உள்ளூர் செய்திகள்

என் மகள்!

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்வேதா, அப்பாவின் கார் போர்டிகோவில் வந்து நிற்க, சந்தோஷ துள்ளலுடன் ஓடி வந்தாள்.கை நிறைய பார்சலுடன் காரிலிருந்து இறங்கிய கவுதம், ''ஸ்வேதா குட்டி... வா... வா... எல்லாம் உனக்குத்தான். நாளைக்கு, உனக்கு பிறந்த நாள் இல்லையா... அப்பா என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு...'' என்றபடி மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். ''இந்த புது டிரஸ், செயின், டெடி பேர் எல்லாமே நல்லா இருக்குப்பா.''புன்னகை மின்ன பேசும், தன் பத்து வயது மகளை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.அவர்களையே பார்த்தபடி, சோபாவில் அமைதியாக அமர்ந்திருக்கும் சாருவைப் பார்த்தான்.''சாரு, என்ன யோசனை... ஸ்வேதா டிரஸ் எப்படி இருக்கு?''''எல்லாமே நல்லா இருக்குங்க.''''ஸ்வேதா குட்டி, உள்ளே போய் விளையாடு. அப்பா போய் முகம் அலம்பிட்டு வரேன்.''''சரிப்பா.'' ஸ்வேதா உள்ளே செல்ல, மனைவியைப் பார்த்தான்.''என்ன சாரு, நான் காலையில் சொல்லிட்டுப் போனதையே நினைச்சுட்டிருக்கியா?''''நாம ஸ்வேதாவோட பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடலாம்ன்னு தோணுதுங்க. எதுக்கு, நேசக்கரங்கள் இல்லத்துக்கு போய் கொண்டாடலாம்ன்னு சொல்றீங்க... அதுவுமில்லாமல், இப்ப அந்த பிஞ்சு மனசிலே, இந்த விஷயத்தை சொல்லணுமா... வேண்டாங்க. எனக்கென்னவோ மனசிலே பயமா இருக்கு. நமக்கும், நம் மகளுக்குமிடையே இருக்கிற அன்பும், பாசமும் என்னைக்கும் மாறக்கூடாதுங்க. நீங்க தான் தேவையில்லாம விஷயத்தை பெரிசு செய்து, பிரச்னை செய்யப் போறீங்களோன்னு தோணுது.''''சாரு, உன்னோட பயம் அர்த்தமில்லாதது. என்னைக்கிருந்தாலும் ஸ்வேதாவுக்கு உண்மை தெரியுறது தான் நல்லது. நாளைக்கு, அவ பெரியவளானதும் தெரியறதை விட, இப்ப புரிஞ்சுக்கக் கூடிய வயசிலேயே விஷயத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லுறது நல்லது. இதனால், நம் அன்பும், பாசமும் மாறப் போறதில்லை. என்னைக்கிருந்தாலும், ஸ்வேதா நம்ப மகள்தான்னு மனசார ஏத்துக்கிட்டோம். இப்ப அவ நம்மோட சொந்த மகள் இல்லை; தத்துக் குழந்தைங்கிறதை, அவளுக்கு சொல்ற வயசாயிடுச்சு சாரு. அவ நிச்சயம் புரிஞ்சுப்பா. அதான் விஷயத்தை அவளைத் தத்தெடுத்த நேசக்கரங்கள் இல்லத்தில் வச்சு, அந்த நிர்வாகி மூலமாக சொல்லலாம்ன்னு முடிவு செய்திருக்கேன். எல்லாம் நல்ல விதமாக முடியும். நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதே.''''அம்மா நாளைக்கு என்னோட பிறந்த நாளை, என்னை மாதிரி நிறைய குழந்தைகளோடு கொண்டாடலாம்ன்னு, அப்பா சொன்னாரு. அவங்கெல்லாம் அம்மா, அப்பா, இல்லாதவங்களாம். அங்க இருக்கிற மாமா தான், அவங்களை பார்த்துக்கிறாராம். பாவம் இல்லையா... நிறைய ஸ்வீட் வாங்கிட்டுப் போய், அவங்களுக்குக் கொடுப்போம்... சரியாம்மா.''ஸ்வேதா சொல்ல... கண்கலங்க, அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள் சாரு.திருமணமான புதிது. சந்தோஷமாக சினிமா பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியவர்கள் மீது, பின்னால் வந்த கார் மோதி, சாரு நடுரோட்டில் குப்புற விழ, லேசான காயத்தோடு கவுதம் தப்பிக்க, 'உங்க மனைவிக்கு அடிவயிற்றில் பலமாக அடிபட்டதில், கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருக்கு, அதை எடுத்தால் தான், உயிருக்கு ஆபத்தில்லாமல், உங்க மனைவியைக் காப்பாத்த முடியும்...'சாரு பிழைத்து வர, வாழ்வின் சந்தோஷம் தொலைந்து போக, மனதைக் கல்லாக்கி கொண்டு வாழ ஆரம்பித்தனர்.'தாயாகிற அருகதையை இழந்து நிக்கிறேன். நமக்குன்னு, ஒரு வாரிசை கூட சுமக்க முடியாத பாவியாகிவிட்டேன். இப்படி, ஒரு வெறுமையான வாழ்க்கை நமக்குத் தேவையா... கடவுள் ஏன் நம்மை, இப்படி தண்டிச்சுட்டாரு?''சாரு மனசைத் தளரவிடாதே. நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நமக்குன்னு, கடவுள் குழந்தையை கொடுக்காட்டியும் நம்மால், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும். அதன் மூலம், நம்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்...''என்னங்க சொல்றீங்க?' கண்கள் அகலப் பார்த்தாள்.''ஆமாம் சாரு. உலகத்தில் பிறந்த ஒவ்வொருத்தரும் வாழத்தான் பிறந்திருக்கோம். நமக்கு குழந்தை இல்லேங்குறதுக்காக, வாழ்க்கையே தொலைஞ்சு போன மாதிரி நினைக்கிறது தப்பு சாரு. ரத்த பந்தங்களால் மட்டும் சொந்தம் உருவாகிறதில்லை. உள்ளத்தில் மலரும், அன்பும், பாசமும், நமக்கு சொந்தத்தை உருவாக்கும். எத்தனையோ ஆதரவில்லாத அனாதை குழந்தைகள் அன்புக்காக ஏங்கி, அரவணைப்பில்லாமல் வாழறாங்க. அவர்களில் ஒரு குழந்தையை தத்தெடுப்போம். உண்மையான அன்பு, பாசத்தோடு நம் குழந்தையாக நினைச்சு வளர்ப்போம். நம் வாழ்க்கை சந்தோஷமாக மாறும். என்ன சொல்ற சாரு...'ஒரு வயது குழந்தை, ஸ்வேதாவை தூக்கி மார்போடு அணைத்த போது, பத்து மாதம் சுமந்து பெற்ற வலி, சாருவின் உடலில் பரவ, மார்பு விம்ம கண்ணீர் வழிய, குழந்தையை முத்தமிட்டாள். இன்று வரை, ஸ்வேதாவை தான் பெற்ற மகளாக நினைத்து வளர்த்து வரும் சாரு, தன் மகளுக்கு உண்மை தெரிந்தால், அந்த பிஞ்சு மனம் என்ன பாடுபடும். அதன் விளைவுகள் எப்படி இருக்கும். ஸ்வேதா தன்னை விட்டு விலகி விடுவாளோ என்று பயந்தாள் சாரு.அந்த, 'நேசக்கரங்கள்' இல்லத்தின் மெயின் ஹாலில், அங்கிருக்கும் பிள்ளைகள் குழுமியிருந்தனர். இரண்டு வயதிலிருந்து, பத்து வயது வரை, குழந்தைகள் அணிவகுத்து நிற்க, அவர்கள் முன், அந்த இல்லத்தின் நிர்வாகியுடன், சாருவும், கவுதமும் - ஸ்வேதாவுடன் நின்றிருந்தனர்.''ஸ்வேதா இங்கே வாம்மா,'' நிர்வாகி அழைக்க, அவர் அருகில் வந்தவளிடம், ''எல்லாருக்கும், உன் பிறந்த நாளுக்கு ஸ்வீட் கொடுத்தியா?''''ஆமாம் அங்கிள். இவங்க எல்லாரையும், நீங்க தான் பார்த்துக்கிறீங்களா, இவங்களுக்கு அம்மா, அப்பா இல்லையா அங்கிள்?'அவரிடம் ஸ்வேதா கேட்க, கண்கலங்க மவுனமாக நின்றாள் சாரு. ''ஆமாம்மா. இவங்களாம் கடவுளோட குழந்தைகள். கடவுள் இவங்களைப் பார்த்துக்க தனித் தனியா, அம்மா, அப்பாவைக் கொடுக்கலை. அவங்களைப் பாதுகாக்கிற பொறுப்பை, என்கிட்டே கொடுத்திருக்காரு. நான் இப்ப உன்கிட்ட, ஒரு விஷயம் சொல்லப்போறேன்... அதை நீ நல்லபடியா புரிஞ்சிக்கணும்.''''சொல்லுங்க அங்கிள்.''''நீ, ஒரு வயது குழந்தையா இருக்கும் போது, ஒரு துணியில் சுற்றப்பட்டு, இந்த இல்லத்தின் வாசலில் கிடந்தே... கடவுள் உன்னை அனுப்பி வச்சதாக நினைச்சு, ஏத்துக்கிட்டேன். இந்த உலகத்தில், எல்லாக் குழந்தையும் தாய் மூலமாக வந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலை, பெத்தவங்களோடு வாழற கொடுப்பினையை, இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கலை. அப்படிப்பட்ட, ஆதரவில்லாத குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன்.இந்த இல்லத்தில் இருந்த உன்னை, இதோ நிக்கிறாங்களே இவங்கதான், உன்னை அவங்க குழந்தையாக தத்தெடுத்து, அன்பும், பாசத்தோடும் உன்னை தங்கள் மகளாக, ஆளாக்குகிற பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. உன்னை அழைச்சிட்டுபோயிட்டாங்க. நீ இப்ப அவங்களோட செல்ல மகள், எந்த சந்தர்ப்பத்திலும், அவங்க மேலே வச்சிருக்கிற அன்பும், பாசமும் மாறாமல்... ஒரு நல்ல மகளாக, அவங்களோடு சந்தோஷமாக இருக்கணும். நான் சொல்றது புரியுதா.''அவர் சொல்வதைக் கேட்டபடி, அமைதியாக நின்றிருந்த ஸ்வேதா. ''அங்கிள், அப்படின்னா எனக்கும் அம்மா - அப்பா இல்லையா... நானும் இங்க இருக்கிறவங்களைப் போல தானா அங்கிள்.''சாருவின் கண்களின் கண்ணீர் வழியத் துவங்கியது .''இருந்தாலும், நீ அதிர்ஷ்டம் செய்திருக்க ஸ்வேதா, பெத்தவங்க ஏதோ காரணத்துக்காக உன்னை விட்டு விலகினாலும், உனக்கு உண்மையான அம்மா - அப்பா கிடைச்சுட்டாங்களே, அதுக்கு நீ கடவுளுக்கு நன்றி சொல்லணும் ஸ்வேதா.''அவர் சொல்ல, அந்த ஹாலில் நடுநாயகமாக வீற்றிருக்கும். பிள்ளையார் சிலையின் முன், உதடுகள் ஏதோ முணு முணுக்க, கைகூப்பி நின்றாள் ஸ்வேதா.கண்மூடி பிரார்த்திக்கும், மகளைப் பார்த்தபடி கவுதமும்- சாருவும் தவிப்புடன் நிற்க, அவர்களை அமைதிப்படுத்தினார் நிர்வாகி.''கவலைப்படாதீங்க. நான் சொல்றதை ஸ்வேதா நல்லவிதமா புரிஞ்சுக்கிட்டா. சந்தோஷமா, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.''சாமி கும்பிட்டு, அங்கே வந்த ஸ்வேதா, கண்ணீர் வழிய நிற்கும் சாருவைக் குனிய சொல்லி, அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.''ஸ்வேதா, என் கண்ணே... நான், உன்னை பெற்றெடுக்காட்டியும், நீதான் என் மகள். என்னோட இந்த அன்பும், பாசமும் உண்மையானது, நான் தான் உன் அம்மாங்கிறதை புரிஞ்சிக்கிட்டியாம்மா!''''அம்மா... அங்கிள் சொன்னது, எனக்கு நல்லா புரியுதும்மா. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி, எனக்கு அம்மா - அப்பா கிடைச்சுட்டாங்க.''நான் கடவுள்கிட்டே என்ன வேண்டிக்கிட்டேன் தெரியுமா? எனக்கு இப்படியொரு அன்பான அம்மா- அப்பாவைக் கொடுத்து, என்னை சந்தோஷப்படுத்தின மாதிரி, இங்கே இருக்கிற எல்லாருக்கும், எங்கம்மா, அப்பா மாதிரி, நல்ல மனசுள்ள அம்மா, அப்பாவைக் கொடு, அவங்க இங்கேயிருக்கிறவங்களை, தங் கள் குழந்தையாக நினைத்து, அன்பு செலுத்தி வளர்க்க ஆசைப்பட்டு, அழைச்சுட்டு போனா, இந்த மாதிரி ஆதரவில்லாத பிள்ளைகள் இருக்க மாட்டாங்க இல்லையா. உங்களுக்கும், அப்பாவுக்கும் இருக்கிற அன்பான மனசை, இந்த உலகத்தில் இருக்கிற பெத்தவங்களுக்கும் கொடு சாமின்னு வேண்டிக்கிட்டேன்...''பெரிய மனுஷி தோரணையில் பேசும், தன் அன்பு மகளை தூக்கி முத்தமிட்டான் கவுதம்.***கீ.பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !