உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே! (25)

'குற்றால டூருக்கு ஒரு முறை வந்த வாசகர்கள் திரும்ப வருவதே இல்லையே... இது எப்படி சாத்தியம்...' என்று, பலர் நினைப்பது உண்டு. உண்மையில் இதை சாத்தியம் ஆக்கியவர்களும், சாத்தியமாக்கிக் கொண்டு இருப்போரும் உண்டு.குற்றால டூரின் இரண்டாவது நாளின் போது, அந்த பகுதியில் உள்ள புகழ் பெற்ற குற்றாலநாதர் கோவில், இலஞ்சி முருகன் கோவில், தென்காசி காசி விசுவநாதர் கோவில் என்று, ஏதாவது ஒரு கோவிலுக்கு வாசகர்களை அழைத்துச் சென்று, அனைவருக்கும் மலர் மாலை அணிவித்து, ராஜமரியாதையுடன் கோவிலினுள், வி.வி.ஐ.பி., தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.கோவில் அர்ச்சகரும், வாரமலர் இதழ் வாசகர் என்றதும், மிகவும் உற்சாகமாகி, தல வரலாற்றை விளக்குவதுடன், மறக்காமல் சொல்லும் ஒரு வார்த்தை, 'இந்த கோவில் மிகவும் விசேஷமானது. இங்கே நீங்கள் என்ன வேண்டிக்கொண்டாலும் நடக்கும்...' என்று, சொல்வார்.வாசகர்கள் என்ன வேண்டிக்கொள்வர் என்று கேட்பது நாகரிகமில்லை என்றாலும், அவர்களே, 'நீயும் அதானே வேண்டிக்கிட்டே... நானும் அதுதான் வேண்டிக்கிட்டேன்...' என்று, ஒருவரை ஒருவர் விசாரித்து, தங்களது வேண்டுதலின் ஒற்றுமையை பற்றி பேசிக் கொள்வர்.இந்த வாரமலர் இதழ் குற்றால டூர் குரூப், அடுத்த வருடமும் தேர்வாக வேண்டும் என்பது தான், அந்த வேண்டுதல். இதை, மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில், மேடையில் பேசும்போது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்து தெரிவிப்பர்.'கடவுள்தான் பக்தர்களை சோதிப்பார் என்றால், நீங்கள் கடவுளையே சோதிக்கிறீர்களே... பல லட்சம் கூப்பன்களில் இருந்து இதுவரை வராத பதினைந்து வாசகர்களை தேர்வு செய்வது தான் எளிது. வந்தவர்களை தேர்வு செய்வது சிரமம்...' என்றதும், 'எங்க மனசில பட்டதைத்தானே வேண்டிக்க முடியும். திரும்பவும் இதே குரூப் எப்படியாவது சந்திக்க வேண்டும். அது குற்றாலமாகவோ அல்லது வேறு எங்காவது இருந்தாலும் சரி...' என்று, இறங்கி வருவர்.பிறகு, 'நாம அனுபவிச்ச இந்த சந்தோஷத்தை எல்லா வாசக குடும்பமும் அனுபவிப்பது தானே நியாயம்...' என்று, இன்னும் இறங்கி வந்து, 'நாங்க எங்க நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு சொல்லி கூப்பன் போட சொல்வோம். ஆனால். நிச்சயம் நாங்கள் வர மாட்டோம். இந்த ஒரு முறை ஏற்பட்ட சந்தோஷம், அந்துமணியைத் தேடிய த்ரில், இந்த அனுபவம் எல்லாம், இந்த ஒரு வாழ்க்கைக்கு போதும்...' என்று, சொல்லி விடுவர்.இதைத்தான், அவர்களுக்கு அவர்களே விதித்துக்கொண்ட, 'லட்சுமணக்கோடு' என்று, கடந்த வாரம் கூறியிருந்தேன்.இந்நிலையில்தான், 97-ம் வருடம் கலந்து கொண்டு, டூரை கலக்கிய வாசகி யாஸ்மின் என்பவரை, அடுத்த சில ஆண்டுகள் கழித்து, அதே விழுப்புரத்தில், வஹிதா என்பவரை தேடிப்போன போது சந்திக்க நேர்ந்தது.'என்ன மேடம்... முன்னாடி யாஸ்மின்; இப்போது வஹிதாவா...' என்றதும், நான் எப்போதுமே யாஸ்மின் தான். இப்போது தேர்வாகியிருக்கும் வஹிதா, என் உறவுக்கார பெண். நான் டூர் போய் திரும்பிய பிறகு, டூரைப்பற்றி சொல்லி சொல்லியே, நிறைய பேரை வாரமலர் இதழை வாங்க வைத்து விட்டேன். அவர்களில் வஹிதாவும் ஒருவர்.'வஹிதா டூர் கூப்பன் போட்டதில், இப்போது, தேர்வாகி விட்டார். உங்கள் சட்டப்படி தேர்வானவருடன் யார் வேண்டுமானாலும் வரலாம்தானே... அதன்படி, நான் வருகிறேன். நான் குற்றாலம் வருவதும் குளிப்பதும், புதிய உறவுகளைப் பார்ப்பதும், பழகுவதும் இரண்டாம் பட்சம். முதல் காரணம், டூர் முடிந்த பிறகு, வாரமலர் இதழை பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்துமணியை, இந்த முறை கண்டுபிடித்து அவரிடம் பேசப் போறேன்.'நான் எழுதிய நிறைய கேள்விகளுக்கு, பிரமாதமாக பதில் தந்து இருக்கிறார். அவருடைய பா.கே.ப., பகுதிக்கு, பெரிய ரசிகை நான். கடந்த முறை டூர் வந்த போது, அதையெல்லாம் தொகுத்து, எடுத்து வந்து, அவரிடம் கையெழுத்து வாங்கலாம் என்று, 'கொஞ்சம் அந்துமணியை காட்டுங்க' என்று, எவ்வளவோ பேரிடம் சொல்லியும், இதோ, அதோ என்று, கடைசிவரை காட்டாமலே ஏமாற்றி விட்டீர்கள்.'வேற யாரும் ஏமாற்றி இருந்தாலும் பராவாயில்லை, அந்துமணியே எனக்கு போக்கு காட்டிவிட்டார். அந்த பா.கே.ப., தொகுப்பை வாங்கி, 'பிரமாதமாக பைண்டிங் செய்திருக்கீங்க; இதுல எழுதியிருக்கிற கருத்து ரொம்ப நல்லாயிருக்கே...' என்று, எதுவுமே தெரியாத மாதிரியும், அப்போது தான் புதிதாக படிப்பது போலவும் பாவித்து, 'பத்திரமா வச்சுக்குங்க... நீங்க அந்துமணியிடம் இதைக்காட்டி பேசும்போது என்னிடமும் சொல்லுங்க. நானும், அவரை பார்க்கணும்ன்னு தான் வந்திருக்கேன்...' என்று சொன்னாரு பாருங்க... அதைத்தான், என்னால தாங்க முடியல.'என் பக்கத்திலேயே நின்னு, அவ்வளவு பேச்சு பேசின அவருதான் அந்துமணிங்கிறத வாரமலர் இதழில் வந்த டூர் கட்டுரைய படித்தபிறகு தான் தெரிஞ்சது. அதனால தான், எப்படியாவது அவரை ஒரு முறை பார்த்து, 'இப்படி செய்தது என்ன நியாயம்'ன்னு கேட்கணும். அதனால தான், என் தோழிகள், உறவுக்கார பெண்கள் என்று, பலரையும் கூப்பன் போடச் சொல்லி, நானே முயற்சி எடுத்தேன். தபால் செலவெல்லாம் கூட என்னுடையதுதான். ஆனால், ஒரே கண்டிஷன் தேர்வானால், உடன் வருவது நானாகத்தான் இருப்பேன் என்பதுதான் அது.'இந்த டீலில் இப்போது வஹிதாவுடன் நான் வருகிறேன்; அந்துமணியை சந்திக்கிறேன். இப்ப பா.கே.ப., பகுதியோட இன்னொரு பைண்டிங் செட்டும் ரெடி...' என்று சொல்லிய யாஸ்மின், அந்த வருட டூரில் கலந்து கொண்டாரா இல்லையா என்பதை, அடுத்த வாரம் பார்ப்போம். குற்றாலமும், பார்டர் கடையும்...மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் இட்லி வரிசையில், செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக்கோழி கறி வறுவலையும் சொல்லலாம்.குற்றாலத்தில் இருந்து, 5 கி.மீ., தூரத்தில் உள்ள செங்கோட்டையில் உள்ளது பார்டர் கடை என்று சொல்லப்படும், ரஹமத் பரோட்டா ஸ்டால். அசைவ பிரியர்களின் சொர்க்க தேசம். சீசன் நேரத்தில், காத்திருந்துதான் இடம் பிடிக்க வேண்டும்.இந்த ஏரியாவைத் தாண்டிய கொஞ்ச தூரத்தில், கேரள மாநில எல்லை வருவதால், 'பார்டர்' கடை என்பது, பிரபலமாகி விட்டது.குற்றாலத்தில், அருவிகளைவிட, இந்த பார்டர் கடை மிகவும் பிரபலம். குற்றாலம் போய் குளிக்காமல் கூட வருவர்; பார்டர் கடையில் சாப்பிடாமல் வர மாட்டார்கள்.சுமார், 40 ஆண்டுகளுக்கு மேலாக, பலரது நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த பரோட்டா கடையின் ஸ்பெஷாலிட்டியே பரோட்டா வும், நாட்டுக்கோழியும்தான்.மாலை நேரத்தில், சூடு பிடித்து, பின்னிரவைத் தாண்டியும் கூட்டம் குவிகிறது. அருவிகளில் குளித்து ஈரத்தலையுடனும், பசியுடனும் வரும் சுற்றுலா பயணிகள், பத்து பரோட்டாவை பிய்த்து போட்டு, நாட்டுக்கோழி சால்னாவை அதில் ஊற்றி ஊறவைத்த பின், மிளகில் வறுத்த நாட்டுக்கோழி வறுவல் வகையறாக்களுடன் சாப்பிட ஆரம்பித்தால், வெண்ணிலா கபடி குழு பரோட்டா சூரியைத்தான் நினைவு படுத்துவர்.இவர்கள் இப்படி என்றால் இதே கடையின் இன்னொரு பக்கம், 'ஐநூறு பரோட்டா, இருநூறு சிக்கன்...' என்று, பார்சலுக்கு எழுப்பப்படும் குரல்களை கேட்கும்போது, சாப்பிட வாங்கிச் செல்கிறார்களா அல்லது வியாபாரம் செய்யப் போகிறார்களா என்ற சந்தேகம் எழும். அந்த அளவிற்கு பார்சல் வியாபாரமும் நடக்கும்.இப்போது, பார்டரில் நிறைய கடைகள் வந்து விட்டாலும், ரஹமத் பரோட்டா கடைக்கென்று உள்ள ரசிகர்களின் கூட்டத்திற்கு குறைவே இல்லை.— அருவி கொட்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !