காக்கையின் நிறம் வெண்மை!
'உமாதானே உன் பேரு?''ஆமா!''இனிமே, நான், உன்னை உமான்னு கூப்பிட மாட்டேன். காக்கான்னு தான் கூப்பிடுவேன், சரியா?'சந்தோஷமாக தலையாட்டினாள், குழந்தை உமா. 'காக்கா, உங்கக்கா பேரு என்ன?''உஷா!''அவ நல்ல நிறமா இருக்கா, நீயேன் கறுப்பா இருக்கே?''தெரியலையே!''உங்கம்மாட்ட கேட்டு சொல்றியா?''அம்மா, நான் ஏன் கறுப்பா இருக்கேன்னு ராதி அத்தை கேட்கிறாங்க?' என, குரல் கொடுக்க, கையிலிருந்த பாத்திரத்தை, நாத்தனார் ராதிகாவின் மேல் வீசி எறிய வேண்டும் போல் வந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள், நந்து. 'என்ன திமிர் இவளுக்கு, சின்ன குழந்தையின் நெஞ்சில் நஞ்சை கலப்பது... இவள், நல்ல சிகப்பு தான். அதற்காக, புருஷன் வீட்டில் இருக்க முடிந்ததா... விவாகரத்து வாங்கி, அண்ணன் வீட்டோடு வந்து விட்டாள். இருந்தபோதும் கொழுப்பு குறையவில்லை...' என, நினைப்பாள்.கறுப்பு நிற உடல்வாகு, உமாவின் அம்மா நந்துவின் வம்சத்தில் வந்தது. நந்துவின் தாத்தா, கைக்குழந்தையாக இருந்தபோது, எண்ணெய் தடவி முற்றத்தில் சூரிய வெளிச்சத்தில் விட்டிருந்தனராம்.காக்கை ஒன்று, தன் குஞ்சு என நினைத்து அவரை இழுக்க முற்பட்டபோது, அவரது அம்மா ஓடி வர, குழந்தையை விட்டுவிட்டு பறந்து விட்டதாம். தம் குடும்பம் எத்தனை கறுப்பானது என்பதை நந்துவின் அம்மா சொன்னக் கதை. அதே தாத்தா தான், சிங்கப்பூர் சென்று வியாபாரம் செய்து, குடும்பத்தை வளமாக்கினார்.ஒருநாள், குழந்தையை காணாது நந்து தேடிக் கொண்டிருக்க, 'உள்ளே போய் பாரு அண்ணி. உன் கறுப்பி, வெளுப்பாயிட்டா...' என்றாள், ராதிகா.பவுடர் டப்பாவை தலை கீழாய் கவிழ்த்து, முகம், தரை அனைத்திற்கும் பூசியிருந்தாள், உமா.நந்துவை கண்டதும், 'அம்மா, நான் வெள்ளையாய் இருக்கேனா?' என்றாள்.நந்துவிற்கு அடிவயிற்றை பிசைந்தது.ஆறு வயதில், இவளுக்கு நிறமாக இருப்பது தான் அழகு என்ற எண்ணத்தை போதித்த நாத்தனார் மற்றும் அக்கம் பக்க வீட்டினரை, என்ன செய்தால் தகும்? ஒருசமயம், 'அம்மா... எங்க கிளாஸ்ல எல்லாருமே வெள்ளையா இருக்காங்க. நான் மட்டும் ஏன் கறுப்பா இருக்கேன்?' உமா கேட்டபோது, தோசை வார்த்துக் கொண்டிருந்தாள், நந்து.'கண்ணு, கல்லில் விடுமுன் தோசை மாவு எப்படி இருக்கு?''வெள்ளையா!''அப்ப ஏன் அப்படியே சாப்பிடலை?'அவள் கையில் மாவை சொட்டினாள், நந்து. உமா நாவில் தடவி, 'ஐயையே... நல்லா இல்லைம்மா...''மாவை தோசையா செய்யும் போது, பதமா, நாக்குக்கு சுவையா, உடம்புக்கு இதமா ஆயிடுது. அது மாதிரி தான் கறுப்பு தோலும். உமா குட்டி மாதிரியான, புத்திசாலிகளுக்கு தோல் கறுப்பா இருக்கும்.'நாம நல்ல பொண்ணா, புத்திசாலியான்னு தான் மற்றவங்க பார்ப்பாங்க. கறுப்பா, சிகப்பான்னெல்லாம் அசடுகள் தான் பேசும். இனிமே, உன்னை யாரும் கறுப்புன்னு சொன்னா, அவங்க மக்குன்னு புரிஞ்சுக்கோ. அதையெல்லாம் காதில் வாங்கிக்காதே. சரியா?'ஒருநாள், பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வந்தாள், உமா.பள்ளி விழாவில் கோலாட்டம், கும்மிக்கு மாணவியரை தேர்ந்தெடுத்ததில், நிறம் காரணமாக, உமாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.'உனக்கு, 'டான்ஸ்' ஆட பிடிக்குமாடா செல்லம், அம்மாட்ட சொல்லவே இல்லையே?'அதற்கு பதிலாக, அபிநயித்தாள், உமா. உடனே, அவளை பரதம் கற்க அனுப்பினாள், நந்து. இரண்டு ஆண்டுக்கு பின், பள்ளி விழாவில், 'தீராத விளையாட்டு பிள்ளை' பாடலுக்கு உமாவும், மற்றொரு பெண்ணும் ஆட, கை தட்டல் குவிந்தது.'கண்ணு, திறமைக்கு மரியாதை கிடைக்கும். நீ நல்லா, 'டான்ஸ்' ஆடினதால், நிறபேதமெல்லாம் மறைஞ்சு போச்சு பார்த்தியா... நீ, உன் திறமைகளை முனைப்போடு வளர்த்துக்கோ. உன்னை யாரும் மிஞ்ச முடியாது...' என்று, நந்து சொன்னது, உமாவிற்கு வேதமானது. கல்லுாரி நாட்களில் எழுந்த, 'கமென்ட்டு'களை எளிதாக கடக்கப் பழகியிருந்தாள், உமா. அன்பு, இயல்பான புன்னகை, பேச்சு சாமர்த்தியம், தெறிக்கும் புத்திசாலித்தனத்தால் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தாள். கல்லுாரிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டியில் பங்கேற்று, அழகு பற்றி பேசினாள், உமா.'கறுப்பா இருக்கிறவங்க அழகைப் பற்றி பேசக் கூடாது...' என்றான், மாணவன் ஒருவன்.'அது, அழகுன்னா என்னங்கிற பார்வையை பொறுத்தது. காரைக்கால் அம்மையாருக்கு, பக்தி அழகு; சரோஜினி நாயுடுவிற்கு, கவித்திறன் அழகு; தில்லையாடி வள்ளியம்மைக்கு, நாட்டுப்பற்று அழகு; ஜான்சி ராணிக்கு, வீரம் அழகு...' என்றாள், உமா.'அவங்க திறன் பத்தி பேசறீங்க, நாங்க சொல்றது...''அரசர்களை, தன் அழகால் கட்டிப் போட்ட கிளியோபாட்ரா கறுப்பு நிறம் தான்...'கை தட்டல் ஓய நெடுநேரமானது. அன்று, ஆண்கள் கல்லுாரியிலிருந்து வந்த சிவா, அவளை வெகுவாக பாராட்டினான். அவனின் அறிமுக நட்பு, அடுத்தடுத்த சந்திப்புகளில், காதலாக மலர்ந்தது.'உங்க வீட்ல எல்லாரும் உங்க நிறம் இருப்பாங்களா, சிவா?''மூன்று அக்காவும் என்னை விடவே கலர். அம்மாவும் அப்படித்தான். அப்பா மாநிறம். ஏன் கேட்கிறே?''அப்படீன்னா, அவங்க என்னை ஏத்துக்கிறது கஷ்டம்...''சேச்சே, யூ ஆர் சில்லி...'ஒருநாள், உமாவை, தன் குடும்ப உறுப்பினர்களிடம் அறிமுகப் படுத்தினான், சிவா.'எங்கேருந்துடா இந்த காக்காவை பிடிச்சே?' எகத்தாளமாக பேச்சை துவங்கினாள், சிவாவின் அக்கா ரஞ்சனி.'மரியாதையா பேசு, நாளைக்கு என் மனைவியாகப் போறவ...''வேற பொண்ணே கிடைக்கலையா?' என்றாள், இன்னொரு அக்கா.எப்படியோ எல்லாரிடமும் சம்மதம் வாங்கி, உமாவை கைப்பிடித்தான், சிவா.திருமணமாகி நான்கு ஆண்டுகளில், கணவன் வீட்டார் அவளை ஏற்றுக் கொண்ட போதிலும், பெயர் என்னவோ, காக்கா தான்!உமாவின் மாமியார், 16ம் நாள் காரியத்துக்கு நாத்தனார்கள், தத்தம் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.''என்ன யோசனையில் ஆழ்ந்துட்டீங்க... அவங்கள்ளாம் சாப்பிட வந்துட்டாங்க...'' என, உமாவை நினைவுக்கு கொண்டு வந்தாள், சமையல்காரம்மா சரஸ்வதி. ''இதோ,'' என்றபடி, பரிமாற எழுந்து போனாள், உமா. மாமியார் மறைவை ஒட்டிய தினங்கள் அவை.முதல் நாள் இரவு, அம்மாவின் நகைகளை அக்காக்கள் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவது குறித்து பேசியிருந்தான், சிவா.'எல்லாருக்கும் நிறைய நகைகளை, அம்மா செஞ்சு போட்டிருக்காங்க. ஆனாலும், வலிய வர சீதேவியை வாங்கிட்டுப் போக ஆசைப்படறாங்க...''அப்பா என்ன சொல்றார்?''அம்மா வியாதியால அவதிப்பட்ட ரெண்டு வருஷமும், அவங்களை அன்பா கவனிச்சுக்கிட்டது, நீதானாம். அன்னைக்கு எந்த பொண்ணும் உதவிக்கு வரல. 'மாமியாருக்கு உடம்பு, சரியில்லை, நாத்தனாருக்கு கல்யாணம், வெளிநாட்டு டூர்'ன்னு, காரணம் சொல்லிட்டு பறந்தாங்க.'ஆடிக்கொரு தடவை வந்து, 'உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டா போதுமா'ன்னு குதிக்கிறார். உன்னிடமும் அத்தனை நகை இல்லையாம். அதனால, உனக்கு தான் அம்மா நகைங்கிறது அவரோட வாதம்...''இதை அவரே அவங்கள்ட்ட சொல்லலாமே...''சொன்னா, சண்டை தான் வரும். நினைச்சதை சாதிச்சே பழக்கப்பட்டவங்க. ஒவ்வொரு நகையும் வேறு வேறு மதிப்புல இருக்கும். அம்மாவின் ரெட்டை வட சங்கிலியும், வைர அட்டிகையும் எப்படி ஒரே மதிப்போட இருக்கும்...'உனக்கு அதிகம், எனக்கு குறைவுன்னு அவங்களுக்குள்ளேயே பிரச்னை வர வாய்ப்பிருக்கு. கடையில போட்டு பணத்தை சமமா பிரிச்சுடலாம்கிறியா?''ஐயோ, தப்புங்க. பெரியவங்க போட்டதை அப்படியே அணியறது தான் அழகு, மரியாதை...''அப்ப எப்படி?''விடுங்க, நான் பார்த்துக்கிறேன்...' என, கூறியிருந்தாள், உமா.'வேலையெல்லாம் ஆச்சா அண்ணி?' என்றனர், கோரசாக அக்காக்கள்.'அட, என்ன திடீர் கவுரவமெல்லாம்?' என, உமா நினைக்க, மூன்று அக்காக்களும் அவளை சூழ்ந்து கொண்டனர்.''நாளைக்கு சுபம் முடிஞ்சவுடன், நாங்க எல்லாரும் கிளம்பணும். அதற்குள் சில விஷயங்களை பேசி முடிவு செய்யணும்,'' என்றாள், ரஞ்சனி.''நீங்களாகவே பேசுவீங்கன்னு பார்த்தால், வாயையே திறக்கலை. சிவாவும், அப்பாவும் உங்களை கை காட்டறாங்க. அம்மா நகையெல்லாம் எப்படி பிரிக்கப் போறீங்க, அண்ணி?'' என்றாள், இன்னாரு அக்கா.''பெத்தவங்க நகையெல்லாம் பொதுவா பொண்ணுங்களுக்குதான் குடுப்பாங்க. எங்க மாமியார் செத்தப்ப, எல்லா நகையையும் என் நாத்தனாருக்கு தான் கொடுத்தோம். நம் அம்மா நகையை நான் போட்டுக்கிட்டு போனா தான் எனக்கு மதிப்பு.''என் பெண், பெரியவளான போது, தன்னோட அட்டிகையை என் பெண்ணுக்கு தர்றதா அம்மா சொன்னாங்க. இன்னைக்கு அம்மா இல்லைங்கறதால, அவங்க வாக்கு மாறக் கூடாது,'' என்றாள், ரஞ்சனி.''ரஞ்சனிக்கா, உங்க பொண்ணு வளர்ந்துட்டதால அப்படி சொல்றீங்க. ஆக்சுவலா, அம்மாவுக்கு என் பெண்ணு தான் உசிரு. நீதாண்டி என் வாரிசுன்னு உங்க எல்லாருக்கும் எதிரே தானே கொஞ்சினாங்க,'' என்றாள், மூன்றாவது அக்கா.''என் பொண்ணுக்கு குடுத்தாதான் அம்மா ஆத்மா சாந்தியடையும்,'' என்றாள், இரண்டாவது அக்கா.''உங்க கல்யாணத்துக்கு, அம்மா செய்த சீர் வரிசை லிஸ்ட்டை பீரோவில் பார்த்தேன். அம்மா தன்கிட்ட உள்ளது போலவே தான் வளையல், அட்டிகை, தாலி சங்கிலின்னு செஞ்சிருக்காங்க.''ஒண்ணு இருக்கும்போது அதேபோல இன்னொன்று தேவையா... அது இல்லாத யாரிடமாவது நகையை கொடுப்பதுதானே அழகு?'' என்றாள், உமா.''அண்ணனையும், அப்பாவையும் கைல போட்டுட்டு இருக்கீங்க. அந்த தைரியத்துல பொண்ணுங்களை கை கழுவிவிட்டு நீங்களே எடுத்துக்கிற வேலையை செய்யறீங்க. நிரந்தரமா எங்களோட உறவு விட்டு போயிடும், அண்ணி. நெனவு வெச்சுக்கோங்க,'' என்றாள், ரஞ்சனி.''உங்க எல்லாரையும் பெரிய இடத்துல, கல்யாணம் செஞ்சு வெச்சு, வசதியா வாழ வெச்சிருக்காங்க, உங்கம்மா. அதுக்கும் மேல, உமாகிட்ட நகைக்காக பிடிவாதம் பிடிக்கறீங்க. நியாயமா இது?'' என, இதுவரை அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அப்பா, முதன்முறையாக வாயை திறந்தார்.''அப்பா, எத்தனை பெரிய இடத்துல வாழ்க்கைப்பட்டாலும், அம்மா நகை பொண்ணுங்களுக்கு என்பது தான் நடைமுறை... அம்மாவுக்கும் மனசாந்தி அதுதான்,'' என்றாள், இரண்டாவது அக்கா.''அம்மாவோட மனசாந்தி தான் முக்கியம்ன்னு நீங்க நினைப்பதால சொல்றேன்... அப்பா, என்னை நீங்க மன்னிக்கணும். அம்மா படுத்திருந்த சமயத்துல, அடிக்கடி அழுவாங்க தெரியுமா?''''உடம்பு நல்லா இல்லாதவங்க அழுவது பெரிய விஷயமில்ல,'' என்றாள், ரஞ்சனி.''இது அப்படியல்ல. அம்மாவுக்கு தன் பிறந்த வீட்டு நினைவு அடிக்கடி வந்ததால் தான். கடந்த காலத்தை பத்தி என்னிடம் நிறைய பேசியிருக்காங்க. அப்பா, இதுக்கு நீங்க பதில் சொல்லணும். அம்மாவின் அண்ணாவோட உங்களுக்கு எதானும் பிரச்னையா?'''அம்மாவுக்கு அண்ணாவா...' ஆச்சரியமாக கேட்டனர், அக்காக்கள்.''அதெல்லாம் பழைய விஷயம்மா. இவங்கள்ளாம் பிறக்கும் முன் நடந்தது.''''உங்களுக்கு பழைய விஷயம். அம்மாவுக்கு, தினசரி மனசை கொதி நிலையிலும், கண்ல ஈரத்தையும் வெச்ச விஷயம். அந்த பிரச்னைக்கு அப்புறம், மாமா நம் வீட்டுக்கு வரதையே நிறுத்திட்டாரு. நீங்க மேலும், மேலும் உயர்ந்து செல்வந்தராகிட்டீங்க.''சின்ன வயசுலயே அப்பாவை இழந்த அம்மாவுக்கு, எல்லாமே மாமா தான். அம்மாவை வளர்த்து, படிக்க வைச்சு, பாதுகாத்தவர். அம்மாவுக்காக தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்த மாமாவால, வயசான காலத்துல, பொறந்த தன் கடைசி பொண்ணு கிருத்திகாவுக்கு கல்யாணம் கூட செய்ய முடியலை; கல்யாணம் நின்னு போயிடுச்சு. தெரியுமா உங்களுக்கு? ''அம்மாவுக்கு, தான் உதவணும்கிற எண்ணம் ரொம்பவே உண்டு. மாமாவை பார்த்து பேசியிருக்காங்க. 'புருஷனுக்கு தெரியாம செய்யிறது தப்பு'ன்னு, அம்மாவோட உதவியை ஏத்துக்கலையாம். உங்கள்ட்ட கேட்க அம்மாவுக்கு பயம். கடைசி வரை தன் அண்ணன் பெண்ணுக்கு இந்த நகைகளை தரணும்கிற எண்ணத்தை அம்மா மாத்திக்கவே இல்லை. ''அதனால் தான், தன் பொண்ணுங்களுக்கு செஞ்சதைப் போலவே, அண்ணன் பொண்ணுக்கும் ஒரு, 'செட்' செஞ்சு, தன்னோடதுன்னு வெச்சுட்டு இருந்தாங்க.''அப்பா, என்னை மன்னிக்கணும். தயவுசெய்து, பழசை மறந்து, நீங்க, மாமாவை சுபத்துக்கு அழைக்கணும். அவங்க பொண்ணுக்கு, அத்தை வீட்டு சீரா இந்த நகைகளை, உங்க கையால கொடுக்கணும். கிருத்திகா கல்யாணத்தை, நம் வீட்டு விழாவா நடத்தணும். இதை செஞ்சா, அம்மாவோட மனசு சந்தோஷப்படும்,'' என்றாள், உமா.அங்கு கனமான அமைதி நிலவியது.''அதோட மதிப்பு உனக்கு தெரியுமாம்மா?'' ''அம்மாவோட மதிப்பு தெரியும்பா. உங்கள்ட்ட எப்படி சம்மதம் வாங்கறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். அக்காங்களே சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திட்டாங்க.'''உமா, உன்னை காக்கான்னு கூப்பிட்டதுக்கு ரொம்ப வருத்தப்படறோம். அம்மா மனசறிஞ்சு நடந்துட்டிருக்கிற நல்ல பொண்ணு நீ. நகை உனக்குன்னு அப்பா சொல்லியும், அம்மா மனசு குளிரணும்ன்னு யோசிச்சிருக்கே. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நல்ல மனசு அண்ணி உங்களுக்கு...' என்றனர், கோரசாக அக்காக்கள்.''கிரேட்மா... பேராசைப்படாத தங்கமான மனசால, பிரிஞ்ச குடும்பங்களையும் சேர்த்துட்டே,'' என்றவர், ''என் மருமகளை காக்கான்னு கிண்டல் செஞ்சீங்களே, அவ மனசு வெள்ளைன்னு இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களா?'' என்றார், சிவாவின் அப்பா.''அப்ப காக்கையின் நிறம் வெண்மைன்னு சொல்லலாமா?'' சிவா கேட்க, அங்கு சிரிப்பலை எழுந்தது.மல்லிகா குருவயது: 68படிப்பு: எம்.ஏ., ஆங்கில இலக்கியம்பணி: ஆசிரியர் - பணி நிறைவுசொந்த ஊர்: சென்னைவெளியான படைப்புகள்: தமிழின் முன்னணி வார, மாத இதழ்களில், இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. 2018ல், டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார்.கதைக்கரு உருவான விதம்: இன்று, எங்கோ தவறு செய்யும் ஒரு சிலரால், உறவுகள் சிதைக்கப்படுவது வேதனை. அது குறித்த வலியும், தீர்வுமே, இக்கதை.