உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே! (18)

குற்றால டூர் வாசகர்களை, வேடிக்கையாக மிரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நண்பர் வீரசின்னு, கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில், கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால், என் தலையில் அடித்ததில், சட்டென கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சுற்றிலும் இருப்பவர்கள் பேசுவது, ஏதோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல இருந்தது. கிட்டத்தட்ட மயங்கிய நிலையில், பஸ்சின் நடுவில் உள்ள பாதையில், நெடுஞ்சான் கிடையாக விழுந்தேன். உடனே, வீரசின்னு என்னைத் தாண்டி ,'எங்கேடா அவன்...' என்று கேட்டபடி, பஸ்சுக்குள் புகுந்து, ஒவ்வொருவரையும் பார்த்த பார்வையில், வாசகர்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப்போனது. 'எங்கம்மா அப்பவே சொன்னாங்க... உன் புருஷன் பேச்சை கேட்காதேன்னு. நான்தான் கேட்காம வந்துட்டேன் சாமி...' என்று, பெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார், அறுபது வயதைத் தாண்டிய, பொங்கலூர் வாசகி முருகேஸ்வரி. அந்த நேரம், 'என்னப்பா பஸ்சுக்குள்ள கலாட்டா...' என்று கேட்டபடி, ஒரு உருவம் பஸ்சுக்குள் நுழைந்தது. அந்த உருவத்தை பார்த்ததும், மொத்த வாசகர்களும், அதுவரை தேக்கிவைத்திருந்த வருத்தம், கோபம், சோகத்தை மறந்து, 'குபீரென' சிரித்தனர். காரணம், அந்த உருவத்திற்கு சொந்தக்காரர், நடிகர் லூஸ் மோகன். அப்போது தான், பஸ்சுக்குள் நடப்பது, நாடகம் என்று வாசகர்களுக்கு புரிந்தது. 'இவ்வளவு நேரம் மிரட்டிய ஆள் எங்கே' என்று தேடிய போது, உருட்டுக்கட்டையை கீழே போட்டு, 'சும்மா உங்ககிட்ட தமாஷ் செய்யவே இந்த வேஷம் போட்டோம். தப்பாயிருந்தா மன்னிச்சுக்குங்க...' என்று, கையெடுத்து கும்பிடு போட்டார் வீரசின்னு. அப்போதுதான், என் ஞாபகம் வந்த வாசகர் ஒருவர், 'டிராமா முடிஞ்சு போச்சு. நடிச்சது போதும் எழுந்திரிங்க...' என்று என்னை எழுப்பினார். 'என்னது நடிப்பா... வலிக்குதுய்யா...' என்று, மனசுக்குள் சொல்லியபடி, தலையை தடவிக் கொண்டு எழுந்த என்னிடம், வீரசின்னு, 'சார் நான், 'கொஞ்சம்' உணர்ச்சிவசப் பட்டுட்டேனோ...' என்றார். 'கொஞ்சமாவா... ரொம்பவே...' என்றதும், 'போங்க சார்... நீங்க எப்பவுமே தமாஷ்தான்...'என்று, அடிபட்டு வீங்கிக்கிடந்த, அதே இடத்தில் தட்டிவிட்டு, இறங்கிப்போனார். போன வேகத்தில், திரும்பவும் மேலே வந்தார். 'இப்ப என்னய்யா?' என்று கேட்டதும், 'இல்ல அந்த உருட்டுக்கட்டையை பஸ்சுலேயே விட்டுட்டேன். எனக்கு வாசகர்களிடம் பாராட்டு வாங்கித்தந்த ராசியான கட்டை. அதான், அதை திரும்ப எடுக்கவந்தேன்...' என்றார். 'நீ இனிமே, வாழ்க்கையில உருட்டுக்கட்டையே தொடக் கூடாது. ஓடிப்போயிடு...' என்றதும், 'சாருக்கு தலையில் அடிபட்டதுல, ஏதோ ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்...' என்று, முணுமுணுத்தபடி இறங்கிச் சென்றார். ராஜபாளையம் வரும் வரை, இந்த நாடக சப்ஜெக்ட் தான் ஓடிக்கொண்டு இருந்தது. 'ஒவ்வொருவரது முகமும் எப்படியெல்லாம் மாறிப் போயிருந்தது தெரியுமா...' என்று, பேராசிரியர் கண்ணன், அதே போல் நடித்துக்காட்ட, வாசகர்களுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. வாசகர்கள் அனைவரும், முன்பைவிட, ஜாலி மூடுக்கு வந்திருந்தனர். 'மிச்சமிருக்கும் மூன்று நாளும், இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ' என்று நினைப்பில், 'யார் நீ' படம் பார்க்கும், மூடில் காணப்பட்டனர். ஆனால், ஒரே ஒரு ஆளை மட்டும் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அவர், திண்டுக்கல் வாசகி தெய்வானை.உருட்டுக்கட்டை தோழர் வீரசின்னு பஸ்சுக்குள் நுழைந்த போது, ஆழ ஆரம்பித்தவர், கடையநல்லூர் தாண்டியும், விசும்பலை நிறுத்தவில்லை. யார் சமாதானப்படுத்தியும், சமாதானமும் ஆகவில்லை. 'என்னை ஏமாத்திட்டீங்கல்ல, என்னை ஏமாத்திட்டீங்கல்ல...' என்ற வார்த்தையையே, திரும்ப திரும்ப, சொல்லியபடி வந்தார். 'சரி குற்றாலம் வரப்போகுது, அங்க வந்து, ஏமாத்தியதற்கு தண்டனை தருவீங்கலாம்... இப்ப நார்மலாகுங்க ப்ளீஸ்...' என்று கேட்ட பின் தான், விசும்பலை நிறுத்தினார். குற்றாலத்தில், வாசகர்கள் இறங்க தயாராகி, தங்களது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டனர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. 'என்னை ஏமாத்திட்டீங்கல்ல...' என்று, விடாமல் விசும்பிய வாசகி, 'ஐய்யோ... என் கை, சீட்ல மாட்டிக்கிச்சு...' என்று, அலறினார். ஓடிப்போய் பார்த்தால், பஸ்சின் சீட்டிற்கும், சாய்மானத்திற்கும் இடையில் உள்ள, 'கேப்பில்' விழுந்த, தன் ஹேர் கிளிப்பை எடுக்க கையை விட்டதில்,எசகு பிசகாக கை மாட்டிக்கொண்டது என்று, கூறி அழுதார். வாசகியைச் சுற்றி ஒரே கூட்டம். 'இறங்குற நேரத்துல இப்படி ஆயிடுச்சே...' என்று நினைத்தவர்கள், கையை மீட்க, ஆளாளுக்கு, யோசனை கூறினர். அவர்களது யோசனையின் படி, கையை மீட்க, வாசகிகள் துணையோடு, கையை தொட்டதும் ' ஐயயோ தொடாதீங்க. வலி உயிர் போகுது...' என்று, சத்தமிட்டு அழுதார். 'என்ன சேதாரமானாலும் பரவாயில்லை. பஸ் சீட்டை உடைச்சு, கம்பிகளை வளைச்சு, வாசகியின் கையை, சின்ன கீறல் கூட இல்லாம எடுங்க...' என்று, பதட்டத்துடன் சொன்னதும், அதற்கேற்ப, பஸ்சில் இருந்த கனமான லீவர், ஜாக்கி போன்ற பொருட்களுடன் டிரைவர், நடத்துனர் உள்ளிட்ட அனைவரும் கூடியதும், வாசகி தெய்வானை, ஒரு காரியம் செய்தார் பாருங்கள்... வாழ்க்கையில், என்றைக்குமே அதை மறக்கமுடியாது. குற்றாலமும், மூலிகைகளும்...குற்றாலத்தில், 200க்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளன. மூலிகை செடிகளையும், கொடிகளையும், மரங்களையும் கொண்டிருக்கும் இம்மலையில், தவழ்ந்து வரும் அருவிகளில் குளித்தால், மனநோயாளிகள் கூட, குணம் பெறுவதாக நம்பிக்கை. பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, குழுதாமரை, மலைநெல்லி, செவ்விளநீர், முசு முசுக்கை, குருநொச்சி, கொடியார் போன்ற மூலிகைகள், கூந்தல் தைலம் தயாரிக்கவும், ஜோதிப் புல்லை செந்தூரம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். கீழாநெல்லி, அம்மன் பச்சரிசி போன்றவை, மஞ்சள் காமாலை நோய்க்கு பயன்படுகின்றன. நீலம், வெண், நற்சங்குகள் பஸ்பம் செய்ய உதவுகின்றன. குதிரைகுளம்பு, பளிங்குக் காய், சங்கு, குங்கிலியம், கோடகசாலை முதலியன காயம், எலும்பு முறிவுக்கு மருத்துவ பொருளாகவும், தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி, ஓமவல்லி இருமலுக்கும் பயன்படுகிறது. இப்படி, இன்னும் பல நூறு பயன்பாடுகளுக்கு, மூலிகைகள் உள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மருத்துவர்கள், இங்கு வந்து, மூலிகைகளை சேகரித்து செல்கின்றனர். மூலிகைகளை பற்றி விவரம் அறிந்தவர்கள் பலர், இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மூலிகை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐந்தருவிக்கு போகும் பாதையில், அரசு, மூலிகைப் பண்ணை அமைத்து, பராமரித்து வருகிறது. வருடத்தின் எல்லா வேலை நாட்களிலும், இந்த மூலிகை பண்ணை இயங்கும். — அருவி கொட்டும்.எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !