உள்ளூர் செய்திகள்

வீழ்வதற்கல்ல வாழ்க்கை! பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!

நரசிம்ம அவதார கதை நினைவிருக்கிறதா? இந்த சமாசாரம் புராண காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் தொடர்கிறது.என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர், அப்பாக்களுக்கும் - பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் வழக்குகள் பலவற்றை என்னிடம் கூறியுள்ளார்.ஊட்டியில் மிகப்பெரிய எஸ்டேட் அதிபர், தன் ஒரே பிள்ளையுடன், நீதிமன்றத்தில் மல்லுக்கு நிற்கிறார். 'அத்தனையும் நான் சம்பாதித்தது. என்னவோ, பாட்டன் வீட்டு சொத்து மாதிரி பேசுறான்...' என்று மகனை பார்த்து குதிக்கிறார்.கவுரவம் படத்தில், 'நீயும், நானுமா... கண்ணா நீயும், நானுமா... ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே! அறுபதை, இருபது வெல்லுமா உலகிலே...' என்ற பாடலைப் போல் தான் பல குடும்பங்களில் நடக்கின்றன. ஒன்றுமில்லாததையெல்லாம் வார்த்தைகளால் வளர்த்து, கவுரவப் போர் தொடுப்பர்.'நான் பார்த்து பொறந்த பையன்... இவனுக்கு, இவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்...' என்று, முகம் சிவக்க கத்துகிற அப்பாக்களுக்கு ஒரு வார்த்தை...நான்கு சுவர்களுக்குள் நடக்கும் கவுரவப் போரை, இருவராலும் மதிக்கப்படும், விரும்பப்படும் ஒருவரை வைத்து, காதும் காதும் வைத்தது போல் பேசி முடிக்காமல், இப்படி நீதிமன்ற கூண்டுகளில் கவுரவத்தை பந்தாடி, பலரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க இடம் தருவது புத்திசாலித்தனமாகுமா!நம் பிள்ளைகள், நம் அங்கம்; நம் உடம்பிலிருந்து எடுத்து வைத்த மற்றொரு உருவமே! நம் போர்க் குணத்தையும், எதிர்க் குரலையும், தோற்றத்தையும், பண்புகளையும், ரத்தம் மற்றும் உயிரணுக்களையும் உரித்து வைக்கப்பட்ட குளோனிங்குகள் அவர்கள். அவர்களோடு ஏன் இவ்வளவு வேறுபாடு?கண் ஒரு தவறான காட்சி கண்டது என்று, நம் கண்களை, நாமே விரல்களால் குத்திக் கொள்வோமா, கைகள் தவறு செய்தன என்று அவற்றை வெட்டி எறிவோமா, கால்கள் வழிமாறி நடந்தன என்று அவற்றைக் கட்டையால் அடிப்போமா? இதற்கென்று ஏதோ ஒரு சமாதானம் வைத்திருக்கிறோம் அல்லவா? ஆனால், நம் வெளி அங்கங்களான நம் பிள்ளைகளை மட்டும், ஏன் ஒரு சமாதானமும் செய்து கொள்ளாமல், தண்டிக்க முன் வருகிறோம்?இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களை பற்றி, 'பிதாவே இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றனர்...' என்றார்.இவ்வாக்கியங்களை, பிள்ளைகளை பார்த்துக் கூறும் மனநிலை, பெற்றோருக்கும் வர வேண்டும்.பிஸ்கெட் கொடுப்பதிலிருந்து பெரிய விஷயம் வரை பெரியவர்கள் விட்டுக் கொடுப்பது முறையா இல்லை சிறியவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா?பெரியவர்களுக்கு மனப்பக்குவம் அதிகமா, சிறியவர்களுக்கு அதிகமா? இக்கேள்விகளுக்கான விடை எளிது என்றால், அதைப் பின்பற்றுவது மட்டும், ஏன் கடினம் என்று கருத வேண்டும்?நம் பிள்ளைகள், நல்லவர்களாக இருக்கக்கூடும். வந்ததுகளும், சேர்ந்ததுகளும் சரியில்லாமல் போனால், பாவம் நம் பிள்ளைகள் என்ன செய்யும்?என் உறவினர் ஒருவர், 'என் பையன் ரொம்ப நல்லவன்; அவன் மாமனார் சொல்லிக் கொடுக்கிறபடி ஆடுகிறான்; ரெண்டு பேரையும் என்ன செய்றேன் பாருங்க...' என்றார்.'உங்க சம்பந்தியை உங்கள் மகன் அறிவாரா... அவரைக் கொண்டு வந்து சேர்த்த பங்கு உங்களுடையது அல்லவா! இதில், மகனை மட்டும் குறை கூறுவதில் என்ன அர்த்தமிருக்கிறது... வளர்த்த விதம் சரியில்லை, வந்து சேர்ந்ததும் சரியில்லை. மகனை மட்டும் குறை கூறுவது, எப்படி சரியாகும்...' என்றேன்.ஆடிப்போனார் மனிதர்.எந்த நிலையிலும், பிள்ளைகள் செய்கிற பிழைகளை பொறுத்துப் போகிறவர்களே, இலக்கணப் பெற்றோர். அவர்களுக்காக இரக்கப்படுங்கள். எந்த நிலையிலும், பிள்ளைகளை விட்டுக் கொடுக்காதீர்கள். மாறாக, பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுங்கள்.'விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை' நான் கூறவில்லை; நம் முன்னோர் கூறியது!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !