உள்ளூர் செய்திகள்

குப்பை சேகரிக்கும் எம்.பி.ஏ. பட்டதாரிகள்!

திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சந்திரகுமார், படிப்பை முடித்து பல இடங்களில் வேலை பார்த்துள்ளார். ஆனாலும், பணியில் நிரந்தர தன்மையும், மனநிம்மதியும் இல்லாமல் இருந்துள்ளது.அதனால், சொந்தமாக ஏதாவது தொழில் துவங்கலாம் என எண்ணியபோது, இவரைப்போலவே சிந்தனை கொண்ட எம்.பி.ஏ., பட்டதாரிகளான காமராஜ் மற்றும் சதீஷ்குமார் இவருடன் இணைந்தனர்.சிறுவயதில், வீடுவீடாக பேப்பர் போட்டு, அந்த வருமானத்தில் கல்வி கற்றவர் சந்திரகுமார். பேப்பர் போடும் போது, சில வீடுகளில், 'பழைய பேப்பரை எடுத்துக்கிறீயாப்பா...' என்று கேட்பர். அது, இப்போது நினைவுக்கு வர, அதையே நவீன பாணியில் தொழிலாக செய்ய முடிவெடுத்து, இணையத்தில், www.kuppavandi.com என்ற தனி வலைதளத்தை உருவாக்கினர்.திருச்சியில் உள்ளவர்கள், இந்த வலை தளத்தில் தங்கள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்பதை பதிவு செய்தால், அந்த நேரத்தை உறுதி செய்து, மினி லாரியில் சென்று பழைய பேப்பரை வாங்கி வந்து விடுவர்.ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இல்லை. சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும், ஒன்றிரண்டு அழைப்புகள் வரும். ஆனால், மனதை தளரவிடாமல், உழைத்தனர். கடந்த, 2012ல் துவங்கப்பட்ட இந்த குப்பை வண்டி டாட் காம் இப்போது வேகம் எடுத்துள்ளது.பழைய பேப்பர் மட்டுமில்லாமல், வீட்டில் உள்ள பால் கவர், மின் சாதனங்கள், உபயோகமில்லாத பர்னிச்சர்கள், துணிகள் என்று வேண்டாத பழைய பொருட்கள் எது என்றாலும் வாங்கிக் கொண்டு, அதற்குரிய பணத்தை கொடுத்து, ரசீதும் கொடுத்து விடுகின்றனர்.ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என பிரித்து, 10 - 15 வீடுகளுக்கு செல்கின்றனர். காலை, 9:00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சேகரிப்பு வேலை, மாலை, 6:00 மணிக்கு முடிகிறது. பின், தாங்கள் சேகரித்ததை தரம் பிரித்து, தேவையானவர்களுக்கு விற்கின்றனர்.இவர்களது அணுகுமுறை, தொழில் நேர்மை காரணமாக, ஒரு முறை இவர்களிடம் வாடிக்கையாளரானவர்கள், பின்னர் அவ்வப்போது தங்களுக்கு வேண்டாத பொருட்களைக் கொடுத்து வருவதுடன், இவர்களை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றனர்.தங்களிடம் சேரும் பிளாஸ்டிக் டப்பக்களில் செடிகள் வளர்த்து, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுத்து மரம் வளர்க்க ஊக்கப்படுத்தும் இவர்கள், 'எம்.பி.ஏ., படித்துவிட்டு குப்பை அள்ளுற வேலையை செய்கிறீர்களே...' என கிண்டல் செய்தவர்கள் நிறைய பேர். ஆனால், அப்படி சொன்னவர்கள் யாரும் எங்களுக்கு வேலையோ, சோறோ போடப்போவது இல்லை. அறிவை வளர்த்துக்கொள்ள படித்தோம்; அது கொடுத்த அறிவை இப்போது தொழிலில் பயன்படுத்துகிறோம்.'நாங்கள் வேலை இல்லாமல் இருந்தது ஒரு காலம்; இப்போது நாமக்கல், கோவை போன்ற ஊர்களில் எங்களது குப்பைவண்டி டாட் காமை துவங்கி, நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தர இருக்கிறோம். எம்.பி.ஏ., படிப்பிற்காக வேலை பார்த்தபோது, கடைசியாக என்ன சம்பளம் வாங்கினோமோ, அதைவிட அதிகமாகவே இப்போது சம்பாதிக்கிறோம்...' என்றனர் பெருமையோடு!மேலும், 'எந்த தொழிலாக இருந்தாலும், அதை நேசித்து செய்தால், நிச்சயம் உயர்வுதான். இனிமேல் நாங்கள் வேலை கிடைத்தாலும் போக மாட்டோம். இந்த குப்பைவண்டி டாட்காமை இன்னும் எப்படி எல்லாம் விரிவு படுத்துவது என்பதில் தான், எங்கள் எண்ணம் இருக்கிறது...' என்றனர்.படித்த இளைஞர்கள் ஒயிட் காலர் வேலைதான் வேண்டும் என்று பொழுதை தேய்க்காமல், எந்த தொழிலை செய்தாலும், அதில் நேர்மையையும், நேர்த்தியையும் காண்பித்துவிட்டால், அடுத்து, முன்னேற்றம் தான் என்பதற்கான அடையாளம் இவர்கள்!இவர்களை வாழ்த்துவதற்கும், தொடர்பு கொள்வதற்குமான மொபைல் எண்கள்: 90431 07007, 90431 69966.எம்.ஆர்.ஜெ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !