உள்ளூர் செய்திகள்

குற்றமும் வெற்றியும்!

அந்த நாள் சபிக்கப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான், ராகவ். அரசு, 'டெண்டர்' கைவிட்டு போன நாள்; 'மினிமேக்' கம்பெனி, அவன் ஆர்டரை நிராகரித்த நாள்; 'லயன்ஸ் கிளப் மீட்டிங்'கிற்கு, சிறப்பு விருந்தினனாக அழைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்தானதை அறிவித்த நாள்.ஓ... காலம் அவனை விட்டு விலகிக் கொண்டிருக்கிறதா... ஓட்டப் பந்தயத்தில் அவன், ஓரங்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறானா... நேற்று முளைத்த மழை காளான்கள், செந்திலும், ராபர்ட்டும் முன்னே சென்று விட்டனரா?''சார்... கூப்பிட்டீங்களா?'' வந்து நின்றார், ராமபத்ரன்.''என்ன சார்... ஆபீசா இது?'' என்றான், எரிச்சலாக.''சார்... எதை சொல்றீங்க?'' என்றார், தலையை சொறிந்தபடி.''அதோ பாக்கறோமே... அதைத் தான்,'' என்று கண்ணாடி வழியாக கை நீட்டினான்.''சார்!''''அங்க பாருங்க, ஒருத்தருக்கு... மொபைல் நோண்டறது தவிர, வேற வேலை இல்லை... இன்னொருத்தர், எப்பவும் அரட்டை... அந்த பெண் ஊழியருக்கு, 'கிரச்'ல இருக்கிற குழந்தை சாப்பிட்டதா, துாங்கினதான்னு கவலைப்படறது மட்டும் தான் வேலை... இன்னும் மூவருக்கு, ஆபீஸ் வருவதே, தங்களோட உடையை பத்தி விளம்பரப்படுத்திக்க தான்...''நீங்க, பயந்த சுபாவம்... யாரையும் தட்டிக் கேட்க தைரியம் இல்லாம, எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கற கோழை... இதுல, நான் மட்டும் உழைச்சு, கம்பெனிய முன்னேற்றணும்ன்னா முடியுமா... இருக்கட்டும் பார்க்கறேன், ஆறு மாசம், லாப உயர்வு மட்டும் ஏறாம இருக்கட்டும், ஒவ்வொருத்தரா சீட்டு கிழிக்கிறேன்... 'கெட் லாஸ்ட்' மிஸ்டர் ராமபத்ரன்.''அவன் கத்தல், வெளி வரை கேட்டது. அவர், தலை குனிந்து வெளியேற, மற்றவர்கள் திகைத்து, எழுந்து நின்றனர்.ஆங்கில இலக்கியம் படித்த ஆண்டில், எக்ஸ்பேரி என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் பொன்மொழி, அவன் மனதில், நீங்கா இடம் பிடித்து விட்டது.உலகின் மிக அழகான விஷயங்கள், பார்க்கவோ அல்லது தொடவோ முடியாதவை; அவை, இதயத்தால் உணரப்பட்டவை.இப்போதும் அது தான் நினைவுக்கு வந்தது.வெற்றி!எவ்வளவு அழகான விஷயம் அது... கல்லிலிருந்து வந்த சிற்பம் போல, காகிதத்தில் வடித்த பொன்னோவியம் போல, உழைப்பு, திறமை, பொறுமை, எவ்வளவு காலம் வேண்டியிருக்கிறது, அந்த வெற்றியை ருசிக்க! கடுமையான தவம் அது. வற்றாத ஆர்வம், விடா முயற்சி, இலக்கு இலக்கு என்று துாக்கத்திலும் துரத்தும் கனவு. அப்படிதானே அவன், தன் சின்னஞ்சிறு கம்பெனியை தனியொருவனாக துவங்கினான்; உழைத்தான், மெல்ல மெல்ல மேலே வந்தான்.ஆனால், அந்த வெற்றி நிலைக்காது போலிருக்கிறதே... கூட இருந்தே குழி பறிக்கின்றனரே ஊழியர்கள்... ஒவ்வொரு சிறகாக பிய்த்து எறியப்படுகிறதே... செயல்படாத நாட்களும், ஊக்கமில்லாத ஆட்களும், அவன் தலையில் மிளகாய் அரைக்கிற காட்சி தெரிகிறதே...ஏன் இந்த சோம்பேறித்தனம்... இவ்வளவு சுயநலம்... எப்படி இவ்வளவு அசட்டையான மனோபாவம்... வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக இருக்காவிட்டால், வேறு எதை இவர்கள் மனசாட்சியாக மதிப்பர்.எரிச்சலுடன் வீடு திரும்பினான்.ஜனனியும், அம்மாவும், குறுக்கெழுத்து புதிர் போட்டுக் கொண்டிருந்தனர். காரின் ஒலி கேட்டதும், கதவை திறந்தாள், ஜனனி.மெல்லிய ஆரஞ்சு நிற கோட்டா புடவையும், இளம் பச்சை நிற ரவிக்கையும் அணிந்து புன்னகைத்தாள். ஏதோ மயிலிறகு வந்து, ஒரு கணம், ரணத்திற்கு மருந்து தடவியதை போலிருந்தது.''காபியா... டீயா?'' என்று, தேன் குரலில் கேட்டாள்.''ஏதோ ஒண்ணு... ஆனா, சூடா!''''ஜஸ்ட் ஒன் மினிட்,'' என்று, இன்னும் ஒரு அங்குலத்திற்கு புன்னகையை விரித்து, சிட்டு போல விரைந்தாள்.அடுத்த நிமிடம், ''இஞ்சி டீ,'' என்று நீட்டினாள், ஜனனி.நறுமணம், சூடு, சுவை என்று, 100 சதவித கலவையில் இருந்த அந்த பானம், அவன் உயிரை மீட்டெடுக்கும் பணியில் இறங்கியபோது, உள்ளே அடுப்படியில், அம்மாவும், ஜனனியும் பேசுவது கேட்டது...''என்னம்மா, இன்னிக்கு இட்லி இப்படி வந்திருக்கு... அச்சச்சோ... கல்லாட்டம் இருக்கே,'' என்றாள் பதற்றத்துடன், ஜனனி.''அட, ஆமாம்... இதென்ன இப்படி... ஒரு நாளும் இப்படி இருக்காதே, நம் வீட்டு இட்லி... மல்லி பூ மாதிரி, பஞ்சு மாதிரில்ல இருக்கும்... இதென்ன கண் திருஷ்டி மாதிரி,'' என்று, கவலைப்பட்டாள், அம்மா.''என் மேலதாம்மா தப்பு... அளவு போடும்போது, ஏதோ யோசனையில இருந்துட்டேன் போல... சாரிம்மா,'' என்றாள். ''சேச்சே... அப்படியெல்லாம் நீ ஏதோ நினைவுல வேலை பண்றவ இல்லே... என் தப்புதாம்மா இது... இந்த மாசம், இட்லி அரிசி நாந்தானே வாங்கினேன்... எப்பவும் வாங்கற அரிசிக்கு பதிலா, வேறு, 'பிராண்ட்' வாங்கிட்டேன்னு நெனைக்கிறேன்... அது தான் மாவு சரியா பொங்காம, கல்லு மாதிரி வந்திருக்கு இட்லி... சாரிடாம்மா, ஜனனி!''''அச்சோ இல்லம்மா... அரிசி, உளுந்து அளந்து போட்டதுலதாம்மா தவறு... நான் தான் கவனக்குறைவா இருந்திருக்கேன்... இப்ப என்னம்மா பண்றது... ராகவ் வேற பசியோட வந்திருக்காரே.''''கவலைப்படாதே... இதே மாவை, ஊத்தப்பமா போட்டுடலாம்... அவனுக்கு ரொம்ப பிடிக்கும்... உனக்கு?''''நீங்க சொல்ற எல்லா யோசனையுமே எனக்கும் பிடிக்கும்மா... நீங்க போய் ராகவ்கிட்ட பேசிட்டிருங்க... நான் பண்றேன் ஊத்தப்பம்,'' என்றாள்.''நோ... நோ... அவன் முகமே சரியில்லடாம்மா... நீ போய் இதமா சிரிச்சு பேசு... அதுக்குள்ள நான் பண்ணி எடுத்துகிட்டு வரேன்... போ போ,'' என்றாள்.சடாரென்று எழுந்து உட்கார்ந்தான், ராகவ்.இதென்ன... எவ்வளவு அழகாக உரையாடுகின்றனர், மாமியாரும் - மருமகளும்!யார் கொடுக்கின்றனர், யார் பெறுகின்றனர் என்றே தெரியாத இந்த அன்பு தான், எவ்வளவு அழகாக இருக்கு... இதயத்தால் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்க்கிற இந்த காட்சி, எவ்வளவு மேன்மையாக இருக்கிறது... பொறுப்பை நான் ஏற்கிறேன் நான் ஏற்கிறேன் என்று போட்டி போடுகிற இந்த உறவு, எளிய உள்ளங்களால் எவ்வளவு நேர்த்தியாக பேணி காப்பாற்றப்ப டுகிறது...வீட்டின் அமைதிக்கு, இந்த அரும் குணங்கள் தான் காரணமா... குற்றம் கண்டுபிடிக்காமல் தீர்வை கண்டுபிடிக்கிற நல்ல மனம் தான், வீட்டின் வெற்றியா... சமாதானமான இல்லமும், அங்கே நிலவுகிற அமைதியும் தான் முக்கியம் என்று இருவருமே நினைப்பதால் தான், வீடு இப்படி நந்தவனம் போல நறுமணம் வீசி, தங்கம் போல் ஜொலிக்கிறதா... வீடு போலதானே அலுவலகமும், நாளின் பெரும் பகுதி அங்கேதானே கழிகிறது... அங்கே இருப்பதும், முக்கியமான மனிதர்கள் தானே... குற்றம் பார்த்தால், வெற்றி இல்லை தானே...தலையை குலுக்கி, கண்களை மூடி, யோசித்தான். உள்ளே ஏதேதோ வார்த்தைகள் ஓடின.'மேடம்... போன தடவை, அந்த, 'கிக்ஸ்டன் ஆர்டர்' கெடச்சதுக்கு, உங்க கணிப்பும் முக்கிய காரணம்... நன்றி; உன்னோட கையெழுத்து ரொம்ப அழகா இருக்குப்பா... வயலின் மாதிரி... இசை ரசிகர் இல்லையா நீ... வர்ற டிசம்பர் கச்சேரிக்கு, என் பரிசளிப்பா டிக்கெட் தரேன்... உன் குடும்பத்தாருடன் போய் வா...''மேம்... 'கிரஷ்'ல குழந்தை பத்திரமா இருக்கான்னு எப்பவும் கவலைப்படற அம்மா இல்லையா நீங்க... கவலைப்படாதீங்க, காலை, மதியம், மாலைன்னு அரை மணி நேரம், சிறப்பு அனுமதி உங்களுக்கு... போய் பார்த்துட்டு வாங்க...''ஹேய்... இதென்ன, போன் சூப்பரா இருக்கு... எத்தனை, 'மெகா பிக்சல்' கேமரா... வாவ்... என்ன தெளிவா தெரியுது... நல்ல ரசனை; ஹாய்... உன், தலையலங்காரம் ரொம்ப, புதுமையா இருக்கு... நம் ஆபீசுக்கே இளமை களை வந்திருக்கு...'அந்த முகங்களில், மகிழ்ச்சியை பார்த்தான்; உதடுகளில், புன்னகையை பார்த்தான்; வேலையில், உற்சாகத்தை பார்த்தான்; கடைசியாக, கம்பெனியின், அட்டகாசமான, 'பேலன்ஸ் ஷீட்'டையும் பார்த்தான். வானதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !