தேவையா, பிளாஸ்டிக் சர்ஜரி?
முகத்தில் உள்ள உறுப்புகள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றை, 'பிளாஸ்டிக் சர்ஜரி' என்ற அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்கும் வழக்கம், பலரிடமும் அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான, சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த வூ சியோச்சின் என்ற பெண், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, அதனால் ஏற்பட்ட விளைவுகளை, கண்ணீருடன் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். இவர், 16 ஆண்டுகளாக, தன் முகத்தில் உள்ள அனைத்து உறுப்புகளையும் மாற்றி அமைப்பதற்காக, தொடர்ந்து, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து வருகிறார். மூக்கில் மட்டும் ஆறு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு முறையும், உதட்டில் மூன்று முறையும் அறுவை சிகிச்சை செய்து, மாற்றி அமைத்துள்ளார். இந்த அனுபவத்தை வைத்து, பீஜிங் நகரில், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யும், 'கிளினிக்கை'யும் துவக்கியுள்ளார். இதன் வாயிலாக கணிசமான வருமானம் வருகிறது. நினைத்தது போலவே, அழகாகவும் மாறி விட்டார். ஆனால், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ததால், உடலில் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்பட்டு, அவதிப்பட்டு வருகிறார். 'ஹார்மோன் தொடர்பான பிரச்னையால், புதுப் புது நோய்களுக்கு ஆளாகி விட்டேன். 'அழகு முக்கியமா... உயிர் முக்கியமா' என, யாராவது கேட்டால், 'உயிர் தான் முக்கியம்' என, சற்றும் யோசிக்காமல் கூறி விடுவேன். அந்த அளவுக்கு உயிர் பயம் வந்து விட்டது...' என, கண்ணீர் விடுகிறார். —ஜோல்னாபையன்