கண்ணன் கருப்பு, ஏன்?
ஆக., 19 கிருஷ்ண ஜெயந்திகண்ணன் என்றதுமே அவனது கருப்பு நிறம் தான் நினைவுக்கு வரும். கரிய நிறம் கொண்ட அவனைக் காண விரும்பாத கண்கள் இல்லை. ஒரு சிலர், அவனை நீலவண்ணன் என்பர். அவன் கருப்பா, நீலமா என்பது, பக்தனின் பார்வையை பொறுத்தே அமைகிறது.அது மட்டுமல்ல, அவன் கருப்பன் என்றால், அவனுக்கு துணையாக ஒரு கருப்பாயியும் இருந்திருக்க வேண்டுமல்லவா? அவள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.கண்ணனை வட மாநிலங்களில் கிருஷ்ணன் என்றனர். கிருஷ்ணன் என்றால், கரிய நிறம் கொண்டவன் என்று பொருள். இதைக் கொண்டே ஒரு மாதத்தை கிருஷ்ண பட்சம், சுக்ல பட்சம் என்று, 15 நாள் கொண்ட பிரிவாகப் பிரித்தனர். கிருஷ்ண பட்சம் என்பது, பவுர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து இருள் திதியான அமாவாசையை நோக்கி செல்வது. இருளையும் கருமை என்றே சொல்வோம். சுக்ல பட்சம் என்பது, அமாவாசையிலிருந்து பவுர்ணமி எனும் வெளிச்சத்தை நோக்கி நகர்வது.சுக்ல என்றால் வெள்ளை. வெள்ளை நிறம் பளிச்சென இருக்கும். கிருஷ்ணன் என்ற பெயருக்குள்ள மரியாதையால் தான், பவுர்ணமியை விட அமாவாசை விரதத்தை நம்மவர்கள் அதிகமாக கடைப்பிடிக்கின்றனர்.அதே நேரம், சிவப்பு மற்றும் வெள்ளையாக இருப்பவர்கள் மீது, கிருஷ்ணனுக்கு வெறுப்பா என்றால், அதுவும் இல்லை. அவர், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளிச்சமே வடிவான சந்திர தசையில் வாழ்வைத் துவங்குவர். கிருஷ்ணரும், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதிலிருந்து, வெளிச்சத்தின் அதிபதியாகவும் அவர் விளங்குகிறார். கடவுள் பாரபட்சம் இல்லாதவர் என்பதையே, அவரது பிறப்பு வெளிப்படுத்துகிறது.கண்ணனை மிகவும் நேசித்தவள், ராதா. இவர்கள் ஓருயிர் ஈருடலாக வாழ்ந்தனர். இவளும் கருப்பு தான். இவளையே கருப்பாயி என்ற காவல் தெய்வமாக வணங்குகின்றனர். அது மட்டுமல்ல, கிருஷ்ணர் தன் வாழ்வில் மிகவும் நேசித்த மைத்துனர் அர்ஜுனனும், அவரது மனைவி பாஞ்சாலியும், கருப்பு தான்.சில பக்தர்கள், கண்ணனை நீலவண்ணன் என்றனர். நீல வண்ண ஆகாயத்துக்கு எல்லை கிடையாது. கண்ணனின் கருணைக்கும் அளவில்லை. எனவே, அவனே நீலவண்ணன் ஆகிறான். கருப்பு என்பது பரிபூரணமானது. மற்ற நிறங்களில் கூட களங்கம் இருக்கும். கருப்புக்கு களங்கமே கிடையாது. கண்ணனும் களங்கமற்றவன், பரிபூரணமானவன்.கருப்பாக இருப்பவர்களிடம் ரகசியங்கள் புதைந்து கிடக்கும். அதை அவர்கள் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களின் நடவடிக்கை எப்படி அமையுமென்றே தெரியாது என்பது, நிறவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த உண்மை. பாரதப்போரில் யாரும் எதிர்பாராத ரகசிய திட்டங்களை வகுத்தான்; ஜெயித்தான், கண்ணன். கரிய நிற கண்ணனை, அவரது பிறந்த நாளில் வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம்.தி. செல்லப்பா