தோழியும், தோழமையும்!
'வேண்டாம்டி, இந்த விஷ பரீட்சை...' என, ஹரிணியை எச்சரித்தாள், ஷீனா.'எதுடி விஷ பரீட்சை... எனக்கு நிச்சயம் பண்ணவரு, பெண்கள் விஷயத்துல, ஸ்ரீராமனா இருக்கணும்ன்னு, நான் எதிர்பார்க்கறேன்... இது, தப்பா?' எனக் கேட்டாள், ஹரிணி.'அதுக்கில்லடி... ஒருத்தருக்கு, நிறைய கெட்ட வாய்ப்பை ஏற்படுத்தி, அப்படியும் ரொம்ப நல்லவனா இருக்கணும்கிறது... ஓவரா இருக்கே?''ஆமாம்... இது, வாழ்க்கை பிரச்னை... நான், 'டெஸ்ட்' பண்ண தான் போறேன்... என் உயிர் தோழி நீ... கண்டிப்பா உதவி பண்ணணும்...' என, அன்பு கட்டளையிட்டாள், ஹரிணி.'நாளைக்கு, உன், 'வுட்பி' கண்டுபிடிச்சிட்டா?''அதெல்லாம் நடக்காது... அப்படி தெரிஞ்சுதுன்னா... கல்யாணத்துல, பையன - பொண்ணை பற்றி விசாரிக்கிறதில்லையா... அது மாதிரி தான் இதுவும்ன்னு சொல்வேன். மடியில கனம் இருந்தாதானே, வழில பயப்படணும்ன்னு கேட்பேன்!''போடி... ஏதோ, உனக்காக நான் இதை செய்யறேன்...' என, தைரியம் சொன்னாள், ஷீனா.அந்த உரையாடல் அத்துடன் முடிந்தது.மறுநாள், விஷ்வாவின் மொபைல்போனில், ஹரிணி படம், 'டிஸ்ப்ளே' ஆனது, குஷியுடன் எடுத்தான்.'நாந்தான்...''எஸ்... சொல்லுங்க...''ப்ச்... வாங்க, போங்க வேண்டாம்...' என்றாள், ஹரிணி.'ம்... சரி, சொல்லு செல்லம்...''ம்... வந்து, எங்க ஆபீஸ்ல, 10 நாளைக்கு, 'அவுட்டோர் புராஜெக்ட் அரேஞ்ச்' பண்ணியிருக்காங்க... இப்ப பாத்து, என் ஆபீஸ் பிரெண்ட், ஷீனா, தன் ஸ்கூட்டிய, சர்வீசுக்கு விட்டிருக்கா... ஸோ...''ஸோ...''சர்வீஸ்லேர்ந்து வர்ற வரைக்கும்... தினமும் நீங்க, அவள, சாயந்திரம் மட்டும் வீட்ல, 'டிராப்' பண்ணணும்...'யோசித்தான், விஷ்வா.'என்ன யோசிக்கறீங்க... ப்ளீஸ்...''இல்ல... காலையில எப்படி வருவாங்க... அது மாதிரியே, சாயந்திரமும் போக வேண்டியது தானே?''அப்படியில்ல... காலையில் ஆபீசுக்கு நேரத்துக்கு வரணும்கிறதுக்காக, 'கேப்ஸ்' உண்டு... சாயந்திரம் கிடையாது...''சரி... ஆட்டோ அல்லது 'கால் டாக்சி'யில போகலாமே?''என்னங்க, விஷ்வா... இத யோசிக்க மாட்டாளா... அவ, ரொம்ப பயந்த சுபாவம். நானாயிருந்தா பரவாயில்ல... அதான், உங்க உதவி கேக்கறேன்...'சில நொடி மவுனத்திற்கு பின் சம்மதித்தான்.'ஓ.கே., செல்லம்... என்னிக்கு, 'ஸ்டார்ட்' பண்ணணும்...''நாளையிலேர்ந்துங்க...'அன்று காலை -'டீ... விஷ்வா சம்மதிச்சுட்டாரு... இன்னிலேர்ந்து நான் வேற ஒரு விஷயமா, பெங்களூர் போறேன்... உன்னை, சாயந்திரம், 'டிராப்' பண்ணுவாரு... நல்லா, 'டிரெஸ்' பண்ணிக்க... 'சோஷியலா' பேசு... அதே நேரம், அவரோட, 'பிகேவியர அப்சர்வ்' செய்து... அப்பப்ப எனக்கு, 'மெசேஜ்' பண்ணு... இல்ல, பேசு... சரியா...' என்றாள்.'சரிடி...' தயங்கியபடி சம்மதித்தாள், ஷீனா.அன்று மாலை, சந்தன நிற சுடிதாரில், அழகாக மின்னினாள், ஷீனா. பல்சரின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள். சர்வ ஜாக்கிரதையாக, மேடு, பள்ளங்களில் மெதுவாக சென்றான், விஷ்வா. இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.வீட்டில் இறங்கியவுடன், 'தேங்க்ஸ்' சொன்னாள்; 'நோ மென்ஷன்' சொல்லி விடை பெற்றான், விஷ்வா.தகவல்கள், ஹரிணிக்கும் சென்றன.மறுநாள் அதே மாதிரி தான். விடைபெறும்போது, 'ஸ்கூட்டி எப்போ வரும்?' என்றான்.'தெரியலியே...''ஓ.கே., பை...' என, விடைபெற்றான், விஷ்வா.மறுநாள், 'நம் பழக்கம், ரொம்ப செயற்கையா, ஒரு பயத்தோட இருக்கு... அது வேண்டாம். 'ஜஸ்ட்' ஒரு காபி சாப்பிட்டு போகலாம்...' என்றான், விஷ்வா.'ம்...' என்றாள், ஷீனா.இருவரும் ஒரு காபி, 'ஷாப்'பில் இளைப்பாறினர். வேறு உரையாடல் இல்லை.எல்லா தகவல்களும், ஹரிணிக்கு சென்றன.அடுத்த நாள், வண்டியில் ஏறும் முன், விஷ்வாவுக்கு ஒரு சாக்லேட்டை கொடுத்து, 'இன்னிக்கு, என் பர்த்டே...' என்றாள், ஷீனா.'ஓ... சூப்பர்... மெனி மெனி ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே...' என்றபடி, வண்டியை கிளப்பியவன், துணிக்கடை முன் நிறுத்தினான்.'ஏன்...' என, வினவியவளிடம், 'என் வருங்கால மனைவியோட, ப்ரென்ட் நீங்க. பரிசு கொடுக்காம போனா எப்படி... கண்டிப்பா எனக்காக, ஒரு சுடிதார் எடுத்துக்கணும்... ப்ளீஸ்...' என, கெஞ்சினான்.பயந்தாள். ஆனால், காட்டிக்கொள்ளவில்லை, ஷீனா.'கண்டிப்பா எடுக்கணுமா?''எஸ்... இல்ல, நான், 'செலக்ட்' பண்ணுவேன்...''வேண்டாம்... வேண்டாம்...' பதட்டத்தோடு ஏதோ ஒன்றை எடுத்தாள், ஷீனா.'நோ, ஷீனா... உங்க மாநிறத்துக்கு இந்த, 'கிரே' கலர் தான், 'மேட்சிங்'கா இருக்கும்...' என்று, ஷீனாவின் பதிலை எதிர்பாராது, தானே எடுத்தான்.'வேற ஏதாவது வேணுமா?' கேட்டான், விஷ்வா.பதில் இல்லை. ஆனால், அன்று, சுடிதார் விஷயத்தை, ஹரிணிக்கு சொல்லவில்லை, ஷீனா.விஷ்வா நல்லவன் தான். ஒரு நண்பர் என்ற வகையில், பரிசு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், ஹரிணிக்கு அது பிடிக்காது.தன் வகையில் சாதாரண ஒன்று, ஹரிணிக்கு தவறாக தோன்றும் பட்சத்தில், பிரச்னை வரலாம் அல்லது திருமணம் நிற்க கூட வாய்ப்புண்டு. தன் செயலுக்கு நியாயம் இருப்பதாக உணர்ந்தாள், ஷீனா.நான்கு ஆண்டுகளுக்கு பின், ஒரு காபி, 'ஷாப்'பில், கணவனாக வரப்போகும், மகேஷிடம் நடந்த கதையை கூறிக் கொண்டிருந்தாள், ஷீனா.''சரி... அப்புறம் என்னாச்சு?'' ஆவலாக கேட்டான், மகேஷ்.''என்னாச்சு... நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு, மூன்று வயசுல குழந்தை. ஆனா, கல்யாணத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை,'' எனும்போதே, கண் கலங்கினாள், ஷீனா.மகேஷுக்கு ஆச்சரியம் மற்றும் சின்ன அதிர்ச்சி.''ஏன்?''''ப்ச்... நான், அவளுக்கு உண்மையா இல்லியாம்!''''புரியல!''''அதாவது, எனக்கு, சுடிதார் வாங்கி கொடுத்தத சொல்லலியாம்... அந்த விஷ்வா, உண்மையான கணவனா, அவகிட்ட அப்பவே சொல்லிட்டான்!''''சரி... இது, அந்த விஷ்வா அவளுக்கு கிடைக்கணும்ங்கிறதுக்காக நீதான மறைச்ச... அத, ஹரிணி புரிஞ்சுக்கலையா?''''அத, அவ காதுல போட்டுக்கல... எனக்கு கொடுத்த பொறுப்ப, நான் சரியா செய்யல... மறைச்சுட்டேன், துரோகம் செஞ்சுட்டேன்னு அவ நினைச்சா?''''உனக்கு, ரொம்ப வருத்தமா இருந்திருக்குமே... அதுலேர்ந்து எப்படி வெளில வந்த?'' என்றான், மகேஷ்.''அவ நட்பு போனதுல வருத்தம் தான். ஆனா, அந்த இழப்புக்கு நான் காரணமில்லேன்னு எனக்கு தெரியும். தோழிதான விலகினா, ஆனா, தோழமைக்கு நான் பெருமை சேர்த்திருக்கேன்...''விஷ்வா மேல என், 'ஜட்ஜ்மென்ட்' சரியா இருந்ததால தான, இப்ப அவங்க சந்தோஷமா இருக்காங்க... ஸோ... எனக்கு பெரிய வருத்தமில்ல... அவங்க,'ஹேப்பி'யா இருக்கறதே போதும்!''ஷீனாவை புரிந்து கொண்டான், மகேஷ். ''சரி... நம் கல்யாணத்துக்கு, உன் தோழிய கூப்பிட்டியா?'' என்றான்.''நான் பேசினா, அவ பேச மாட்டா... அதனால, 'கூரியர்'ல அழைப்பு அனுப்பியிருக்கேன். பார்க்கலாம், எங்க நட்பு புதுப்பிக்கவும் வாய்ப்பிருக்கு,'' என்றாள், ஷீனா.அவள், நட்புக்கு தரும் மரியாதை கண்டு மகிழ்ந்தான், மகேஷ்.ஷீனாவின் திருமணத்திற்கு ஹரிணி, செல்ல வேண்டுமென, நாமும் பிரார்த்தனை செய்வோம்; சரிதானே! கீதா சீனிவாசன்