்தையும் தருகிறது.இதுபோன்றதொரு, அபூர்வமான வாய்ப்பு வாழ்க்கையில், எத்தனை பேருக்குக் கிடைக்கும்!மனிதனின் வாழ்க்கையில் தான், எத்தனை முரண்பாடுகள்!ஆபீசில் அடுத்த முறை காமாட்சியை, எங்காவது சந்தித்தால், சாம்பசிவனின் சமையலைப் பற்றி, கட்டாயம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் கேசவன்.தேவவிரதன்