உள்ளூர் செய்திகள்

புல் தின்ற, கல் நந்தி!

மனிதனுக்கு கஷ்டம் வந்தால் மட்டுமே, கடவுளை நினைக்கிறான். தீராத கஷ்டம், ஒரு பக்தருக்கு ஏற்பட்டது. அந்த கஷ்டத்தை தீர்த்து வைத்தவர், சிவனின் பாதுகாவலரான நந்தீஸ்வரர். தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், திருவாவடுதுறை; புதுக்கோட்டையை சேர்ந்த வேந்தன்பட்டி மற்றும் திருநெல்வேலி, சிவசைலம் உள்ளிட்ட கோவில்களிலுள்ள நந்திகள், வித்தியாசமானவை. அதுபோல், கும்பகோணம் அருகிலுள்ள, கஞ்சனுார், அக்னிபுரீஸ்வரர் கோவிலிலுள்ள நந்தியும் அபூர்வமானது. இங்கு, வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால், ராஜயோக வாழ்வு அமையும்.மதுரையை போல, இங்கு, அம்பிகைக்கே சக்தி அதிகம். மீனாட்சி சன்னிதி, சுவாமிக்கு வலப்புறம் இருப்பது போல், இங்கும், கற்பகநாயகி அம்மன் சன்னிதி, வலப்புறம் உள்ளது. பிரம்மாவுக்காக, சுவாமியும், அம்பிகையும் திருமண காட்சி கொடுத்த தலம் இது.ஒருசமயம், கனமான புல்லு கட்டு ஒன்றை, பக்தர் ஒருவர், தவறி கீழே விட, படுத்திருந்த கன்றின் மேல் விழுந்து, அதன் உயிரை பறித்தது.இதற்கு பரிகாரம் தேடிய பக்தர், ஹரதத்தர் எனும் சிவனடியாரை அணுகினார். அவரது யோசனைப்படி, அக்னிபுரீஸ்வரரை வழிபட்டு, ஒரு கைப்பிடி புல்லை, இத்தலத்து நந்திக்கு கொடுத்தார். அது, புல்லை தின்றது. இதன் பின், பக்தரை விட்டு கொலை பாவம் விலகியது. இந்த வித்தியாசமான நந்தியிடம், நமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வரலாம்.அந்தகாசுரன் என்பவன், தேவர்களை துன்புறுத்தினான். அப்போது, அசுரர்களின் குருவாக இருந்தவர், பார்க்கவ முனிவர். அந்தகாசுரனை அழிக்க முற்பட்டனர், தேவர்கள். அசுரர் தரப்பில், உயிர் சேதம் கடுமையாக இருந்தது. இதை தடுக்க, சிவனை நோக்கி தவமிருந்து, இறந்தவரை உயிர் பெற செய்யும், 'அமிர்த சஞ்சீவினி' எனும் மந்திரத்தை, வரமாக பெற்றார், பார்க்கவர். இதனால், அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேவர்கள், சிவனை சரணடைய, பார்க்கவரை அவர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற பார்க்கவர், அங்கும் தவமிருந்து வெளியே வந்தார். சிவனின் வயிற்றில் கிடந்ததால், பார்க்கவரின் உடல் வெள்ளை ஆயிற்று. எனவே, அவர், 'சுக்கிரன்' (வெள்ளை நிறம் கொண்டவர்) எனப்பட்டார். நவக்கிரக கோவில்களில் சுக்கிரனுக்குரிய தலமான இங்கு, தன் தேவி சுகீர்த்தியுடன் அருள்பாலிக்கிறார், சுக்கிரன்.கும்பகோணத்தில் இருந்து, சூரியனார் கோவில் வழியாக, 25 கி.மீ., கடந்தால், கஞ்சனுாரை அடையலாம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !