கடுகு கணபதி!
அவ்வையார் பாடிய விநாயகர் அகவலில், விநாயகர் அணுவிற்கு அணுவானவர் என்றும், அப்பாலுக்கு அப்பாலாய் என்றும் வரிகள் வருகின்றன. தன்னை எப்படி வேண்டுமானாலும் சுருக்கிக் கொள்வார், விநாயகர். அதே நேரம் காணவே முடியாத அளவுக்கு பிரமாண்டமானவராகவும் மாறி விடுவார்.இந்த வரிகளின் அடிப்படையில், வணிகர் ஒருவருக்கு, விநாயகர் கோவில்கள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்திருக்க வேண்டும். கடுகு கணபதி என்றும், கடலை கணபதி என்றும் இரண்டு சிலைகளை வடித்தார். இரண்டுக்கும் தனித்தனி கோவில்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கோவில்கள், கர்நாடக மாநிலம் ஹம்பி, ஹேமகுட்டா குன்றில் உள்ளன. 522 ஆண்டுகளுக்கு முன், வணிகர் ஒருவர் ஹம்பி வந்தார். அவர் தன் பெயரை நிலை நாட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், இவர் அன்றைய அரசர் இரண்டாம் நரசிம்மரின் தீவிர விசுவாசி என்பது மட்டும் தல வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.மன்னரின் நினைவாக, இரண்டு விநாயகர் கோவில்களை எழுப்ப விரும்பினார். இவற்றில் பிரதிஷ்டை செய்ய, ஒரு விநாயகர் சிலையைப் பெரிதாகவும், மற்றதை சிறிதாகவும் உருவாக்க சிற்பிகளிடம் கூறினார். அதன்படி சிலைகள் உருவாகின.மிக அதிசயமாக, சிறிய விநாயகரின் சிலையில் அமைந்த தொந்தி, கடுகு போல உருண்டையாக அமைந்து விட்டது. இதைப் பார்த்த வணிகர், 'சசிவேகாலு கணேசா' என, கூவினார். சசிவேகாலு என்ற கன்னட சொல்லுக்கு, கடுகு என்று, பொருள். அன்று முதல், அந்த விநாயகருக்கு, சசிவேகாலு கணேசர் என்ற பெயரே நிலைத்து விட்டது.பெரிய சிலை, வேர்க்கடலை வடிவத்தில் சற்று பெரிதாக அமைந்தது. இதற்கு, 'கடலேகாலு கணேசா' என, பெயர் வைத்து விட்டனர். கடலை கணபதி என்பது, இதன் பொருள். கடுகு கணபதி 8 அடி உயரமும், கடலை கணபதி, 15 அடி உயரமும் கொண்டவர்களாக அமைந்தனர். கடுகு கணபதிக்கு மற்றொரு விசேஷமும் உண்டு. அவரது வயிற்றில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும். ஹம்பி மக்கள் விளையாட்டாக, விநாயகர் அதிக மோதகங்களை சாப்பிட்டு விட்டார். தன் தொந்தி தெரியாமல் இருக்க, பாம்பால் வயிற்றை இறுக கட்டியிருக்கிறார் என்பர். தல வரலாற்றிலும், இந்த செய்தி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இவரை, சித்தி விநாயகர் என்றும் சொல்வர். வளத்தையும், அதிர்ஷ்டத்தையும் அருள்பவராக இவரைக் கருதுகின்றனர். யுனெஸ்கோ அமைப்பு, இந்தக் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.விமானத்தில் சென்றால், பெங்களுருவிலிருந்து, 300 கி.மீ., பெல்லாரியில் இருந்து, 65 கி.மீ., துாரத்தில் ஹம்பி உள்ளது. ரயிலில், சென்னை சென்ட்ரலில் இருந்து ஹோஸ்பெட் நிலையத்தில் (680 கி.மீ.,) இறங்கி, 10 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.இங்கு ஹோட்டல்கள், கடைகள் இல்லை. தியானம் செய்ய நல்ல இடம். ஹேமகுட்டா குன்றிலிருந்து சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்கலாம். 15 நிமிடத்தில் குன்றில் ஏறி விடலாம். விநாயகர் சதுர்த்தியன்று இங்கு சென்று வாருங்கள்.தி. செல்லப்பா