உள்ளூர் செய்திகள்

காதல் விபரீதம்... தடுப்பது எப்படி?

காதலில் இரு பக்க காதல் உண்டு. ஒரு பக்க காதலும் உண்டு.நினைத்தபடி நடக்காதபோது, ஆண்களில் பலர், கடும் கோபம் அடைந்து, பல குற்ற செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால், காதலித்த பெண்ணுக்கு சங்கடமும், இப்படி கஷ்டங்களை தரும் நபரும் கண்டுபிடிக்கப்பட்டால், ஜெயில் வாசம் அனுபவிப்பதும் சகஜம். இந்த கோபத்தை, வேறு பாதையில் செலுத்தி, இருவருக்குமே பிரச்னை வராமல் சமாளிக்க பின்பற்றப்படும் சில வழிகள் இதோ:காட்டு விலங்கு மிருககாட்சி சாலை, சிட்னி - ஆஸ்திரேலியா:கைவிடப்பட்ட காதலி அல்லது காதலன் பெயரை, இந்த மிருககாட்சி சாலையில் உள்ள பாம்புகளுக்கு சூட்டி, பழிக்கு பழி வாங்கிய திருப்தியுடன் ஒதுங்கலாம் எல்பாசோ மிருககாட்சி சாலை, அமெரிக்கா:காதலில் தோல்வி அடைந்தவர்கள், தங்கள் காதலி - காதலன் பெயரை, பிப்., 10ம் தேதிக்குள், இந்த மிருககாட்சி சாலையில் கொடுக்க வேண்டும். அங்குள்ள அதிகாரிகள், பிப்., 14ம் தேதியன்று, அசப்பில், கீரிப்பிள்ளை போல் காட்சியளிக்கும், 'மீர்கேட்' என்ற விலங்குகளுக்கு அந்தப் பெயரை சூட்டி, கட்டி போட்டு விடுவர்.அமெரிக்காவில் உள்ள, ஓர் அமைப்பு, இங்குள்ள கரடிகளுக்கு உணவாக, மீன்களை போடுவர். உங்களுக்கு யார் மீது கோபமோ, அவர் பெயரை இவர்களிடம் கொடுத்து விட்டால், மீன்களுக்கு அந்த பெயரை சூட்டி, நீங்களே அதை கரடிக்கு உணவாகப் போட அனுமதிக்கின்றனர்.அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாநிலத்தில், 'மிஸ்டர் கப் கேக்ஸ்' என, ஸ்பெஷல் கப் கேக் செய்யும் கம்பெனி உள்ளது; காதலில் தோல்வி அடைந்தவர்கள், கைவிட்டவரின் பெயரை, அந்த கேக்கில் எழுதி வாங்கி, கத்தியால் குத்தி துாள் துளாக்கி மகிழலாம்.இதன் மூலம் காதலில் தோற்றவர்களின் கோபம் மறைந்து, மனதில் அமைதியும் ஏற்படுகிறது என்கின்றனர்.— இப்படி, நம் ஊர் மிருககாட்சி சாலையிலும் செய்து, ஏமாற்றப்பட்டவர்களின் கோபத்தை தணிக்கலாம். கட்டணம் வசூலித்து, மிருககாட்சி சாலை செலவுக்கும் பயன்படுத்தலாம். யோசிப்பரா!காதலர் தினம் கொண்டாடுவது, நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. உதாரணத்துக்கு இதோ சில நாடுகள்:* ஐரோப்பிய நாடுகளான, பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில், இதன் பெயர், தோழர் - தோழியர் தினம். காதல் பங்களிப்பாக இதை கொண்டாடாமல், மாறாக, அன்று தோழர்கள், தோழியரிடையே வாழ்த்துக்கள், அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளும் தினமாக கொண்டாடுகின்றனர்.அதேசமயம், இந்த நாளை, காதல் ஜோடிகள், தங்கள் நிச்சயதார்த்த தினமாகவும், மேலும் சிலர், திருமண நாளாகவும் கொண்டாடுகின்றனர்.* ஐரோப்பிய நாடான பிரான்சில், ஒரு காலத்தில், ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் எதிர் பக்கம் நின்று, தமக்குரிய ஜோடிகளை தேர்வு செய்து, இணையும் நாளாக இருந்தது.ஜோடி தேறாத பெண்கள், தங்கள் கையில் கிடைத்து, தேறாமல் போன ஆண்களின் புகைப்படங்களை அங்குள்ள எரியும் நெருப்பில் போடுவர். ஆனால், இந்த நிகழ்ச்சி சார்ந்து பெரும் கூட்டம் திரளப் போய், கட்டுப்படாத சூழல் வந்தபோது, இந்த சந்திப்பு நிகழ்ச்சியையே, தடை செய்து விட்டது, பிரான்ஸ் அரசு.* ஆப்ரிக்க நாடான கானாவில், பிப்., 14ம் தேதி, சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள், சாக்லேட் தயாரித்து, ஒருவருக்கு ஒருவர் பரிமாறி மகிழ்ச்சி அடைவர். இதனால், பிப்., 14ம் தேதி, இந்த நாட்டை பொறுத்தவரை, தேசிய, சாக்லேட் தினம்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !