தடம் தந்த தந்தை தமிழ்வாணன் (17)
மீண்டும் ஆகாதவராக ஆன அப்பா!என் திருமணத்தைப் பொறுத்தவரை, எனக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருந்தன. இதிலும், என் விருப்பத்திற்கு மாறான விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்தன.எனக்கு வரப்போகிறவள் இப்படிப்பட்டவளாகத் தான் இருக்க வேண்டும் என்ற, என் கனவுகள் தகரும்படியான முயற்சிகளிலேயே அப்பா இறங்கியதும், செயல்பட்டதும், அவர் மீது சலிப்பை வளர்க்க ஆரம்பித்தன.மற்றவற்றை விடுங்கள்... எம்.ஏ., இறுதியாண்டு முடித்ததும் தான் திருமணம் என்ற என் விருப்பம், தவறா சொல்லுங்கள்.கல்லுாரி நண்பர்களுடன் நான், காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்தபோது, இங்கு அப்பா, எனக்குப் பெண் பார்த்து, கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார். சில சமயங்களில், 'புல்டோசர்' போல் ஆகிவிடுவார், அப்பா.'புல்டோசர்' எப்படி வழியில் எதிர்ப்படும் மரம், செடி, கொடி, பாறை, பிற தடைகளை வாரிச் சேர்த்து ஓரம் கட்டி விடுமோ, அப்படித் தான். எடுத்த முடிவைச் செயல்படுத்த எண்ணி விட்டால், 'பர்ஸ்ட் கியர்' போட்டு, 'புல்டோசரை' கிளப்புவார். அம்மாவின் செல்வாக்கெல்லாம் ஒன்றும் எடுபடாது.பிறகென்ன... அனைவரும் பார்வையாளர்களாக வேண்டியது தான். நான் அறிந்தவரை, இந்த, 'புல்டோசரை' ஒற்றை ஆள் காட்டி விரலால் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி, 'குமுதம்' இதழ் ஆசிரியர், நிறுவனர், எஸ்.ஏ.பி.அண்ணாமலையிடம் மட்டுமே இருந்தது.ஆனால், இது குடும்ப விவகாரம். எஸ்.ஏ.பி.,யிடம் போய் நிற்க முடியாது. அவரும், இது, நாகரிகமில்லை என்று நினைப்பார்.காஷ்மீரின் குளிரிலிருந்து தப்பித்து வந்த நான், எனக்கென நடந்து முடிந்த இந்தத் திருமணப் பேச்சை அறிந்து, ரொம்பவும் சூடானேன்.எதையும் எதிர்க்க முடியாத அம்மாவும் கட்சி மாறி, அப்பா பக்கம் சேர்ந்து, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. புதுக்கோட்டையிலிருக்கும் உன் பெரியம்மா மகள், ஜெயம் திருப்பதி வீட்டிற்குப் போகிறோம்; உனக்குப் பெண் பார்க்க அங்கு ஏற்பாடாகி இருக்கிறது...' என்றார்.'என்னம்மா இது... எம்.ஏ., படிப்பும்மா, எட்டுப் பாடம்மா... தேர்வு நேரத்துல எனக்கு இது தேவையா... தேர்வு முடியட்டும்மா...' என்றேன்.'உங்கப்பா பத்தித் தெரியும்ல... அவர் சொன்னா சொன்னது தான்...' என்றார்.திருமணம் மற்றும் பெண் பார்க்கும் படலம், ஓர் ஆடவன் வாழ்வில் எவ்வளவு மகிழ்ச்சிகரமான - சுவையான அம்சம். ஆனால், நானோ, பலி ஆடு போல என்னை உணர்ந்தேன்.காரில் குடும்பத்தோடு புதுக்கோட்டைக்குப் போனோம். இதன் பின்னணியில் உள்ள சாதுரியமான திட்டத்தை நான் உணர்ந்திருக்கவில்லை. அனைவரோடும் போனால், 'பயலை' (என்னைத்தான்!) சரியாகக் கோழி அமுக்குவது போல அமுக்கி விடலாம். பயல் திமிர முடியாது என்று, கணக்கு போட்டிருக்க வேண்டும், அப்பா.'பெண் அப்படிச் சிவப்பாக்கும், அவ்வளவு அழகாக்கும்...' என்றனர்; நடிகை பத்மினி அளவுக்கு உயர்த்திப் பேசினர்.இப்படியெல்லாம் சொல்லாமல் இருந்தாலாவது, என் எதிர்பார்ப்பு குறைந்திருக்கும். பெண் அப்படியெல்லாம் இல்லை.அக்கா வீட்டில் பெண் இருக்க, காரிலிருந்து நடந்து வீட்டில் நுழைய இருந்த நேரம், செம்மையாக மழை பிடித்துக்கொள்ள, நனைந்த கோழி போல் ஆனேன். என், 'மேக் - அப்' எல்லாம் கலைந்து விட்டதும், 'பெண்ணுக்கு என்னைப் பிடிக்காமல் போனால் கூட நல்லது...' என்று, கருதிக் கொண்டேன்.நாமாக முடிவுக்கு வரக்கூடாது என்று, குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து கேட்டதற்கு, (அப்பா உட்பட) 'உன் வாழ்க்கை, நீ முடிவு செய்...' என்று, கழன்று கொண்டனர்.பெண்ணின் அம்மாவும், 'மாப்பிள்ளை பையன் சிகப்புன்னாங்களே... அப்படி இல்லையே...' என்று சொன்னது காதிற்கு வர, நான், 'சொய்ங்' என்று, காற்று இறங்கிய பலுனானேன்.பெரியம்மா பெண் ஜெயம், ஒரு தட்டு நிறைய மிட்டாய்களைக் கொட்டி, 'இந்தா, எடுத்துக்க தம்பி. சும்மா எடுத்துக்க...' என்றார்.எடுப்பது மிட்டாய் அல்ல, என் வாழ்க்கை என்பது, எனக்கா தெரியாது... ஆனாலும், எடுத்துக் கொண்டேன்.பெண் வீட்டாருக்கு, சீக்கிரமே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற அவசரம்.இதற்கு அவர்கள் சொன்ன காரணம், பேத்திக்கும், அப்பத்தாவுக்கும் ஒரே பெயர். அப்பத்தா மிகவும் வயதானவர்களாக இருக்கின்றனர். அதுவும், அடிக்கடி அவர்களுக்கு உடம்பிற்கு முடியாமல் போகிறது, என்பது.'பேத்தி திருமணத்தை நான் என் கண்ணோடு பார்த்து விட வேண்டும். அதனால், சீக்கிரம் தேதி வச்சுக்குங்க...' என்று, அப்பத்தா, தன் பங்கிற்கு விரைவுபடுத்த, படு வேகமாகத் திருமணத் தேதி குறித்து, ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து விட்டனர்.எனக்கோ, திருமணத்திற்கும், எம்.ஏ., இறுதியாண்டுத் தேர்வுக்கும் இடையே மிகக்குறைவான நாட்களே இருந்தன.'அம்மா... என்னம்மா இது... திருமணத்துக்கு தான் அவசரப்படுத்தினீங்க... தேதியிலுமா அவசரம்... தேர்வுகளெல்லாம் முடியட்டும்மா... தேனிலவுக்காவது நிம்மதியாப் போக முடியுமாம்மா... அப்பாகிட்ட சொல்லும்மா...' கெஞ்சினேனே தவிர, நல்ல பதில் இல்லை.நானே அப்பாவிடம் பேசினேன். 'சரி, நான் சம்பந்தியிடம் பேசுறேன்...' என்றவர், பேசிவிட்டு தொய்ந்த குரலில், 'அப்பத்தாவுக்கு மறுபடி ரொம்ப முடியலையாம். அதனால, ஒருநாள் கூடத் தள்ளிப்போட முடியாதுங்குறாங்க...' என்றார்.வேடிக்கை ஒன்று சொல்லவா... (சிரிக்காமல் படியுங்கள், ப்ளீஸ்!) எங்கள் திருமணத்திற்குப் பிறகு இந்த அப்பத்தா, ஆறு ஆண்டுகள் நல்லபடியாக இருந்தார் என்பதே அது!அப்பா முடிவே, அறிவார்ந்த முடிவு!என் மண வாழ்க்கையின் வயது, 43. இன்று வரை அருமையான இல்லறம். இப்படி ஒரு குணவதி கிடைத்ததால் தான், என்னால் நிம்மதியாக எழுத முடிகிறது. கணவனே உலகம். பிள்ளைகளை, பேரன் - பேத்திகளை சுற்றியே தன் வாழ்க்கை; ஓர் ஆசை கிடையாது.தங்கம், வைரம், புடவை என, எவற்றின் மீதும் ஆசைப்படாத தன்மை. அப்பாவின் கட்டாயப்படுத்தலும் நன்மையில் தான் முடிந்திருக்கிறது.வாசகியர் என்னுடன் கை கொடுத்துப் பேசும்போதும், ஒட்டியும், உரசியும் நின்று அவர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போதும்...தொலைபேசியில் நேரங்கெட்ட நேரத்தில் அழைக்கும்போதும், அவற்றைப் பார்த்துப் பொறாமைப்படாத, வேறு கண் கொண்டு பார்க்காத, என்னைச் சிறிதும் ஐயுறாத என்னவளின் குணம், எத்தனை பொது வாழ்வு மனிதர்களுக்கு இருக்க முடியும்? (போதும் போதும் மனைவி புராணம் தாங்க முடியலை என்கிறீர்களா?) சரி சரி!அப்பா எனக்கு அளித்த கொடைகள், தன் உதிரம், எழுத்து, 'கல்கண்டு' இதழ் பதவி, சொத்துக்கள், நான் இணைத்துக் கொண்ட அவரது முழுப் பெயர், அவரது கண்ணாடி, பெயராக ஒட்டிக்கொண்டு விட்ட அவரது புகழ் வெளிச்சம், இப்படி பலப்பல.இவை எல்லாவற்றையும் விட, அவர் செய்து வைத்த திருமணம் தான் சிறந்தது என்று சொல்வேன்.என் திருமண வரவேற்பில், அப்பா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை, அவசியம் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!தற்கொலையைத் தடுத்த தமிழ்வாணன்!சமூக சேவகரும், 'அன்புப் பாலம்' இதழின் ஆசிரியருமான, பாலம் கல்யாண சுந்தரம், பெண்மை கலந்த கீச்சுக் குரல் உடையவர். இவர் வாலிபராக இருந்தபோது, நண்பர்களின் கேலி தாங்காமல், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு முன் கடைசி ஆசையாக, தம் அபிமான எழுத்தாளர் தமிழ்வாணனைச் சந்தித்தார்.'நீ எப்படிப் பேசுகிறாய் என்பதை விட, உன்னைப் பற்றி உலகம் எப்படிப் போசப் போகிறது என்பது தான் முக்கியம். அதன்படி வாழ்க்கையை உருவாக்கிக் கொள்...' என்ற தமிழ்வாணனின் அறிவுரையை ஏற்றவர், பாலம் கல்யாண சுந்தரம்.— தொடரும்லேனா தமிழ்வாணன்