சிங்கங்களுடன் வசிக்கும், உக்ரைன் இளைஞர்!
இந்த படத்தில் சிங்கத்தை கொஞ்சிக் குலாவும் இந்த இளைஞரின் பெயர் அலெக்சாண்டர். உக்ரைனில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையின் உரிமையாளர். இங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்கு, இவருக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. இதனால், விபரீதமான ஒரு முடிவை, எடுத்துள்ளார்.இவரது மிருக காட்சி சாலையில், ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் சிங்கமும் உள்ளன. அங்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குகைக்குள், இந்த சிங்கங்கள் வசிக்கின்றன. மிருக காட்சி சாலைக்கு போதிய நிதி திரட்டுவதற்காகவும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், இந்த குகைக்குள், சிங்கங்களுடன், 35 நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி விட்டார். தன் துணிச்சலான இந்த நடவடிக்கையை விளம்பரப்படுத்தும் வகையில், குகைக்குள் கேமராக்கள் பொருத்தியுள்ளார். இதன் மூலம், இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும், வெளி உலகத்துக்கு தெரிய வரும்.'நீங்கள் குகைக்குள் இருக்கும் போது, சிங்கங்களுக்கு திடீரென கோபம் வந்து, உங்களை தாக்கினால் என்ன செய்வீர்கள்?' என்ற கேள்விக்கு,'இவை நான் வளர்த்த சிங்கங்கள் தான். இருந்தாலும், அவற்றின் குணங்கள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தைரியத்தை வரவழைத்து தான், இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன். நம்பிக்கை தானே சார் வாழ்க்கை...' என்று, சிறிதும் பயம் இன்றி, தத்துவார்த்தமாக பேசுகிறார்.— ஜோல்னா பையன்.