உள்ளூர் செய்திகள்

ஈகோ!

''பரத்... ஹிப்னாடிசம் பற்றி கேள்விப்பட்டுருக்கியா?''''ம்...'' என்ற பரத், ''மனிதனை ஆழ்நிலை தூக்கத்துக்கு கொண்டு போய், உள் மன விவகாரங்கள அறிய சைக்காலஜி டாக்டர்கள் பயன்படுத்தும் டெக்னிக்! என்ன திடீர்ன்னு அதைப் பத்தி...''காபி கோப்பையை டீப்பாய் மீது வைத்தபடி, ''சமீபத்தில், அது சம்பந்தமான புத்தகம் படிச்சேன்... இது, எந்த அளவு சாத்தியம்ன்னு சந்தேகம் ஏற்பட்டுச்சு,'' என்றான் சுந்தர்.''நோயாளியோட ஒத்துழைப்பு இருந்தா மட்டுமே இது சாத்தியம். தனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும், தானே மறந்து போன பிரச்னையை வெளிக்கொணர்ந்து தீர்வு பெறணும்ன்னு நினைக்கிறவங்க தான் ஹிப்னாடிசத்துக்கு முழுமையா உடன்படுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்.''''நார்மலா இருக்கிறவங்க கிட்ட கூட கொஞ்சம் அப்னார்மலிட்டி உண்டுன்னு புத்தகம் சொல்லுதே...''''உண்மையாத் தான் இருக்கும்; அதனால தானே சில நேரங்கள்ல நாம பைத்தியக்காரத்தனமா நடந்துக்கறோம்,'' என சிரித்தபடி, காலி கோப்பையை கீழே வைத்த பரத், ''நாம செய்யறது அடுத்தவங்கள பாதிக்காம இருந்தா அது நார்மல்; பாதிச்சா அது அப்னார்மல். ஒருமுறை கை கழுவினால் நார்மல்; திரும்பத் திரும்ப கை கழுவிக்கிட்டே இருந்தா அப் நார்மல். ஒருமுறை பூட்டை சரி பாத்தா, நார்மல்; ஓயாமல் சரி பாத்துக்கிட்டிருந்தா அப்நார்மல்,'' என்றான்.''நோயாளி அல்லாத நபர்களை மனோவசியப்படுத்த முடியுமா?''''எதுக்கு இதெல்லாம்?''''ஒரு கியூரியாசிட்டி; உன்னையே சப்ஜெக்டா வச்சு சோதிச்சுப் பாக்கட்டுமா?''என்று கேட்டான் சுந்தர்.''நான் நோயாளி இல்லயே!''''இப்பதானே சொன்னே... எல்லார்க்கிட்டயும் கொஞ்சம் லூஸ்தனம் இருக்கும்ன்னு... பரிசோதனைக்கு சம்மதிக்கிறியா?''''புடிச்சா விட மாட்டியே நீ,'' என்றபடி எழுந்தான் பரத்.தனி அறை; பரத்தை கட்டிலில் படுக்க வைத்த சுந்தர், அவன் முன், பெண்டுலத்தை இடம், வலமாக அசைய விட்டான். அந்த அசைவின் பாதையில், பார்வையை செலுத்திய பரத், சில விநாடிகளில் ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்றான்.''பரத்... என் குரல் கேட்குதா?''''கேட்குது.''''இப்போ உனக்கு என்ன வயசு?''''நாற்பத்தேழு.''''வாழ்க்கைய எப்படி உணர்றே?''''அவ்வளவு திருப்திகரமாக இருப்பதாக சொல்ல முடியாது.''''ஏன்?''''நரேன் தான் காரணம்... என்னை ரொம்ப காயப்படுத்திட்டான். அவன் செய்த துரோகத்தை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.''''ஓ.கே., இப்போ ரிவர்ஸ் கியர் போட்டு, 10 ஆண்டுகள் பின்னாடி, 37 வயசுக்கு போவோம். இந்த வயசுல எப்படி இருக்கே... அந்த வயசுல நடந்த மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் என்ன?''''சந்தோஷமா இருக்கேன். என் மக காயத்ரி பூப்படைந்தாள்; அதைவிட, என் தம்பி நரேன், சொந்த வீடு கட்டியது.''''தம்பி வீடு கட்டுறது சந்தோஷமான விஷயமா?''''அவன், நான் தூக்கி வளத்த பையன்; சொந்த உழைப்பிலே வீடு கட்டியிருக்கானே அது பெருமையில்லயா... அதிலும், அவன் வீட்டுக்கு என் பெயரை வைச்சுருக்கானே... யாருக்கு வரும் அந்த மனசு!'''வெரிகுட்.! இப்போ, இன்னுமொரு 10 ஆண்டுகள், முன்நோக்கி போவோம்.''''என் மகள ஸ்கூல்ல சேத்த நாள். அந்த வருஷம் தான் தம்பி நரேனுக்கு கல்யாணம். நான் சொன்ன பொண்ணு கழுத்துல தான் தாலி கட்டினான். ஒரு வார்த்தை சொன்னாலும், கட்டளை மாதிரி செய்வான்.''''இன்னுமொரு, 10 வயசை கழிப்போம்; இப்போ, உன் வயசு 17!'''' நான் பள்ளி இறுதி வகுப்பு; தம்பி எட்டாவது படிக்குறான். சைக்கிள்ல ஒண்ணா தான் போவோம். என்னை கேரியர்ல உட்கார வச்சு கூட்டிக்கிட்டுப் போகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சு, உட்கார சொல்வான்; குரங்கு பெடல் போட்டு ஓட்டுவான். ஒரு பக்கம் வேடிக்கையா இருக்கும்; மறுபக்கம் பயமா இருக்கும்.''''இன்னும், 10 வயதை மைனஸ் செய்யலாம்; இப்ப உனக்கு வயசு ஏழு...''''நான் ரெண்டாம் வகுப்பு போறேன்... எனக்கு ஸ்கூல் போகவே மனசு வராது. நான் இல்லன்னா தம்பிக்கு ஏக்கமாயிரும்; அழுதுகிட்டேயிருப்பான். ஆனா, அவன் மேல் எனக்கு வருத்தம். குச்சி வச்சு விளையாட்டு காட்டும் போது, என் கண்ணை குத்திட்டான்; வலிச்சது.''''அப்புறம்...''''சின்னவன் தானே, அடிக்க முடியுமா... எனக்கு அவனென்றால் ரொம்ப பிரியம்; பூனைக்குட்டி மாதிரி என் கால்களையே சுத்திச் சுத்தி வருவான்.''''ஓ.கே., பரத். கொஞ்சம் கொஞ்சமாய், ரிலாக்ஸ் செய்து மெதுவா திரும்பி வா. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்.''விழித்தெழுந்த பரத், முகத்தைத் துடைத்து, சுற்று முற்றும் பார்த்து, சுந்தரையும் பார்த்தான்.''புது அனுபவமா இருந்துச்சு... ஆழ்நிலையில தத்து பித்துன்னு உளறினேனா?''''தெரிஞ்சுக்கணுமா?''''சொல்லேன்...''''நீ பேசியதை பதிவு செய்துருக்கேன் கேளு,'' என்றபடி, மொபைல் போனை அவனிடம் கொடுத்தான்.தம்பி நரேன் வீடு கட்டியது, அவனுக்கு திருமணம் நடந்தது, தன்னுடன் பள்ளிக்கு வந்தது, தம்பி தன்னை அடித்தபோதும் மகிழ்ச்சியாக இருந்தது என, வாக்குமூலம் கொடுத்திருந்ததை கேட்ட பரத், சட்டென்று மொபைல் போனை நிறுத்தி, அறையை விட்டு வெளியேற, சுந்தரும் பின் தொடர்ந்தான்.பால்கனியில் காற்று வீசியது, 'மூட்-அவுட்'டில் இருந்த பரத் தோளில் கைபோட்டு, ''ஹிப்னடைஸ் செய்து தான், இந்த விவரங்கள நான் தெரிஞ்சுக்கணும்ன்னு இல்ல... உன் மனசில நரேனுக்கு எவ்வளவு இடம் கொடுத்து வச்சிருக்கேன்னு, உன்னைப் போலவே எனக்கும் நல்லா தெரியும். ட்ரான்ஸ் நிலையில நீ பேசிய பேச்சுகளும், அதையே நிரூபிக்குது. உன்னைப் போல் சகோதரனை நேசித்த நபரை பாக்கறது அபூர்வம்,'' என்றான் சுந்தர்.''அப்படி பாசத்தை கொட்டி ஆளாக்கினதுக்குத் தான் நல்ல பாடம் கத்துக் கொடுத்துட்டானே... அந்த நன்றி கெட்ட நாய்,'' என்றவன், ''கொஞ்சம் டைம் பாஸ் செய்யலாம்ன்னு உன்னை பாக்க வந்தா, அவனைப் பத்தி பேசி டென்ஷனாக்கிட்டியே,'' என்றான்.''சாரி பரத்... நான் மட்டும் நரேனை ஆஸ்பத்திரியில வச்சு பாக்காம இருந்திருந்தா, உனக்கு பிடிக்காத இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்க மாட்டேன். உன் தம்பிக்கு மேஜர் ஆபரேஷன்; மூளையில சிக்கலான இடத்தில் கட்டி. ஆறு மணி நேரம் போராடி, ஆபரேஷன் செய்து எடுத்துருக்காங்க. இது, அவனுக்கு மறுபிறவி; உடம்பெல்லாம் இளைச்சு, உயிரை மட்டும் சுமந்துகிட்டு படுத்திருக்கான்.''பக்கத்தில, நீ பாத்து கட்டிவச்ச பொண்ணு கலங்கிப் போய் உட்கார்ந்திருக்கு. உறவு, நட்புன்னு எல்லாரும் பாத்து ஆறுதல் சொல்லியாச்சு. நீ மட்டும் தான் எட்டிப் பாக்கல. ஏன்னு விசாரிக்காத ஆளில்லை. ''எல்லாருக்கும், பாகப்பிரிவினையில நடந்த கதையை சொல்லிக்கிட்டிருக்க முடியுமா... சொன்னாலும், 'ஆயிரம் இருந்தாலும் அண்ணன்காரன் தான் பெருந்தன்மையா விட்டுக் கொடுத்துப் போகணும்; சம்பிரதாயத்துக்கு கூட எட்டி பாக்காம, இந்த நிலையிலும் பகைமை பாராட்டுறான்னா அவனெல்லாம் ஒரு மனுஷனா'ன்னு தூத்துறாங்க. ''என் நண்பன மத்தவங்க விமர்சனம் செய்றத என்னால தாங்க முடியல. யார் என்ன சொன்னாலும், நரேன்கிட்ட துவேஷம் இல்லடா. நீ வரலையேங்கிற ஏக்கம் தான் அவன் கண்ணுல தெரியுது. உன் நன்மைக்காகவாவது வந்து பாரு. இல்லன்னா, காலத்துக்கும் அது ஆறாத ரணமாய், மாறாத வடுவாய் ஆயிடும்,'' என்றான் சுந்தர்.''ஊரைப் பத்தி எனக்கு கவல இல்ல; ஏங்குறான்னு சொல்றியே... இப்ப ஏங்கி என்ன செய்றது... அன்னைக்கு எங்கே போச்சு புத்தி! பாகப்பிரிவினையில என் பங்குக்கு விலை கொஞ்சம் அதிகமான வீட்டு மனை வந்திருச்சுன்னு, பத்து பேர் முன் சண்டை போட்டு அசிங்கப்படுத்தி, அத தன் பேருக்கு எழுதற வரை ஒத்தைக் கால்ல நின்னானே... தகராறில் கைகூட ஓங்கினானே...'' என்றான் உடல் பதற!''அதெல்லாம் எனக்கு தெரியும். உன் அறியாத் தம்பி மறுபடியும் குச்சியால் குத்திட்டான்னு நினைச்சு மறக்கக் கூடாதா...''''முடியாது சுந்தர்; குழந்தையா இருக்கும் போது செஞ்சதுக்கும், வளர்ந்த பின்னாடி, வளர்த்த கடா மார்ல பாய்ஞ்ச மாதிரி செய்யறதுக்கும், வித்தியாசம் இல்லயா...''''இருக்கு... சின்ன வயசுல, 'ஈகோ' இல்ல; அதனால, அப்ப குச்சியால் குத்திய தம்பிய சுலபமா மன்னிச்சுட்டே... இப்போ, 'ஈகோ' வளர்ந்து போச்சு; எதிர்த்துப் பேசி மனைய பிடுங்குன தம்பிய மன்னிக்க முடியல. உயிருக்கு உயிரான தம்பியின் உடல் நிலை அபாயத்துல இருக்கிறது தெரிஞ்சும், மனசை கல்லாக்கி, பழைய விஷயங்கள தேடிப் பிடிச்சு மனச சமாதானப் படுத்திக்கிறே. அதனால, அவன இந்த நிலையிலும் எட்டிப் பாக்க மறுக்கிறே... உன், 'ஈகோ'வை தூக்கிப் போட்டா எல்லாமே, 'ஈசி' தான்...''''ஈகோ இல்லாதவன் மனுஷனே இல்ல.''''ஒப்புக்கறேன்... அது, பாசமான சகோதரர்கள் மத்தியில வேணாமேன்னு தான் சொல்றேன். நாமெல்லாம் இன்னும் எத்தனை வருஷம் வாழப் போறோம்... மிஞ்சிப் போனால் இன்னொரு, 30 - 40 வருஷம்... இவ்வளவு காலம், மகிழ்ச்சியாக வாழ்ந்த நீ, இனி வரும் காலத்திலேயும் மகிழ்ச்சியா வாழப் போறியா இல்லே தம்பி மீதான பகையோடு கழிக்கப் போறியா... ''கால்ல தச்ச முள்ளை உடனே எடுப்பது சரியா இல்லே அது புண்ணாகி, புரையோடி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துற வரை வளக்கறது சரியா... கோபம் முள்ளு மாதிரி. உங்களுக்குள் சண்டை வந்த இந்த ரெண்டு வருஷத்துல, நீ பழைய பரத்தாகவே இல்ல. எதையோ தொலைச்சவன் போலவே இருக்குறே. எனக்கு இயல்பான என் பழைய நண்பன் வேணும்டா.''''என்ன செய்யச் சொல்ற இப்ப?''''ஒண்ணும் செய்ய வேணாம்... டாக்சிக்கு சொல்லியிருக்கேன்; என் கூட ஆஸ்பத்திரி வரைக்கும் வா போதும்.''''வேணாம்டா. என்னைப் பாத்தால் அவன் பொசுக்குன்னு அழுதுருவான்... அவன் ஹெல்த்துக்கு பாதிப்பு வரும்.''''ஏற்கனவே அழுதுகிட்டு தான் இருக்கான்... அழாதேன்னு நீ வந்து சொன்னா தான் கேட்பான். அதுக்காகத் தான் உன்னை கூப்பிடறேன்,'' என்றான் சுந்தர்.டாக்சியில் ஏறி, பத்து நிமிடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்து, லிப்டில் ஏறி நான்காவது தளத்திற்கு வந்தனர். அப்போதும், நரேன் இருக்கும் வார்டுக்கு வர தயங்கிய பரத்தை இழுத்து போய், நரேன் எதிரில் நிறுத்தினான் சுந்தர்.அண்ணனைப் பார்த்ததும், மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் அழுதபடியே சிரித்தான் நரேன்.ஆனால், தம்பியை பார்த்ததும், விம்மி விம்மி அழுத பரத், ''சின்ன காயத்தை கூட தாங்க மாட்டியே... உனக்கு இத்தனை பெரிய ஆபரேஷனா,'' என்று கண்ணீர் வடித்தான்.''அண்ணே... நான் தப்பு செய்துட்டேன்; என்னை மன்னிச்சுடு. அந்த மனையை நீயே எடுத்துக்க,'' என்று நரேன் ஒவ்வொரு சொல்லாய் சிரமத்துடன் உச்சரிக்க, அவன் வாயைப் பொத்தி, ''மனையா முக்கியம்... நீ குணமாகி எழுந்து வா போதும்,'' என்றான் பரத்.பாசம், அலையாய் எழுந்து ஒன்றை ஒன்று தழுவிக் கொள்வதைப் பார்த்து, நெகிழ்ந்தான் சுந்தர்.படுதலம் சுகுமாரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !