கோல்டன் மங்கி!
குரங்குகளில், இருநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப, நாட்டுக்கு நாடு, குரங்குகளின் தோற்றங்களும் மாறுபடு கின்றன. பார்த்தவுடனேயே, திகிலை ஏற்படுத்துவது, கொரில்லா வகை குரங்கு. அதேபோல், மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டும் வகையிலான குரங்குகளும் உள்ளன. இதில், முதல் இடத்தை பிடிப்பது, கோல்டன் மங்கி என அழைக்கப்படும் குரங்குகள் தான்.இதன் உடல் முழுவதும், தங்க முலாம் பூசப்பட்டது போல், ஜொலி, ஜொலிக்கும்; அதனால், இதற்கு இப்பெயர். மத்திய ஆப்ரிக்காவில் தான், இந்த வகை குரங்குகள் அதிகம் உள்ளன. பூ, சிறிய பூச்சி, பழங்கள் ஆகியவை தான், இதன் உணவு.இந்த வகை குரங்குகளை, மிகவும் அரிதாகத்தான் பார்க்க முடியும். இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உலகில் மிக வேகமாக அழிந்து வரும் உயிரினமாக, இந்த குரங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே மாகாணத்தில், இந்த குரங்குகளை பராமரித்து வரும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில், இந்த ஆண்டில் மட்டும், இதுவரை, எட்டு குட்டிகள் புதிதாக பிறந்துள்ளன. ஆராய்ச்சி மையத்தில் இருப்பவர்கள், இப்போது, மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.சர்வதேச அளவில் அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள குரங்குகளின் எண்ணிக்கையில், எட்டு கூடி விட்டதே. அப்புறம், இதற்கு மகிழ்ச்சியடையாமல், வேறு எதற்கு மகிழ்ச்சி அடைவது?— ஜோல்னா பையன்.