இதப்படிங்க முதல்ல...
கமல் கொடுத்த, 'சர்ப்ரைஸ்!'கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன், கமல் நடிக்கயிருந்த, மருதநாயகம் படம், பைனான்ஸ் பிரச்னையால், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், தயாரிக்க முடிவெடுத்துள்ளார், கமல்ஹாசன். இதற்காக, விக்ரமை தன் அலுவலகத்துக்கு அழைத்து, 'இனி, நீங்கள் தான், மருதநாயகம். நான், தயாரிப்பாளர் மட்டுமே...' என்று சொல்லி, அவருக்கு மிகப்பெரிய, 'சர்ப்ரைஸ்' கொடுத்துள்ளார்.— சினிமா பொன்னையாஓட்டம் பிடித்த, நிவேதா தாமஸ்!கமலின், பாபநாசம் மற்றும் ரஜினியின், தர்பார் படங்களில், மகளாக நடித்துள்ள, நிவேதா தாமஸ், 'டூயட்' பாட ஆசைப்பட்டு, 'மகளாக நடித்து விட்டேன்; அடுத்தபடியாக, கதாநாயகியாக, 'பிரமோஷன்' கொடுங்கள்...' என்று, சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டார். ஆனால், 'உங்களை கதாநாயகியா கற்பனை பண்ணவே முடியல. தமிழ் ரசிகர்கள் மனசுல, மகளாவே ரொம்ப அழுத்தமா பதிஞ்சிட்டீங்க...' என சொல்லி, கதாநாயகியாக நடிக்க வைக்க தயங்கி நின்றனர். விளைவு, கோடம்பாக்கமே வேண்டாமென்று, மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே ஓட்டம் பிடித்து விட்டார். தான் ஒன்றை எண்ண, விதி ஒன்றை எண்ணிற்று!— எலீசா'கெத்து' காட்டும், ஆண்ட்ரியா!தனுஷுடன், வடசென்னை படத்தில் நடித்த பின், 'நானும் பர்பாமென்ஸ் நடிகை தான்...' என்று, 'கெத்து' காட்டத் துவங்கினார், ஆண்ட்ரியா. இப்போது, விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்து வருபவர், தானும் பரபரப்பான நடிகையாகி விட்டதாக சொல்கிறார். அதோடு, 'சிறிய நடிகர்களின், 10 படங்களில் நடிப்பதும், ஒரு விஜய் படத்தில் நடிப்பதும் ஒன்று...' என்று சொல்லும், ஆண்ட்ரியா, 'இனி, சிறிய வேடங்கள் என்றாலும், மெகா நடிகர்களின் படங்களுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்...' என்று, 'கெத்'தாக பேசி, தன்னை ஒப்பந்தம் செய்து வந்த சில பட்ஜெட் படங்களை, 'டீலில்' விட்டுள்ளார். கிடைக்காத சரக்கு கிடைத்ததைப் போல!— எலீசாமெகா நடிகையரை ஏமாற்றிய, அஜீத்!அஜீத்தின், வலிமை படத்தில் நடிக்க, நயன்தாரா, அனுஷ்கா, இலியானா மற்றும் யாமி கவுதம் உட்பட, பல மெகா நடிகையர், முட்டி மோதினர். ஆனால், தன்னுடன் நடிக்க விரும்பி வந்த இவர்களின் பெயரை, 'டிக்' அடிக்காத, அஜீத், ரஜினியின் காதலியாக, காலா படத்தில் நடித்த, ஹிந்தி நடிகை, ஹூமா குரோஷியின் பெயரை, 'டிக்' அடித்து விட்டார். அதோடு, 'இந்த நடிகையரை கவர்ந்த, 'ஹீரோ'வாக நான் இருந்தாலும், என்னை கவர்ந்த, 'ஹீரோயினி' அவர் தான்...' என்று சொல்லி, தென் மாநில நடிகையருக்கு, செம அதிர்ச்சி கொடுத்து விட்டார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!சீயான் நடிகர் மூலம், தன்னை இயக்குனராக வெளிப்படுத்திய, அந்த இரண்டெழுத்து இயக்குனர், பல நடிகர்களை வளர்த்து விட்டவர். தற்போது, 'டவுன்' ஆகி கிடப்பவரை, கை துாக்கி விட, ஒருவர் கூட, அவர் படத்தில் நடிக்க, 'கால்ஷீட்' கொடுக்கவில்லை; அவர் படத்தில், 'ஹீரோ'வாக நடிக்க, ஒரு வில்லன் நடிகர் தான், முன் வந்துள்ளார். இதையடுத்து, இக்கட்டான நேரத்தில், தனக்கு கைகொடுக்காத, 'ஹீரோ'க்களுக்கு போன் போட்டு, திட்டித் தீர்த்து விட்டார், இரண்டெழுத்து இயக்குனர். இதில், ரொம்ப, 'டேமேஜ்' ஆனவர், சீயான் நடிகர் தான்.'டேய் பாலா... யாருடைய உதவியும் தேவையில்லைன்னு சொல்லி தேர்வை எழுதுன. ஆனா, சரியா எழுதாம கோட்ட விட்டுட்டே... இன்னொரு முறை தேர்வு எழுத விரும்பறே... அதுக்காக, உன்னால வெற்றி பெற்றவர்கள் இப்ப உனக்கு, 'நோட்ஸ்' கொடுத்து உதவணும்ன்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்...' என்று கடிந்து கொண்டான், நண்பன்.சினி துளிகள்!* அதோ அந்த பறவை போல என்ற படத்திற்காக, க்ராவ் மகா என்ற, தற்காப்பு கலையில், பயிற்சி எடுத்து நடித்துள்ளார், அமலாபால்.* நடன மாஸ்டர், பிருந்தா இயக்கும், முதல் படத்தில், துல்கர்சல்மான், காஜல்அகர்வால் ஜோடி சேருகின்றனர்.* தான் இயக்கிய, தாரைத்தப்பட்டை படத்தில், வில்லனாக நடித்த, ஆர்.கே.சுரேஷை வைத்து, ஒரு படம் இயக்குகிறார், பாலா.அவ்ளோதான்!