இவரல்லவோ உண்மையான ஊழியர்!
சரஸ்வதி ஓவியத்தை வரைந்து, சிவசேனா கட்சியினரின், எதிர்ப்புக்குள்ளாகி, இந்தியாவை விட்டு வெளியேறியவர், பிரபல ஓவியர் எம்.எப்.உசைன். இவர், தோகா, துபாய் மற்றும் லண்டன் சென்று தங்கினார். தோகா நகரில் இவர் தங்கிய, 'வெஸ்ட்பே' என்ற குடியிருப்பின் மாத வாடகை, ஐந்தே கால் லட்சம் ரூபாய்!கேரளாவைச் சேர்ந்த சைதலவி என்ற இளைஞர், இவருக்கு கார் டிரைவராக இருந்தார். தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அவரை, நேரடி உதவியாளராக்கியதோடு, கோடிகள் மதிப்புள்ள ஓவியங்கள் மற்றும் பணப் பொறுப்பையும் ஒப்படைத்தார். ஓவியர், இந்தியா விட்டு சென்ற போது, 'அவர் நாடு திரும்ப வேண்டும்...' என்று மத்திய அரசும், பால்தாக்கரேயும் அழைத்த போதும், அவர் மறுத்து விட்டார். உடல் நலமின்றி, லண்டன் மருத்துவமனையில் இருந்த போது, தான் வரைந்த மதர் தெரசா ஓவியத்தையும், கோடிக்கணக்கான பணத்தையும், மகன் உவைசிடம் ஒப்படைக்க கூறினார். உசேன் மரணமடைந்த பின், சைதலவி, அவரது சொத்துக்களை, மகனிடம் ஒப்படைத்தார். 'என் தந்தையை, மகனை போல பராமரித்த நீங்களே, அந்த பணத்தை வைத்து கொள்ளுங்கள்...' என்றார் மகன்; ஆனால், தெரசா ஓவியத்தை மட்டும் பெற்று கொண்டார் சைதலவி.— ஜோல்னா பையன்.