இல்லறம் இனிதாக!
சமையல் அறையில் ஸ்வீட், பலகாரம் செய்யும் வாசனை, வாசல் வரை வந்தது. வாசனையை நுகர்ந்தபடி உள்ளே வந்தார், சண்முகம். அரசாங்க வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர்.படிப்பை முடித்து, கல்யாணத்துக்கு தயாராக இருந்தாள், ஒரே மகள் வசுந்தரா. இன்று தான் முதல் முறையாக பெண் பார்க்கும் படலம் நடைபெறப் போகிறது.இந்த வரன் எல்லாவிதத்திலும் வசுந்தராவுக்கு பொருத்தமாக இருந்தது. மாப்பிள்ளை, வங்கியில் மேனேஜர், சொந்த வீடு என்று வசதியுடன் இருக்கிறார். ஒரே பிள்ளை. 'நல்லவிதமாக முடிய வேண்டுமே...' என்ற வேண்டுதலுடன், மனைவி கீதாவிடம் வந்த சண்முகம், ''வேலை முடிந்ததா?'' என்றார்.''எல்லாம் முடிஞ்சுது.''''வேலையை ஏன் இழுத்து போட்டுக்கற, எல்லாத்தையும் கடையில் வாங்கி இருக்கலாம்?''''இருக்கட்டும். நாளைக்கு நம் வீட்டுக்கு சம்பந்தியாக வரப்போறவங்க; மாப்பிள்ளையும் வர்றாரு. நல்லவிதமாக கவனிக்க வேண்டாமா!''''இவங்க தான் நம் சம்பந்தின்னு முடிவே பண்ணிட்டியா?''''இதில் என்ன சந்தேகம்... மாப்பிள்ளையும், வசுந்தராவும் போனில் பேசிக்கிட்டாங்க. போட்டோ பார்த்து பிடிச்சு போச்சு. ஜாதக பொருத்தமும் இருக்கு. அப்புறம் என்னங்க?''''இருந்தாலும் மனசில் சின்ன பயம் இருக்கு, கீதா. வரதட்சணை, சீர்ன்னு அதிகம் எதிர்பார்ப்பாங்களான்னு தெரியலை. நம் மகளுக்கு நிறைவாக செய்யத் தான் இருக்கோம்,'' முகத்தில் குழப்பம் தெரியச் சொன்னார்.''இங்கே பாருங்க, மாப்பிள்ளை, வசுந்தராகிட்ட பேசும்போது, 'நாங்க எதுவும், 'டிமாண்ட்' பண்ண மாட்டோம். உங்க வீட்டில், உனக்கு என்ன செய்யணும்ன்னு நினைக்கிறாங்களோ அதை செய்யட்டும். பிடிச்சிருக்குன்னு, அம்மா, அப்பா சம்மதம் சொல்லணும்; அவ்வளவுதான்!'' என்றாராம்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வந்தாள், வசுந்தரா. அழகு தேவதையாக பட்டுப் புடவையில் நிற்கும் மகளை அன்புடன் பார்த்தார், சண்முகம்.''அப்பா, பயப்படாதீங்க... இவர் தான் உங்க மாப்பிள்ளை. அவங்க அம்மா ரொம்ப நல்லவங்களாம். இப்பவும் பெண் பார்த்து நிச்சயத்துக்கு நாள் குறிக்கத்தான் வர்றாங்களாம்,'' மகிழ்ச்சியுடன் மகள் சொல்ல, திருப்தியுடன் புன்னகைத்தார், சண்முகம்.ஹாலில் அம்மா, அப்பா, மாமாவுடன், புன்னகை முகத்துடன் உட்கார்ந்திருந்தார், மாப்பிள்ளை.வந்தவர்களை வரவேற்று, விருந்து உபசாரம் முடிந்ததும், ''எதுக்கு சிரமப்பட்டு இவ்வளவு செய்தீங்க, ஏதாவது இரண்டு வகை இருந்தால் போதுமே... மத்தபடி எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது,'' என்றார், மாப்பிள்ளையின் அம்மா.''வசுந்தராவும், சமையல் நல்லா செய்வா... எல்லாவற்றையும் அவளுக்கு பழக்கிக் கொடுத்திருக்கோம்,'' மகளைப் பற்றி பெருமையாகச் சொன்னாள், கீதா.''உங்க மகளை வரச் சொல்லுங்க.''இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி, அப்பாவின் அருகில் உட்கார்ந்தாள், வசுந்தரா. வசுந்தராவும், மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை பரிமாறிக் கொண்டனர்.''பெண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு. உங்க விருப்பம் போல் சீர் செய்யலாம். நாங்க தலையிட மாட்டோம். கல்யாணத்தை மட்டும் சிறப்பாகச் செய்யணும். செலவை இரண்டு பேரும் பகிர்ந்துக்கலாம்,'' என்றார், மாப்பிள்ளையின் அப்பா.''சரிங்க, ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சு போச்சு. முகூர்த்தத்திற்கு நாள் பார்க்கலாமா?'' என்றார், மாப்பிள்ளையின் மாமா.''இருக்கட்டும், அதுக்கு முன் கொஞ்சம் தனிமையில் பேசணும்,'' என்றார், மாப்பிள்ளையின் அம்மா. ''தாராளமாக பேசட்டும், ஏற்கனவே போனில் பேசியிருக்காங்க. நேரில் பேசணும்ன்னா, தாராளமாக பேசலாம். வசும்மா, மாப்பிள்ளையை மாடிக்கு அழைச்சிட்டு போய் பேசிட்டு வாம்மா,'' என்றார், சண்முகம்.''இல்லைங்க, அவங்க இரண்டு பேரும் ஏற்கனவே பேசிட்டாங்க; அது போதும். இப்ப பேசணும்ன்னு சொன்னது, பெண்ணின் அம்மாவோடு, நான் தனியா பேசணும்,'' என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும், குழப்பத்துடன் பார்த்தார், சண்முகம்.மொட்டை மாடியில் மாப்பிள்ளையின் அம்மா எதிரில் மனதில் சஞ்சலத்துடன் நின்றிருந்தாள், கீதா. ''எனக்கு, ஒரே மகன். அவன் வாழ்க்கை நல்லபடியாக அமையணும் இல்லையா... அதுக்காக நான் சில விஷயங்களை தெளிவுபடுத்திக்க விரும்பறேன்,'' என்று ஆரம்பித்தார், மாப்பிள்ளையின் அம்மா.''என்ன நினைக்கிறீங்களோ, அதைக் கேளுங்க... எனக்கும் வசுந்தரா ஒரே மகள். நல்ல இடத்தில் கல்யாணமாகி, நல்லபடியாக வாழணுங்கிறது தான் எங்களுடைய வேண்டுதல்.''''நல்லது. அப்படி நினைச்சுதான் கல்யாணம் பண்றோம். ஆனால், ஒருத்தருக்கொருத்தர் சரியான முறையில் புரிஞ்சுக்காம, ஏதோ ஒரு கதையை சொல்லி, இப்ப சர்வ சாதாரணமாக விவாகரத்து வாங்கிடறாங்க...'''என்ன இது, கல்யாணம் பேச வந்த இடத்தில், அபசகுனம் போல விவாகரத்து பற்றி பேசுகிறாரே...' என, குழப்பத்துடன் பார்த்தாள், கீதா.''நான் இப்படி வெளிப்படையாக பேசறேன்னு, தப்பா நினைக்காதீங்க. நம் ரெண்டு பேர் குடும்பமும் வேறு வேறு பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். உங்க மகள், எங்க வீட்டுக்கு வந்து, என் மகனைப் புரிந்து கொண்டு ஒருத்தருக்கொருத்தர் அன்பு பரிமாறி அனுசரித்து வாழ வேண்டியிருக்கும்.''சில சமயம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகலாம். மனதில் வருத்தமோ, கோபமோ வரும் போது, பெரியவங்க நாம் தான் அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். அதை விட்டுட்டு அவங்களுக்கு தப்பான அறிவுரைகள் சொல்லக் கூடாது. அப்படி ஒரு புரிதல் இல்லாத நிலை வந்தால்...''''பெண்ணோட அம்மாவாக நல்ல முறையில் புத்திமதி சொல்லி, அவளுக்கு புரிய வைப்பேன். அவள் வாழ்க்கையை நல்லபடியாக வாழச் செய்ய வேண்டியது பெத்தவளின் கடமை,'' என்றாள், கீதா.''அப்படி செய்வதற்கு பெண்ணோட அம்மா எப்பவும் தயாராக இருக்கணும். அதை விட்டுட்டு, தவறான புத்திமதி சொல்லி, குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி விவாகரத்து வரை போகும்படி செய்யக் கூடாது.''இப்பெல்லாம் விவாகரத்து என்பது சர்வசாதாரணமாகிடுச்சு. ஒண்ணுமில்லாத விஷயத்தை பெரிது பண்ணி, கோர்ட் படி ஏறிடறாங்க. இதற்கு காரணம் தவறான அணுகுமுறை. அதில் பெண்ணோட அம்மாவுக்கு தான் முக்கிய பங்கு இருக்கு.''தப்பா நினைக்காதீங்க. நானும் என் மகனுக்கு நல்லதையே சொல்வேன். புரிதலுடன் அவங்க நல்லபடியாக வாழணும். அவங்க இல்லறம் இனிதாக அமைய, நாம் இரண்டு பேரும் ஒத்துழைப்பை தரணும்,'' என்றார், மாப்பிள்ளையின் அம்மா.''புரியுதுங்க, நாம இரண்டு பேரும் அவங்க வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருப்போம். அதன் மேல் கட்டப்படும் வாழ்க்கை எனும் கட்டடம், நிச்சயம் நல்ல முறையில் அமையும்,'' திருப்தியுடன் சொன்னாள், கீதா.அருகில் வந்து அன்போடு கீதாவின் கையைப் பிடித்து, ''நான் சொல்றதை நீங்க நல்லாவே புரிஞ்சுக்கிட்டீங்க. நாம ரெண்டு பேரும் நம் பிள்ளைகளை நல்ல முறையில் வாழ வழி செய்வோம்,'' என்றார், மாப்பிள்ளையின் அம்மா.''நம் குடும்பத்துக்கு அப்படியொரு நிலை வராது. என் மகளை நல்ல முறையில் வளர்த்திருக்கேன். ஒரு நல்ல மருமகளாக, உங்க மகனுக்கு நல்ல மனைவியாக இருப்பாள். ''ஒரு பெண்ணின் தாயாக, அவள் வாழ்க்கையில் என் பங்கு என்ன என்பதைத் தெளிவாகப் புரிய வச்சுட்டீங்க. அவர்களின் நிறைவான வாழ்க்கைக்கு நாம் இருவரும் ஒரு பாலமாக இருப்போம்,'' என்றாள், கீதா.''வாங்க போகலாம். 'தனிமையில் பேசினோம், எங்களுக்கு பிடிச்சு போச்சு. முகூர்த்தத்திற்கு நாள் பார்க்கலாம்'ன்னு சொல்வோம்,'' என்றார், மாப்பிள்ளையின் அம்மா.இருவரும் முகம் மலர சிரித்தபடி கீழே இறங்கினர்.பரிமளா ராஜேந்திரன்