உள்ளூர் செய்திகள்

திண்ணை!

வாஜ்பாய் பதவி ஏற்ற பின், எம்.எஸ்.சுப்பு லட்சுமியை பார்க்க அவரது வீட்டிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. ஏற்கனவே, எம்.எஸ்.,சின் வீடு படு சுத்தமாக இருக்கும். தரையை பார்த்து தலை வாரலாம்; அத்தனை சுத்தம்.இருப்பினும், மேலும் சுத்தம் செய்ய, வீட்டில் உள்ளவர்கள் பிசியாக இருந்தனர். இதில், வீட்டில் வேலை செய்வோரும் அடங்குவர். அப்பொழுது எம்.எஸ்.,சின் புது டிரைவரும், வீட்டை சுத்தம் செய்வதில் ஈடுபட்டார்.எம்.எஸ்.,சின் அறையில், ஒரு மூலையில் ஒரு பழைய கைத்தடி தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த டிரைவர், 'வாஜ்பாய் வரும் சமயத்தில், இந்த பழைய கைத்தடி இங்கு எதற்கு?' என்று அதை எடுத்து போய், கார் ஷெட்டின் மூலையில் போட்டு விட்டார். சற்று நேரம் கழித்து, எம்.எஸ்.,அம்மா குளித்து விட்டு தன் அறைக்கு வந்த போது, தன் அறையில் இருந்த கைத்தடியை காணவில்லை என்று, பதட்டப்பட்டார்.எம்.எஸ்., எப்பொழுதும் எதற்காகவும் கோபப்பட மாட்டார். வேலையாட் களிடம், சத்தம் போட்டு கூடப் பேச மாட்டார். அமைதியாக, அனைவரிடமும் அந்த கைத்தடியை பற்றி கேட்டார். வீட்டில் உள்ளோர், அந்த கைத்தடியை மற்ற அறைகளில் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது உள்ளே நுழைந்த டிரைவர், 'எல்லாரும் எதை இப்படி தேடுறீங்க?' எனக் கேட்டார். 'அம்மா அறையில், மாட்டியிருந்த கைத்தடியை காணவில்லையாம். அதைத்தான் தேடுகிறோம்...' என்றனர். 'அப்படியா... அந்த பழைய கைத்தடியை, நான் தான் வாஜ்பாய் வரும் சமயத்தில், அம்மா அறையில் எதற்கு என்று, கார் ஷெட்டில் போட்டு விட்டேன். இதோ எடுத்து வருகிறேன்...' என்று ஓடினார்.எம்.எஸ்.,சுக்கு டிரைவர், கைத்தடியை கார் ஷெட்டில் எடுத்து வைத்திருந்த தகவல் தெரிவிக்கப் பட்டது.கைத்தடியுடன் எம்.எஸ்., அறைக்கு வந்த டிரைவரை பார்த்து, 'ஏம்ப்பா... நீ தூக்கி ஓரமா போட்டியே, அந்த கைத்தடி யாரோடதுன்னு தெரியுமா...' என்று மெல்லிய குரலில் கேட்டார்.'அம்மா எனக்கு தெரியாதும்மா, ரொம்ப பழையதா இருக்கேன்னு, எடுத்து ஷெட்டில் போட்டேன்...' என்று நடுக்கத்தோடு பதில் சொன்னார்.'பரவாயில்லேப்பா... இது ராஜாஜி என் வீட்டுக்கு வந்தப்போ, மறந்து வைத்து விட்டுப் போனது. அதை, நான் பத்திரமா பாதுகாத்து வருகிறேன். அது எனக்கு விலை மதிப்பில்லாததுப்பா...' என்று அமைதியாக சொல்லி, மீண்டும் அந்த கைத்தடியை தன் அறையில் மாட்டி, மகிழ்ந்தார்.ராஜாஜியின் கைத்தடிக்கு இத்தனை மரியாதை என்றால், ராஜாஜி மீது எம்.எஸ்., வைத்திருந்த மரியாதையை சொல்ல வேண்டுமா!—எம்.எஸ்., சுப்புலட்சுமியின் இசைப் பயணம் நூலிலிருந்து...முதலில் தலையை நனைத்து, அதன் பின், உடலில் தண்ணீர் விட்டுக் குளிக்க வேண்டும். மிகக் குளிர்ந்த தண்ணீரிலும், ஆடையில்லாமல் நீர்த்தேக்கங்களிலும் குளிக்கக் கூடாது.உடம்பு ஈரமாக இருக்கும் போது, உடை உடுத்தக் கூடாது.சுத்தமாகத் துவைத்து அழுக்கு அகற்றிய ஆடையை அணிந்து கொள்வதன் மூலம், சபையில் மதிப்பையும், புகழ், ஆயுள், அழகு, மற்றும் சந்தோஷத்தையும் தரும்.பட்டு, கம்பளம், சிவப்பு கலர் ஆடை, வாயுவையும், கபத்தையும் போக்கும். இவை குளிர்காலத்திற்கு ஏற்றவை.காவி நிறமுள்ள ஆடை, புத்தியை வளர்க்கும்; குளிர்ச்சியைத் தரும்; பித்தத்தைப் போக்கும். இது கோடை காலத்திற்கு ஏற்றது. மிக மெல்லிய காவி நிற ஆடை மிகவும் சிறந்தது.வெண்ணிற ஆடை, மங்களகரம். இது குளிரையும், வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும். உடலுக்கு குளிர்ச்சியும் தராது; வெப்பமும் தராது. இதை மழைக் காலத்தில் உடுத்தலாம்.தூங்கும் போதும், வெளியில் செல்லும் போதும், பூஜை செய்யும் போதும் தனித்தனியாகப் துவைத்து உலர்த்திய ஆடைகளை அணிவது நல்லது.— 'தஞ்சை சரஸ்வதி மகால்' வெளியிட்டுள்ள, 'ஆயுர்வேத உபதேசங்கள்' எனும் வெளியீட்டிலிருந்து...***நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !