புத்தாண்டு பொம்மை!
குழந்தை இல்லாத பெண்கள், மழலை வரம் வேண்டி, மண் பொம்மையை தாயாருக்கு காணிக்கையாக்கும் வித்தியாசமான வழிபாடு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் நடைபெறும். தமிழ் புத்தாண்டு, வைகாசி பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில், இதை செய்தால், உடனே பலன் கிடைக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.மது, கைடபர் என்னும் அசுரர்கள், பெருமாளின் தேவிகளான ஸ்ரீதேவி, பூதேவியை கடத்த முயன்றனர். அப்போது, நித்திரையில் இருந்தார், பெருமாள். அவரை எழுப்ப விரும்பாத பூதேவி, பெருமாளின் திருவடி அருகிலும், ஸ்ரீதேவி அவரது மார்பிலும் ஒளிந்து கொண்டனர்.பெருமாளுக்கு படுக்கையாக இருந்த ஐந்து தலை நாகமான ஆதிசேஷன், விஷ ஜூவாலையை கக்கி, அசுரர்களை விரட்டியது. இருப்பினும், பெருமாளை எழுப்பாமல், தானே முடிவெடுத்து அசுரர்களை விரட்டியதால், அவர் தன்னைத் திட்டுவாரோ என, பயந்த ஆதிசேஷன், தன் தலைகளை சுருக்கிக் கொண்டது. கண்விழித்த பெருமாள், 'எஜமான் இல்லாத நேரத்தில், அவரது உடமைகளை பாதுகாப்பது பணியாளனின் கடமை. அதை நீ சரியாக செய்துள்ளாய்...' என, பாராட்டினார். இங்கு ஆதிசேஷன், ஐந்து தலைகளையும் சுருக்கியபடி இருப்பதை காணலாம்.ஒரு கையில் சக்கரமும், மற்றொரு கையில் சங்கும் வைத்துள்ளார், மூலவர், சத்தியமூர்த்தி பெருமாள்.இவ்வூரின் புராண பெயர், திருமெய்யம். பிற்காலத்தில், திருமயம் ஆனது. பெருமாளுக்கு, 'திருமெய்யர்' என பெயர். பெருமாளின் நாபிக்கமலத்தில், பிரம்மா, மார்பில், மகாலட்சுமி, மது, கைடப அசுரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர்கள் சத்தியமூர்த்திக்கும், திருமெய்யருக்கும் தைலக்காப்பு செய்யப்படும். உற்சவர், 'அழகிய மெய்யர்' எனப்படுகிறார். இக்கோவில், ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஒரு மலைக்கோவில். அருகில், சத்தியகிரீஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இங்குள்ள, உஜ்ஜீவன தாயாருக்கு மண்ணாலான விளையாட்டு பொம்மைகளை காணிக்கையாக படைத்து, குழந்தை பாக்கியம் தர வேண்டுகின்றனர், பெண்கள்.மதுரை - புதுக்கோட்டை சாலையில், 85 கி.மீ., துாரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக, 64 கி.மீ., துாரத்திலும், திருமயம் உள்ளது.தி. செல்லப்பா