உள்ளூர் செய்திகள்

நல்ல குடும்பம் என பெயரெடுக்க...

ஆன்மிகம், பக்தி என்று, இரண்டு உள்ளன. இதில், எது முதலில் ஆரம்பம் என்பது யோசிக்க வேண்டும். ஆன்மிக வாழ்க்கை என்பது ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பது. இது, பழகப் பழக, மேலும், மேலும் விருத்தியாகும்.ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிக்கும் போது, பகவானை வழிபடத் தோன்றும். ஆரம்பத்தில் சில புஷ்பங்களை கொண்டு வந்து, சுவாமி படத்துக்குப் போடுவான். நாளடைவில் புஷ்பங்களைப் போடுவதோடு, 'ஏன் பூஜை செய்யக் கூடாது...' என்று நினைப்பான். மறுநாளிலிருந்து, காலையில் ஆசார, அனுஷ்டானங்களை முடித்து, பூஜை செய்ய உட்காருவான். முதலில், 'அஷ்டோத்ரம்' சொல்லி அர்ச்சனை செய்வான்; போகப் போக, சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான். பகவானிடமே மனம் ஈடுபடும். முதலில் இரண்டு வாழைப்பழம் வைத்து நிவேதனம் செய்வான். நாளடைவில், அன்னம், பருப்பு, பாயசம், பழம், தேங்காய் என்று விருத்தியாகி, நிவேதனம் செய்வான்.சுவாமி பூஜை, நைவேத்யம் ஆன பிறகு தான் சாப்பிட உட்காருவான். அதற்கு முன், ஒரு பிடி சாதம் காக்கைக்குப் போடுவதுண்டு. இப்படி பூஜை செய்யச் செய்ய, மனதில் பகவத் பக்தி ஏற்படும். கோவிலுக்குப் போய், சுவாமி தரிசனம் செய்து விட்டு வரத் தோன்றும்; போய் வருவான்.சில இடங்களில் நடைபெறும் உபன்யாசங்களைக் கேட்டு, பகவானிடம் பக்தி ஏற்படும். இப்படியாக, பக்தி என்பது விருத்தியாகி விட்டால், அதன் பிறகு, அனுஷ்டானம் என்பது கூட தேவையில்லாததாகி விடும்.மகான்கள், ரிஷிகள் சதா காலமும் பக்தி செய்து கொண்டே இருப்பர்; அனுஷ்டானம் என்பது அடுத்ததுதான். அதனால், பிள்ளைகளையும் இதே வழியில் பழக்கம் செய்வது நல்லது. தகப்பனார் பூஜை செய்யும் போது, பையனும் கூடவே இருந்தால், அவனுக்கும் இதில் செல்லும் புத்தி. தகப்பனார் சீட்டாடிக் கொண்டிருந்தால், பையன் ரம்மி ஆடப் போவான். அதனால், பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே, பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்துவது நல்லது.பையனுடைய சகவாசம், நடவடிக்கை இவைகளையும் கவனித்து வந்தால், பையன் போகக் கூடாத இடங்களுக்கு போக மாட்டான். தகப்பனாரைப் போலவே பக்தி மார்க்கத்தில் ஈடுபட விரும்புவான். இதெல்லாம் நல்ல குடும்பம் என்று பெயரெடுக்க உதவும். வாழ்க்கை என்பது சில காலம் தான்; அது, நல்ல முறையில் செலவிடப்பட வேண்டும்; எமன் வருவதும், கரன்ட் போவதும் எப்போது என்று தெரியாது; ஜாக்கிரதை என்றனர்.***ஆன்மிக வினா-விடை!வீட்டு பூஜை அறையில், நெய் விளக்கு ஏற்றி, வழிபடலாமா?சந்தேகமே வேண்டாம்... வீட்டின் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றலாம்.***வைரம் ராஜகோபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !