உள்ளூர் செய்திகள்

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (1)

திருநெல்வேலி மாவட்டத்தில், ஆச்சாரமான வைதீகக் குடும்பத்தில், ஜூலை, 12, 1938ல் பிறந்தவர், சங்கர் என்ற சங்கர சுப்ரமணியன். தந்தை சுப்ரமணியன், நீதிமன்ற நடுவராக பதவி வகித்தவர். கண்டிப்புக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். பெண்கள், வீட்டில் அடைந்து கிடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்த அந்த காலத்திலேயே, பள்ளிப் படிப்பை முடித்தவர், சங்கரின் தாயார் யோகாம்பாள். வீணை மீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றவர்.சங்கர், தன் பள்ளிப் படிப்பை துவங்கிய சமயம், சுப்ரமணியன், பணி நிமித்தமாக, திருச்சிக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை. அங்கு, ஓராண்டு பணியாற்றிய பின், சென்னைக்கு மாற்றல் கிடைத்தது. மந்தைவெளியில், ஒரு சிறிய வீட்டில் குடியேறினர்.பிள்ளைகளை, மயிலாப்பூர் பி.எஸ்., உயர்நிலை பள்ளியில் சேர்த்தார், சுப்ரமணியன். நடுத்தரத்துக்கு மேலே படிக்கக் கூடிய சங்கருக்கு, அடுத்தவருக்கு உதவும் இரக்க சுபாவம் இயல்பாகவே அதிகம் உண்டு. மகனின் இந்த இரக்க குணம், பெற்றோருக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அவனை எவரும் ஏமாற்றிவிடக் கூடாது என்ற கவலையும் இருந்தது. ஒரு நல்ல பிள்ளைக்கான அத்தனை தகுதிகளுடனேயே வளர்ந்தான், சங்கர்.அந்நாளில், நாடகங்கள் தான், மக்களின் பிரதான பொழுதுபோக்கு. ஒரு பக்கம், பிரபல நாடகக் குழுக்கள், மக்களின் மாலை நேரங்களைத் திருடிக் கொண்டிருந்தன. மற்றொரு பக்கம், 'ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ்' போன்ற சினிமா நிறுவனங்கள், புராண மற்றும் சமூக படங்களை தயாரித்து, மக்களை வசியப்படுத்திக் கொண்டிருந்தன.சென்னையில், சென்ட்ரல் பின்புறம் உள்ள, ஒற்றைவாடை நாடக அரங்கில், பிரபலமான நாடகக் குழுக்களின் சார்பில் நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறும். பெற்றோருடன் அங்கு சென்று நாடகம் பார்க்கும் வாய்ப்பு, சிறுவனான சங்கருக்கு எப்போதாவது கிடைக்கும்.நாடகங்களுடன் சினிமா பார்க்கும் வழக்கமும், சங்கருக்கு உருவாகியது. டார்ஜான் மற்றும் லாரல் அண்ட் ஹார்டி படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். இத்தனைக்கு நடுவிலும், படிப்புக்கு பாதகமில்லை. கிரிக்கெட், பேஸ்கட்பால் இரண்டும் சங்கருக்கு விருப்பமான விளையாட்டுகள். இவற்றின் மூலம் பெற்ற மெடல்களால் வீடு நிறைந்தது. மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்பது தாயின் கனவு. தந்தை சுப்ரமணியனுக்கோ, தன்னைப் போல் நீதித்துறையில் புகழ்பெற வைக்க ஆசை.பி.எஸ்., உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒருநாள், தமிழாசிரியர் வரவில்லை. அந்த வகுப்பை நுண்கலை வகுப்பாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார், தலைமை ஆசிரியர். ஆடல், பாடல், நடனம் என, மாணவர்கள் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தினர். கருணாநிதியின் கதை, வசனத்தில், சிவாஜி கணேசன் நடித்த, பராசக்தி படம், தமிழகமெங்கும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திய சமயம் அது. அதில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சி, இளைஞர்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டது.பெற்றோருடன் அந்தப் படத்துக்கு சென்ற சங்கருக்கு, அதன் வசனங்கள் மனதிற்குள்ளேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதையே வகுப்பில் அன்று, ஏற்ற இறக்கத்தோடு பேசி, நடித்தான். பேசி முடித்ததும் எழுந்த கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது.ஒரே பகலில், பள்ளியின், 'ஹீரோ' ஆனான், சங்கர். அதன் விளைவு, பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை, பள்ளியின் ஆண்டு விழா, அவன் பங்கேற்பின்றி நடந்ததில்லை. 1954ல் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். அதன்பின், புதுக்கல்லுாரியில், இரண்டு வருட இன்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தான், சங்கர். அங்கு பயின்றபோது நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தின் மீது ஆர்வம் உருவாகி, அதைக் கற்றும் தேர்ந்தான். அப்போது, சென்னையில் நடைபெற்ற கலை மற்றும் கலாசார நிகழ்ச்சியில், கரகாட்டம் பிரிவில், புதுக்கல்லுாரி சார்பில் கலந்து கொண்டு, பரிசும் பெற்றான். 1956ல், நல்ல மதிப்பெண்ணுடன் இன்டர்மீடியேட் படிப்பில் தேர்ச்சி பெற்றான். தன் மகனை நல்லதொரு வழக்கறிஞர் ஆக்கும் கனவோடு, விவேகானந்தா கல்லுாரியில், பி.ஏ., வரலாறு பாடப் பிரிவில் சேர்த்தார், தந்தை சுப்ரமணியன்.அந்த காலத்தில், விவேகானந்தா கல்லுாரி, பெரிய வீட்டுப் பிள்ளைகளின் கனவுக் கல்லுாரிகளில் ஒன்றாக இருந்தது. சங்கருக்கு ஒரு புதிய உலகின் கதவுகளை திறந்து விட்டது, விவேகானந்தா கல்லுாரி. அங்கு, சங்கருக்கு சீனியராக இருந்து, பின்னாளில் நடிகர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் என, புகழடைந்தவர், சோ. பி.ஏ., படிப்பில் சேர்ந்த முதல் ஆண்டு, கல்லுாரியின் திறந்தவெளி தியேட்டரில், அன்றைய நாடக உலகில் புகழ்பெற்ற, சாம்பு நடராஜனின், 'திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ்' என்ற அமெச்சூர் நாடக குழுவினரின், 'மிஸ்டர் வேதாந்தம்' என்ற நாடகம் நடைபெற்றது.நாடகத்தை ரசித்துப் பார்த்தார், சங்கர். நடிகர்களின் வசன உச்சரிப்பு, அவர்களின் மேனரிசங்கள், அதற்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்கும் கைத்தட்டலும், வரவேற்பும், சங்கரை அன்றிரவு உறங்க விடவில்லை. நடிகர்கள், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட செய்கை, சங்கரை என்னவோ செய்தது. கல்லுாரியில், நாடக ஆர்வம் கொண்டவர்களோடு வலிந்து, நட்பானார். சென்னையில் எங்கு நாடகம் நடந்தாலும், தேடிச் சென்று, பார்க்கத் துவங்கினார், சங்கர். அரசல் புரசலாக இதைக் கேள்வியுற்ற பெற்றோர், 'இதென்ன நாடகம், கூத்துன்னு. நம்ம குடும்பத்துல யாருக்கும் இல்லாத புது பழக்கம் உனக்கு... படிக்கிற வழியைப் பாரு. பி.ஏ., முடிச்சுட்டு, லா காலேஜ் சேரணும். அதுக்காக தயாராகுப்பா...' என, தோளுக்கு மேல் உயர்ந்த பிள்ளையை நயமாகத்தான் கண்டித்தனர். பெற்றோர் சொல்லை கேட்டாரா, சங்கர்.—தொடரும்இனியன் கிருபாகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !