உள்ளூர் செய்திகள்

திண்ணை!

திராவிட நாடு, தனி நாடாக வேண்டுமென்ற குறிக்கோளோடு, தி.மு.க., மக்களிடையே செல்வாக்கு பெற்று வருவதை அறிந்த மத்திய அரசு, தி.மு.க.,வை எப்படியாவது அழித்திட வேண்டுமென்று திட்டமிட்டது. அதன் எதிரொலியாக, தனி நாடு பிரிவினைச் சக்திகளைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.தனி நாடு தடைச் சட்டத்தை, கொண்டு வந்து, பிரிவினைக் கட்சிகளைத் தடை செய்வதற்கான சட்டப் பிரச்னைகளை மத்திய அரசு பரிசீலனை, செய்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.வி.நாராயணசாமி முதலி யாரைக் கொண்டு, மக்கள் உரிமைக் கழகம் என்ற ஒரு அமைப்பை ஆரம்பிக்க திட்டம் தந்தார் அண்ணாதுரை.நீதிபதி நாராயணசாமி முதலியாரும், அவர் கூறியவாறு, படித்தவர் களை எல்லாம் திரட்டி, அண்ணா துரையின் தலைமையில் மக்கள் உரிமைக் கழகத்தைச் சென்னை கோகலே ஹாலில் துவக்கினார்.தி.மு.க., ஒருகால் தடை செய்யப்பட்டால், அதன் கருத்துகளை மக்கள் உரிமைக் கழகம் வாயிலாக வெளியிடுவது என்பது அண்ணா துரையின் திட்டம்.விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, அப்போது அவர் வேலூர் சிறையில் இருந்தார். அவர் சிறைவாசத்தில் இருக்கும்போதே, வெளியில், தி.மு.க., மத்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டால், மக்கள் உரிமைக் கழகத்தின் மூலம், நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றலாம் என்று கருதி, முன்னேற்பாடாக அந்த அமைப்பை ஆரம்பிக்குமாறு ஏற்பாடு செய்தார். அந்தக் கழகத்தைத் துவக்கியவர்களில் நானும் ஒருவனாக அப்போது இருந்தேன்.— செங்கல்பட்டு வி.கே.ராஜாபாதர் ஒரு கட்டுரையில்.இரு பையன்கள், ஒரு ஏரி ஓரமாகப் போய் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், பணக்கார வீட்டுப் பிள்ளை. மற்றவன் ஏழைச் சிறுவன். ஏரியோரத்தில், ஒரு ஜோடி செருப்புகள் இருப்பதை, இருவரும் பார்த்தனர். தூரத்தில், ஒரு விவசாயி, கை, கால் அலம்பிக் கொண்டிருப்பதையும் பார்த்தனர். உடனே, இருவரும் ஒரு வேடிக்கை செய்யத் தீர்மானித்தனர். பணக்கார பையன் சொன்னான்... 'இந்தச் செருப்பை வீசியெறிந்து விடுவோம். விவசாயி வந்து பார்த்து, அங்குமிங்கும் ஓடித் தேடுவான். மிரள மிரள விழிப்பான். நமக்கு நல்ல வேடிக்கையாக இருக்கும்...' இப்படி சொல்லி, செருப்பைத் தூக்கி எறியப் போனான். ஏழை பையன் தடுத்து, 'அப்பா... உனக்கு இப்படி ஒரு செருப்பு தொலைந்தால், உடனேயே வேறு செருப்பு வாங்க சக்தியுண்டு. அவனுக்கு இந்த செருப்பு தொலைந்து விட்டால், அவன் ஆயுட்காலம் முழுவதும் வெறும் காலில்தான் நடக்க வேண்டும். இதல்ல வேடிக்கை. நான் சொல்கிறேன் பாரு! முதலாவது செருப்பைக் கீழே வைத்தாயா? உன் ஜேப்பிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதன் மேலே வை. நாமிருவரும் அந்த மரத்தில் ஒளிந்து கொள்வோம். பார், என்ன வேடிக்கை நடக்கிறதென்று...' என்றான்.இருவரும் ஒளிந்து கொள்ள, விவசாயி வந்து செருப்பை மாட்டிக் கொள்ளப் போக, அதிலே ஒரு ரூபாய் இருப்பதைப் பார்த்தான். எப்படி ரூபாய் வந்ததென்று திகைத்து, சுற்று முற்றும் பார்த்து, ஒருவரையும் காணாதபடியால், ஆண்டவன் தான் கொடுத்தான் என்று பணத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டு, கூப்பிய கரங்களுடன், 'ஆண்டவனே, ஏழைக்கு இரங்கும் கருணாமூர்த்தி...' என்றான்.ஏழைப் பையன், பணக்காரப் பையனை ஒரு இடி இடித்து, 'பார்த்தாயா? உன்னைக் கருணாமூர்த்தி என் கிறான். நீ செருப்பைத் தூக்கி எறிந்திருந்தால் அவன் என்ன பாடுபட்டிருப்பான். இப்போ பாரு... அவனுக்கும் சந்தோஷம்; நமக்கும் ஆனந்தம். இப்படித்தான் வேடிக்கை செய்ய வேண்டும்...' என்று சொல்ல சிரித்துக் கொண்டே போயினர்.— 1949ல் என்.எஸ்.கிருஷ்ணன் பேசிய வானொலி உரையிலிருந்து... பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், எம்.எஸ்.சுப்புலட்சுமி வீட்டிற்கு அடிக்கடி சென்று, சிறிது நேரம் பேசிவிட்டு வருவது வழக்கம். அப்போது, எம்.எஸ்.சுப்புலட்சுமியை 'குஞ்சம்மா' என்றே அழைப்பார் பி.பி.ஸ்ரீனிவாஸ். அதுபோன்று எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரை, 'சீனு' என்று அழைப்பார். பி.பி.ஸ்ரீனிவாஸ் தன் வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், அவரிடம், காலங்களில் அவள் வசந்தம்... என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரும் மெய்மறந்து பாடுவார். அதை ரசித்தபடியே எம்.எஸ்.,சும் அவருடன் சேர்ந்து பாடி மகிழ்வார். 'எத்தனை அழகாய் இந்தப் பாட்டை பாடியிருக்கீங்க... இதைக் கேட்கும் பொழுது என் மனதில் மகிழ்ச்சி கூடுகிறது...' என்று பி.பி.ஸ்ரீனிவாசை மனதார பாராட்டுவார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. —'நீங்காத நினைவுகள்' நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !