உள்ளூர் செய்திகள்

துரிதத்திலும் துல்லியம் சாத்தியமா?

'பதறாத காரியம் சிதறாது' என்றனர் நம் முன்னோர். இந்த வாக்குமூலத்தை, அவ்வளவு எளிதில் எவரும் நிராகரித்து விட முடியாது.எங்கள் மாவட்டத்தில், (சிவகங்கை சீமைங்க!) 'அவசரம்ன்னா அண்டாவுக்குள் கூட கை நுழையாது' என்ற பழமொழியை, வயதில் மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு அண்டாவிற்குள் எப்படி கை நுழையாமல் போகும் என்பது, சரியான வாதமாகாது. 'நிதானமே நமக்குப் பிரதானம்' என்பதை, கற்றுத் தரும் மறைமுகப் பழமொழி இது!ஆனால், வாழ்க்கை முறை இன்று, முற்றிலும் மாறி, பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டதே! கடிகார வளையத்தையே, நம் உலகமாக மாற்றிக் கொண்டு, சிறிய முள்ளின் வேகத்திற்கோ, பெரிய முள்ளின் வேகத்திற்கோ, சொல்லப்போனால், விநாடி முள்ளின் படு விரைவிற்கோ ஈடு கொடுத்து, ஓட்டமாய் ஓட வேண்டிய அவசியம், இன்று ஏற்பட்டு விட்டது.மும்பையில் மின்சார ரயில்களில், நான் ஏறி, இறங்கிய போது, 'அடேங்கப்பா... நம் சுறுசுறுப்பு, வேகமெல்லாம், மும்பை மக்களிடம், மிக சாதாரணம்...' என்று எண்ணத் தோன்றியது. அப்படி ஒரு வேக வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே, பதறாத மற்றும் அண்டா மற்றும் நிதான, பிரதானப் பழமொழிகளையெல்லாம், அவ்வப்போது ஓரங்கட்டி, இன்றையத் தேவைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும், நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.இல்லையென்றால், 'சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்'களை மட்டுமல்ல, 'பாசஞ்சர்' ரயில்களைக் கூட, கோட்டை விட்டு விடுவோம் போலிருக்கிறது.நத்தைகளாகவும், ஆமைகளாகவும் வாழ்க்கை நடத்தலாம் தான்; ஆனால், இந்த வாழ்க்கை முறையில், இழப்புகள் பலவாகி விடும். எனவே, புதியவற்றுக்கும், நவீனங்களுக்கும் ஈடு கொடுத்து வாழ வேண்டிய தேவை இருக்கிறது என்பதை, உணரத் தலைப்பட வேண்டிய காலகட்டம் இது!துரிதங்கள் எல்லாமே வெற்றி பெறுவதைப் பார்க்கிறோம். 'எக்ஸ்பிரஸ் டெலிவரி'களை, கூரியர்கள் விழுங்க, கூரியர்களை, மின்னஞ்சல்கள் மிஞ்சி விட்டன. அரை மணி நேர அறிவிப்பில், வீட்டு வாசலுக்கு வரும், 'பீசா'கள், நம் இல்லத்து இளசுகளை, அளவுக்கதிகமாக ஈர்த்து விட்டன.துரித உணவகங்களில் காணப்படும் கூட்டத்தை, சாதா உணவகங்களில் காண முடியவில்லை. 'பாயின்ட் டு பாயின்ட்' பஸ்களும், 'பை - பாஸ் ரைடர்'களும் ஈர்க்கும் கூட்டத்தை, பிற பஸ்களால் ஈர்க்க முடியவில்லை. 'காசு போனால் என்ன; சீக்கிரம் போனால் சரி...' என்கிற முடிவிற்கு, மக்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர்.துரிதத்திலும், துல்லியம் கொண்டு வர வேண்டுமானால், முதல் கட்டமாக, ஒன்றைச் செய்ய வேண்டும். 'மனதளவில் இது சாத்தியமில்லை...' என்ற கருத்தை நிரப்பிக் கொள்ளாமல், 'இது கடினம் தான்; ஆனால், என்னால் முடியும்...' என்று நம்பத் துவங்க வேண்டும்.மருத்துவத் துறையில், 'லேசர்' கருவி கொண்டு, அறுவை சிகிச்சை செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அறுவை சிகிச்சைக்கு, கத்திகள் பயன்படுத்தப்படும் போது கூட, துல்லியம் குறைந்து, சற்றே, அடுத்த பகுதியில், அது பட்டுவிடுவது உண்டு; 'லேசரி'ல் அப்படி அல்ல. அந்த ஒளிக்கற்றையை, ஒரு புள்ளியில் நிறுத்தினால், நிறுத்தியது தான்; வச்ச குறி தப்பாது.இதேபோல, எதில் ஈடுபடுகிறோமோ, அதிலிருந்து சிதறி விடாத கவனத்தை, கடமைப் புள்ளியின் மீது செலுத்தினால், 'ஆபரேஷன்' (இயக்கம் என்றும் தமிழில் பொருள் உண்டு) வெற்றி தான். அவசரம் என்றதும், நம் இதயம், கூடுதலாகப் படபடக்கிறது; இது அவசியம் இல்லை. ஓரிரு நீண்ட பெருமுச்சுகளை விட்டு, கலங்கி விடாத மனதுடன், கவனத்தைக் கூர்மையாக்க வேண்டும்.ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி, (முடியுமானால்) தவறு எங்கெல்லாம், எந்தக் கட்டத்திலெல்லாம் நிகழக் கூடும் என்று கணிக்க வேண்டும்; இப்படிக் கணித்ததும், இது சார்ந்த ஓட்டைகளை அடைக்க வேண்டும். 'எல்லாப் புகழும் தனக்கே வேண்டும்...' என எண்ணாமல், 'இது நீ பார்: இதை அவனிடம் கொடு: நான் இன்னதைக் கவனிக்கிறேன்...' என பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தால், பக்கவாட்டு விஷயங்களில், நம் கவனம், ஒருபோதும் திரும்பவே திரும்பாது.இனி, ஒன்றை நம்புங்கள்... எத்தகைய துரிதத்திலும், துல்லியம் என்பது சாத்தியமே!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !