உள்ளூர் செய்திகள்

பொதுவில் வைப்போம்!

கண்களை மூடித் திறந்தாள், ராதிகா. சோர்வு, அழுத்தமான கம்பளி போல உடலை அழுத்தியது. மேஜையில் கவிழ்ந்து துாங்கினால் என்ன... முடியுமா?இல்லை, இதற்கு மேலும் வேலைகள் உள்ளன. வேலைகளா, கடமைகளா, பொறுப்புகளா... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அன்றைய வேலை, இரவு, 7:30 மணி வரை இழுத்தது.வண்டியை கவனமாக ஓட்டி, வீடு போய் சேர்வது, முதல் வேலை. சின்னத்திரையில் லயித்துக் கிடப்பான், பாபி. மீட்டெடுத்து பால் கொடுத்து, தானும் காபி குடித்து, ராத்திரிக்கு மாவு அரைத்து, இட்லி வைத்து, சட்னி அரைக்கணும்.பாபிக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கணும். அடுத்த நாள் சமையலுக்கு, பாத்திரம் தேய்த்து, காய் நறுக்கி, வீட்டைப் பெருக்கி, துணிகளை மிஷினில் போடணும்... தலை சுற்றியது, ராதிகாவிற்கு.இன்று, சேகர் சீக்கிரமாக வந்திருப்பானோ என்று, ஒரு நப்பாசை இழையோடியது. வந்திருந்தால் மட்டும், கூடவே அலுப்பும் வந்தது.அதே தான், சேகர் வந்திருந்தான்.பாபியும், அவனும், 'வீடியோ கேம்ஸ்' விளையாடியபடி இருந்தனர்.இவளைப் பார்த்ததும், ''ஹாய் அம்மா... ரொம்ப பசிக்குது... பனீர் போட்டு, நுாடுல்ஸ் செய்யறியா?'' என்றான், பாபி.''எனக்கும்... மொதல்ல, தக்காளி சூப் வேணும்,'' என்றான், சேகர்.எதுவும் பேசாமல் குளியலறைக்கு போனாள். கண்கள் சுருங்கின. தோள்கள் கழன்று விட்டனவா, இல்லை ரத்த ஓட்டம் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.நல்ல வேளை, மாவு ரொம்பவும் புளித்துப் போகாமல் இருந்தது. தக்காளி சட்னியும், சாம்பாரும் போதும். ஒரு கப் காபிக்கு, தொண்டை ஏங்கியது. பசியில், வயிறு எப்போதோ இரைஞ்ச ஆரம்பித்தது.''அம்மா... நுாடுல்ஸ் எப்போ, 'ரெடி'யாகும்? 'கேம்' முடியப் போகுது,'' என்று கத்தினான், பாபி.அவன் தலையை கோதியபடி, ''பாபி... இன்னிக்கு இட்லியும், தக்காளி சட்னியும்... நாளைக்கு, நிச்சயம், நுாடுல்ஸ் செஞ்சு தரேன்,'' என்றாள்.ரிமோட்டை சோபாவில் எறிந்தபடியே, ''வாட்... இட்லியா? செம போர்... எனக்கு எதுவும் வேணாம்... 'யூ ஆர் பேட்' மா,'' என்றான், பாபி.''நுாடுல்ஸ் உனக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னு தெரியும். வாங்கி வெச்சிருந்தேன்; தேடியும், கிடைக்கலே... சாரி... நாளைக்குப் பண்றேன். இன்னிக்கு, இட்லி சாப்பிடு கண்ணா... ப்ளீஸ்,'' என்று, அவள் சொன்னதைக் கேட்காமல், கோபத்துடன் கட்டிலில் விழுந்தான், பாபி.அவளை எரிச்சலுடன் பார்த்தான், சேகர்.''எவ்வளவு சந்தோஷமா விளையாடிக் கிட்டிருந்தோம்... நிமிஷத்துல கெடுத்துட்டே... சே... என்ன குணமோ?''''என்ன சொல்றீங்க, நான் கெடுத்தேனா... நிஜமாவே நுாடுல்ஸ் பாக்கெட் வாங்கி வெச்சிருந்தேன். பண்ணின நினைவும் இல்ல, எங்கே போச்சுன்னு தெரியலே... இட்லி சாப்பிடறது குற்றமா... நீங்க, அவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா,'' என்றாள்.''ஓ... எனக்கே, 'அட்வைஸ்' பண்றியா... நானும் தான் சூப் கேட்டேன்... பண்ணணும்ன்னு நெனச்சியா?''''சேகர்... இன்னிக்கு, அலுவலகத்துல கூடுதல் வேலை... 'லஞ்ச்' டப்பாவைப் பாருங்க, கொண்டு போன தக்காளி சாதம் அப்படியே இருக்கு. அட்வைசரில இருந்து ஆடிட்டிங்... நாளைக்கும், 8:00 மணிக்கு, 'சீட்'டுல இருக்கணும்... என் நிலைமை உங்களுக்கு புரியும்தானே?''''சை...'' என்றான். ''எப்ப பார்த்தாலும் ஆபிஸ் பாட்டு தான், உனக்கு. நீ மட்டும் தான் வேலைக்குப் போறியா... உனக்கு மட்டும் தான்,10 மடங்கு வேலையா... நாட்டுல, பாதிக்கு பாதி பெண்கள் வேலைக்குப் போய், வீட்டையும், அலுவலகத்தையும் அழகா பார்த்துக்கறாங்க... உனக்கு, ரெண்டுத்துலயும் துப்பில்லே... எல்லாம், என் அதிர்ஷ்டம்.''''ஓகோ... அப்படியா... அந்த பெண்கள் எல்லாருக்கும், 'சப்போர்ட்டிவ்' ஆன கணவன் இருப்பான். புரிஞ்சுக்குற குடும்பம், அன்பான வீடு இருக்கும். இந்த மாதிரி, 8:00 மணிக்கும், 9:00 மணிக்கும், 'வீடியோ கேம்' விளையாடற வீடா இருக்காது.''''ரொம்ப பேசாதே, ராதிகா... எனக்கு எரிச்சலா வருது.''''எனக்கும் அப்படித்தான், சேகர்... ஒரு கப் காபி போட்டுக் கொடுக்க மனசில்லாத எப்படி நீங்க?''''என்ன... நான் காபி போடணுமா... நானும்,20 கி.மீ., போயிட்டு வரேன். எனக்கும், 'ஸ்ட்ரெஸ்' இருக்கு. 'லாக் அவுட்' எப்ப முடியுமோன்னு தெனம் தெனம் செத்துப் பொழைக்கிறேன். எனக்கு, உன்னை மாதிரி அரசு வேலையா... திமிரா பேசறதுக்கு?''''நானா திமிரா பேசறேன்... ஏன், அபாண்டமா பழி போடறீங்க... உங்க வேலையை பத்தி ஒரு நாளாவது கேட்டிருக்கேனா... மறுபடி கம்பெனி திறக்குமா, திறக்காதான்னு யோசிச்சாவது இருக்கேனா...''என் மனநிலை, உடல்நிலை பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு? மை காட்... எப்போ மயங்கி விழப்போறேன்னு தெரியலே... அயாம் டயர்ட்.''''சும்மா, 'சீன்' போடாதே... பார்க்கவே சகிக்கலே... வேலையை விட்டுடு... பிச்சை எடுத்து பிழைச்சுக்கலாம்.''''சேகர்... என்ன இது, கேவலமான பேச்சு... இப்படி சொல்றதுக்கு, வெக்கமா இல்லை. ரொம்ப அவமானமா இருக்கு.''''ஏய்... என்னடி திமிரா... கொழுப்பு அதிகமாயிடுச்சா... பொம்பள மாதிரி பேசுடி.''அவள் விக்கித்தாள். நிஜமாகவே தலை சுற்றியது.'உயரிய கல்வியானது வெறும் தகவல்களை, நம் மூளையில் சேர்ப்பதில்லை. எல்லா இடர்பாடுகளுக்கு இடையிலும், நம் வாழ்வை சமாதானமாக்குவது...' சொன்னது யார் என்று தெரியவில்லை, ராதிகாவுக்கு. கண்ணீர் வழிந்தது. என்னதான் ஆனாலும், நீ பொம்பள என்பது தான், கடைசியில் நிற்கப் போகிறதா... பொம்பள மாதிரி பேசு, வீட்டு வேலை செய், அடக்கமா இரு... அய்யோ... இதுவா அவள் வேண்டியது...கல்வி, புத்திசாலித்தனம், பொறுமை மற்றும் எல்லா பண்புகளையும் அடித்து நொறுக்கி விடுகிற ஆயுதத்தை யார் அவன் கையில் கொடுத்தனர். அம்மாவும், பாட்டியும், பெரிய பாட்டியும், கதவுக்குப் பின் நிற்பது போலவும், இட்லி, தோசை செய்வதும், இரவில் தாசியாக இருப்பதும் தான் பொம்பளை என்று, மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதா?பள்ளி விட்டு வந்தவுடன், பாபியை அழைத்துக் கொண்டு கிளம்பினான், சேகர்.''எங்கப்பா போறோம்?''''தாத்தாவை பார்த்துட்டு வரலாம். அவருக்கு, குரல் சரியில்லே... சளி பிடிச்ச மாதிரி இருக்கு.''மூன்றாவது தெருவில் இருந்தது, அப்பாவின் வீடு. வேப்பமரக் காற்று அவனை வரவேற்றது.''பாபி கண்ணா... வா வா... எப்படிடா இருக்கே? சேகர், வாடா...'' என்று, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார், அப்பா.''தாத்தா... எனக்கு, 'கிட்கேட்' வெச்சிருக்கேதானே?''அலுப்புடன் உட்கார்ந்தான், சேகர்.எதிரில், புன்னகையுடன் அம்மாவின் புகைப்படம். அகல் விளக்கின் மெல்லிய ஒளி. சின்னஞ்சிறு கிண்ணங்களில் பொங்கல், சட்னி. கூடவே தாழம்பூ ஊதுபத்தியின் மணம்.வீட்டை மணக்க மணக்க வைத்திருப்பாள், அம்மா.''ஹை ஹை... நுாடுல்ஸ் தேங்க் யூ தாத்தா,'' என்று, தட்டை மடியில் வைத்து, சாப்பிட துவங்கினான், பாபி.''காய்ச்சல் எதுவும் இல்லையே... சளி எப்படி இருக்கு... உங்க குரல் சரியாவே இல்லே... அதான், மனசு கேட்கலேப்பா,'' என்றான், பெருமூச்சுடன்.''ராதிகா தயவுல எல்லாம் சரியாகிட்டதுடா... பாவம், அவளுக்கு எவ்வளவு வேலை... இருந்தாலும், காலை - மாலை ரெண்டு வேளையும் இங்க வந்து, கஷாயம், வெந்நீர், மாத்திரை கொடுத்தாள். ரசம் சாதம் கரைச்சுக் கொடுத்து, ராத்திரிக்கு, கஞ்சி வெச்சுட்டு போனாடா,'' என்றார்.''என்னப்பா?''''ஆமாடா... பெண்களை நாம இன்னும் சரியா புரிஞ்சுக்கலே... குறிப்பா, அம்மா, மனைவி, தங்கை, மகள், யாரையும்... அம்மா, வீட்டை எப்படி சொர்க்கம் மாதிரி வெச்சிருப்பாள். ஒருநாள் கூட நான் பாராட்டினதே இல்லை...''பாராட்டை விடு, திட்டாமலாவது இருந்திருக்கேனா... இங்க என்ன ஒட்டடை, இது ஏன் அழுக்கு. ஏன் ரசம் சூடு குறைஞ்சிருக்கு. இப்படி எவ்வளவு குத்தம், குறை சொல்லியிருக்கேன். பாவம், பயந்து பயந்து எல்லாம் செய்வா...''அதைப் பார்க்கறதுல குரூர சந்தோஷம். ஏன், ஆம்பிளை என்கிற கர்வம். எப்பவும் உயர்ந்தவன்கிற திமிர். எனக்கு கீழே தான் நீ என்கிற அகங்காரம். கரும்பு சக்கை மாதிரி அவளை பிழிஞ்சேண்டா. 50 வயசுலயே போய் சேர்ந்துட்டா...''உடம்புக்குள்ள, மனசுக்குள்ள வலி. எதுவுமே என் கண்ணுக்கு தெரியலே... அவ்வளவும் ஆண் குலம் போட்ட திரைகள். இப்போ எல்லாமே புரியுதுடா... பெண் இல்லாத வீடு, வெறும் கட்டடம்; ஜீவன் இல்லாத சமாதி. அவளுக்கு, உண்மையான தோழனா இருந்திருக்கணும்... அந்த உயிருக்கு முழுமையான மதிப்பைக் கொடுத்து, அரவணைச்சிருக்கணும். இது, என் வாழ்வின் தோல்விடா சேகர்.''விழிகளில் நீர் கொப்பளிக்க, ஆற்ற முடியாத வேதனை கரும்புகை போல அப்பிக் கொள்ள, சுவாசம் தடுமாறியது.''நுாடுல்ஸ், ரொம்ப ருசி. தேங்க் யூ தாத்தா,'' என்று கத்தினான், பாபி.''பாபி கண்ணு... நீ, உன் அம்மாவுக்கு தான், 'தேங்க்ஸ்' சொல்லணும். அம்மா செஞ்சது தான் இது.''''ராதிகாவா, எப்போ?'' என்றான், சேகர்.''போன வாரம் ஒருநாள், எனக்கு கொண்டு வந்து கொடுத்தா, 'டேஸ்ட்டு'க்கு. மிளகுகாரத்தோட ரொம்ப பிடிச்சது. 'நெறைய பண்ணிக் கொடும்மா'ன்னேன்... அதான் இன்னிக்குக் கார்த்தால வரும்போதே, நுாடுல்ஸ் பாக்கெட் வாங்கி வந்து, நிறைய பண்ணி, உங்க ரெண்டு பேருக்கும் எடுத்து வெச்சிட்டுப் போனா...''பாவம், ஆபீஸ்ல இன்னிக்கு முக்கியமான வேலைகள் இருக்காம். உன் விஷயம் என்னடா ஆச்சு... வேலை பொழைக்குமா இல்லையா?''''தெரியலேப்பா... பகீர்ன்னு இருக்கு... இந்த வயசுல, வெளில எங்க போய் வேலை தேடறது?''''நல்ல வேளை... ராதிகாவுக்கு பிரமாதமான வேலை. கை நிறைய சம்பளம். தங்கமான மனசு. நீ, பதறாம பொறுமையா தேடு. உன் மெக்கானிகல் படிப்புக்கு, நல்ல வேலை கிடைக்கும்.''''சரிப்பா... நாளை வரேன்.''''எனக்கு உடம்பு பரவாயில்லை; அவளை அலைய வேண்டாம்ன்னு சொல்லு.''''சரிப்பா,'' என, பாபியை அழைத்துக் கொண்டு, நடந்தான்.வானம் இருட்டி, மழை கொட்ட ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் வாசலில் நின்றது, ஆட்டோ.வேகமாக, குடையை எடுத்து ஓடினான், சேகர்.''பார்த்து ராதிகா... நனையாம, குடைக்குள்ளே வா. வெரி சாரி... ராதிகா,'' என்றான்.''எதுக்கு சேகர் சாரி...''''நான் பேசினதை எல்லாம் மன்னிச்சுடு...ஏதோ, டென்ஷன், கவலை.''மின்னல் வெட்டி, மழையின் வேகம் அதிகரித்தது.''என் மேலேயே எனக்கு கோபம், ராதிகா... ஆம்பிளை மாதிரியா இருக்கேன். இருக்குற வேலையும் போகிற நெலைமை. நாலு மாசமா சம்பளம் வராத கேவலம். இந்த லட்சணத்துல உன்னைப் போய்...'' என்பதற்குள்...''சேகர்... எல்லா நிலைமைகளும் மாறும். நல்லதே நடக்கும். ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பிரிவினை மட்டும் வேண்டாம். அதை பொதுவில் வைக்கலாம். நாம பொது மனிதர்கள்... அது போதும்... சரியா?'' என்றாள், ராதிகா.நெகிழ்ந்து, அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.ராஜ்யஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !