உள்ளூர் செய்திகள்

இவருக்கு இப்படிப்பட்ட மனைவியா!

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கு, 'இரும்புத் திரை நாடு' என்ற பெயர் உண்டு. அந்த நாட்டில் நடக்கும் சின்ன விஷயம் கூட, வெளி உலகிற்கு தெரியாது. அவர்களாகவே கூறினால் தான் உண்டு. இப்படிப்பட்ட நாட்டில், சர்வாதிகாரியான அதிபர், கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய செய்திகள் மட்டும் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்து விடுமா என்ன... இவரைப் பற்றிய சில விஷயங்களை, தென் கொரியாவின் உளவுத் துறை நிபுணர்கள் மோப்பம் பிடித்து, வெளி உலகிற்கு கசிய விட்டுள்ளனர். கிம் ஜாங் உன்னின் மனைவி பெயர், ரி சோல் ஜு. இவருக்கு, 30 - 35 வயதுக்குள் இருக்கலாம். மூன்று குழந்தைகள் உள்ளனர். 2018ல், கிம் ஜாங் உன் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில், எப்போதும் சிரித்த முகத்துடன், 'போஸ்' கொடுக்கும் இந்த அழகான பெண் யார் என, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடியபோது தான், இவர், அதிபரின் மனைவி என, உறுதி செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன், விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும், 'சீர் லீடர்' என்ற நடன பெண்ணாகவும், இசைக்குழுவில் பாடகியாகவும் பணியாற்றியுள்ளார், ரி சோல். இதுபற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, திருமணம் முடிந்ததும், முதல் வேலையாக, இசைக்குழுவில் இருந்த அனைவரையும், போட்டு தள்ளிவிட்டாராம், கிம்.ஆணாதிக்க சமூகம் நிறைந்த நாடு, வட கொரியா. பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனாலும், ரி சோல் மட்டும், எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அழகான உடையணிந்து தான் வருவார். கடந்த, 2018ல், தன் மனைவியுடன் சீனாவுக்கு சுற்றுப் பயணம் செய்தார், கிம். அப்போது, ரி சோல் அணிந்த உடையையும், அவரது அழகையும் பார்த்து மயங்கிய சீன புகைப்படக் கலைஞர்கள், கிம்மை புறக்கணித்து, ரி சோல் பின்னாடியே அலைந்தனர். வட கொரியாவில் இதுபோல் நடந்திருந்தால், தன் மனைவியின் பின் சென்ற புகைப்படக்காரர்களை எல்லாம், கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி வைத்திருப்பார், கிம். ரி சோல் பற்றிய இன்னும் பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. அதை தெரிந்து கொள்வதற்காக, தென் கொரிய உளவுத் துறையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !