உள்ளூர் செய்திகள்

பேசுவதற்கா விஷயமில்லை!

தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால், வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.'எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்...' என்று நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.இவர்களை, ஆங்கிலத்தில், 'சேட்டர் பாக்ஸ்' என்று குறிப்பிடுகின்றனர். நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.'வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே... ஏன் அப்பவே கேட்கலை... நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே...' என்போர் உண்டு.என்னை, நான் ஒரு, 'பிளாட்டிங் பேப்பர்' என்று சொல்லி கொள்வது உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்... அக்காலத்து, 'இங்க்' பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும் மையை துடைக்க, 'பிளாட்டிங் பேப்பர்' என்று விற்பர்; இதைக் கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்துவிடும்.துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால், உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு, விஷயத்தை கறந்து விடுவேன்.வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும் நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து விடுவேன்.அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின் ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே பேசவில்லை.'என்னத்த பேசுறது அந்தாளோட...' என்கிற கேள்வியை, நான் எவரை பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக் கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்; இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள் மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.பேசாதிருப்போரை இவ்வுலகம், 'அகம்பாவம் பிடித்தவன்...' என்றும், 'பணத் திமிர்...' எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. 'எவனையும் மதிக்க மாட்டான்...' என்று, குறை சொல்கிறது.பேசினால், 'எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ...' என்று அஞ்சுவோரும் உண்டு.பேசாதவர்களை பார்த்து, 'எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான் காரணம்...' என்று, புது கோணம் கற்பிக்கிறது.நம் மவுனத்திற்கு, ஓரிரு அர்த்தங்கள் தாம் இருக்க முடியும் என்று தானே இதுவரை நினைத்து கொண்டிருந்தீர்கள்! ஆனால், அது இல்லாத, பொல்லாத, 100 கற்பனைகளை எப்படி சிறகு விரிக்கிறது பார்த்தீர்களா?எதிராளிகளின் சுய புராணங்களை கிண்டினால், பேசாதவர்கள் கூட வண்டி வண்டியாக பேசுவர். எனவே, 'நம்முடன் பேசுவாரோ, மாட்டாரோ...' என்கிற ஐயம் எவர் மீதும் வேண்டாம்; அவர்களது சிறு சிறு செயல்களை, புகழ்ந்து சொன்னாலும் போதும், 'நான் யார் தெரியுமா... வீராதி வீரன், வீரபத்திரன் பேரன்...' என்று பெருமை பாட ஆரம்பித்து விடுவர். இதுபோதும், உரையாடல் களைகட்டி விடும்.பொது பிரச்னைகள், திரையுலகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை லேசாக எடுத்து, மெல்ல வெளியே விட்டால், எதிராளிகள், தன் விஷய மூட்டையை, பிரித்து கொட்டி விடுவர்!நமக்கு அதிகம் தெரியாததை போல் காட்டி, சில ஐயங்களை கேட்டால், 'அட... இவர் நம்மை விஷயம் தெரிந்தவராக கருதுகிறாரே...' என்று மகிழ்வடைந்து, உரையாடலை குறைவில்லாமல்ஆரம்பித்து விடுவர்.நாம் தான் உரையாடல் கலையின் அருமை தெரியாதவர்களாக ஆகிப் போனோம்; மேலை நாட்டவர்கள் இப்படி அல்ல. ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால், நெடுநாள் நண்பர்கள் போல் நமக்கு தோன்றும்; விசாரித்தால், சில நிமிடங்களுக்கு முன், அறிமுகமானவர்கள் என்பது தெரிய வரும்.உரையாடல் கலையை வளர்த்து கொள்ளுங்கள்; இதுவே பல உயரங்களுக்கு காரணமாகி விடும்!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !