உலகத்திற்கே பாட்டி
ஜூன், 20 - மாங்கனி திருவிழாநம் ஒவ்வொருவருக்கும் பாட்டி உண்டு; ஆனால், இந்த உலகத்திற்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவர் தான் காரைக்கால் அம்மையார். இந்த உலகிற்கு தந்தையான சிவபெருமான், காரைக்கால் அம்மையாரை அம்மாவாக ஏற்றுக் கொண்டதால், அவரது பிள்ளைகளான நம் எல்லாருக்கும் அவள் பாட்டியாகிறாள்.இந்த பாட்டியின் வரலாறைக் கேளுங்கள்:தும்புரு என்ற தேவலோக இசைக்கலைஞரின் மகள் சுமதி; மிகச் சிறந்த சிவபக்தையான இவளின் பக்தியை உலகமே அறிய வேண்டும் என்பதற்காக சிவன் ஒரு லீலையை நிகழ்த்தினார். ஒருநாள், சிவபூஜைக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சுமதி. அப்போது, அவளது வீட்டுக்கு வந்தார் துர்வாச முனிவர். அவரை கவனிக்கவில்லை, சுமதி.'பெரியவர்களை வரவேற்க தெரியாதா...' என்று கோபித்த துர்வாசர், 'பூலோகத்தில் மானிட ஜென்மம் எடுப்பாய்...' என்று சபித்து விட்டார். இதனால், காரைவனம் என்று புராணப்பெயர் பெற்றிருந்த காரைக்காலில், தனதத்தன் - தர்மவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தாள், சுமதி. அவளுக்கு புனிதவதி என்று பெயரிட்டனர். பின், பரமதத்தன் என்ற வணிகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.ஒருநாள், கடையில் இருந்த பரமதத்தனுக்கு, வியாபாரி ஒருவர் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தார். அதை பணியாள் மூலம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினான், பரமதத்தன். அந்த நேரத்தில், அடியவர் வேடத்தில் அவள் வீட்டுக்கு வந்தார், சிவபெருமான். அவருக்கு உணவளித்த புனிதவதி, மாம்பழம் ஒன்றையும் அளித்தாள்.மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த பரமதத்தனுக்கு மற்றொரு மாம்பழத்தை நறுக்கிக் கொடுத்தாள். அது சுவையாக இருக்கவே, இன்னொன்றையும் கேட்டான்.புனிதவதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிவனை வணங்கி மற்றொரு பழத்தை வரவழைத்தாள். அது, முன்பு கொடுத்த பழத்தை விட சுவையாக இருக்கவே, சந்தேகப்பட்ட பரமதத்தன் விளக்கம் கேட்டான். நடந்ததை புனிதவதி சொல்லவே, அதை நம்பாத பரமதத்தன், 'அப்படியென்றால் என் கண் முன் இன்னொரு மாம்பழத்தை வரவழை...' என்றான். புனிதவதியும் அவ்வாறே செய்ய, பரவசமடைந்த பரமதத்தன், அவளை தெய்வப்பிறவியாக கருதி, விலகி விட்டான். இன்னொரு பெண்ணை மணந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு புனிதவதி என்று பெயரிட்டான்.கணவன் பிரிந்து சென்றதால், தன்னை முதுமையாக்க வேண்டும் என்று சிவனிடம் கோரிக்கை வைத்தாள் புனிதவதி. அவ்வாறே சிவனும் அருள, அந்த உடலுடன் கைலாயம் புறப்பட்டாள். கைலாயம் புனிதமான இடம் என்பதால், காலால் நடக்காமல் தலையை ஊன்றி சென்றாள். அவளை சிவன், 'என் அம்மையே வருக...' என்று வரவேற்றார். சிவனுக்கே அம்மையான அந்த பக்தையை மக்கள், 'காரைக்கால் அம்மையார்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.காரைக்காலில் உள்ள அம்மையார் கோவிலில், ஆனி பவுர்ணமியன்று மாங்கனி விழா நடக்கும். அன்று இரவு பிச்சாண்டவர் வேடத்தில் எழுந்தருள்வார் சிவன். மக்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வழிபடுவர். அப்போது விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இரண்டு தீப்பந்தம் ஏற்றப்படும். அம்மையாரின் பந்தம், சிவனின் பந்தத்துடன் ஐக்கியமாவது போல பாவனை செய்வர். இந்த நிகழ்வை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும். வீசப்படும் மாங்கனிகளை குழந்தை இல்லாத பெண்கள் முந்தானையில் பிடிப்பர். இதனால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.நம்பிக்கை இருந்தால், இறைவனையே மகனாகப் பெறலாம் என்பது அம்மையாரின் வாழ்க்கை சரித்திரம் நமக்கு உணர்த்தும் பாடம்!தி.செல்லப்பா